எம்.கோவிந்தன்: என்றும் இருப்பவர்கள்! - 19

திராவிட மொழிகளில் பேசவும், எழுதவும், படும் இளையமொழி மலையாளம். அது செந்தமிழில் இருந்து உருவானது.
எம்.கோவிந்தன்: என்றும் இருப்பவர்கள்! - 19

திராவிட மொழிகளில் பேசவும், எழுதவும், படும் இளையமொழி மலையாளம். அது செந்தமிழில் இருந்து உருவானது. எழுத்தின் வடிவம் தமிழ் வட்டெழுத்தும், சமஸ்கிருதத்தை எழுத தமிழர்கள் கண்டுபிடித்த கிரந்த எழுத்துகளையும் கொண்டது. எண்ணூறு ஆண்டுகளாக மலையாளம் தனி மொழியாக இருந்து வருகிறது. அது தமிழின் மரபு கொண்டது. சமஸ்கிருதத்தோடு தொடர்புபடுத்திச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.

மலையாள மொழி கவிதை என்பது, அதன் தொடக்கக்காலம் முதல் கற்பனாவாதம் லட்சியவாதம் கொண்டதாக இருந்தது. அது சமஸ்கிருத புராண, இதிகாசங்களில் இருந்து பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். அது நீடித்து வந்தது. ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் ஆங்கிலம் படித்த மலையாளிகள், அரசு உத்தியோகத்தில் இருந்த ஆங்கிலம் படித்தவர்கள் உரைநடையில் தம் மக்கள் வாழ்வைச் சித்திரிக்க ஆரம்பித்தார்கள். பத்திரிகைகள் வெகுஜன பத்திரிகைகளாகவும், இலக்கியப் பத்திரிகைகளாகவும் வெளிவர ஆரம்பித்தன. எழுத்தாளர்கள் எல்லோரும் கவிஞர்கள், இலக்கியவாதிகள்-அதாவது எழுத்துக்காரர்களாகி விட்டார்கள். கட்சியின் சித்தாந்தங்களையே பிரதிபலிக்கும் எழுத்தாளர்கள் அரசியல், சமூக, கலாசார அங்கீகாரம் பெற்றார்கள்.

இலக்கியம் என்பது முழுக்க முழுக்க அரசியல் பிரசாரம் இல்லை. கட்சி சித்தாந்தத்தைப் பரப்புவது கிடையாது. மனிதர்களின் ஆழ்மனத்தைச் சொல்வதும் இலக்கியப் படைப்புகளின் பணிதான் என்று சொன்னவரும் எழுதியவரும் கோதயாத் மணக்கால் சித்திரன் நம்பூதிரி கோவிந்தன் என்னும் எம். கோவிந்தன். அவர் 1919-ஆம் ஆண்டில் மலப்புரத்தில் உள்ள பொன்னானியில் பிறந்தார். ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். நாட்டில் சுதந்திரம் வேண்டி நடைபெற்ற போராட்டங்கள் அவரைக் கவர்ந்தன. இளம் வயதிலேயே போராட்டக்காரராகிவிட்டார்.
சென்னை தென்னிந்தியாவின் தலைநகரமாக இருந்தது. முற்போக்கான அரசியல், சமூகம், பத்திரிகை, சினிமா, எழுத்து என்பனவற்றில் எல்லாம் ஆர்வங்கொண்ட பல மொழி இளைஞர்கள் கூடி கலந்து பேசும் களமாக இருந்தது. எனவே பலரும் சென்னைக்கு வந்தார்கள்.

எம்.கோவிந்தன் தன் இருபத்தைந்தாவது வயதில் சென்னைக்கு வந்தார். சென்னை ஒரு பெரும் நகரமாக இருந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திராவிடக் கட்சி அரசியலுக்கிடையில் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டார். திராவிடச் சிந்தனைகள் அவரை முற்போக்காளராக மாற்றியது. அதோடு சமூகச் சிந்தனையாளரான எம்.என்.ராயின் சித்தாந்தங்களாலும் கவரப்பட்டார். ராய்  இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சியை ஏற்படுத்தியவர்களில் ஒருவர். தன் காலத்தில் மிகச் சிறந்த சமூக, அரசியல் சித்தாந்தவாதியாக இருந்தார்.

அவரால் படித்த பல இளைஞர்கள் கவரப்பட்டார்கள்; அவர்களில் சிலர் சமூக விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கவிஞர்களாக இருந்தார்கள். 

கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியும், எம்.கோவிந்தனும், டாக்டர் ராம் மனோகர் லோகியாவும் நாடறிந்த எம்.என்.ராய் சித்தாந்தவாதிகளாக இருந்தார்கள். ஆனால் எப்பொழுதும் மனிதர்கள் ஒரே சித்தாந்தத்தில் ஊன்றி இருப்பது இல்லை. அரசியல், சமூக நிலைகள் திசை மாற்றிக் கொண்டு போய்விடுகின்றன.  எம்.கோவிந்தன் எழுத்துக்காரனாக இருந்தார். கவிதைகள் எழுதினார். நாவல், சிறுகதைகள் பற்றி விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். அவற்றை வெளியிட சிறு பத்திரிகைகள் ஆரம்பித்தார்.

எம்.கோவிந்தன் சென்னை வானொலியில் வேலை பார்த்தார். மருத்துவரான அவர் மனைவியுடன் அண்ணாசாலையை ஒட்டி உள்ள ஹாரீஸ் தெருவில் உள்ள மாடி வீட்டில் வசித்தார். எப்பொழுது அவர் வீட்டிற்குச் சென்றாலும் தமிழ், மலையாள மொழி எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிற்பிகள் இருப்பார்கள். இலக்கியத்தில் புதுமை கொண்டு வருவது பற்றி பேசிக்கொண்டே இருப்பார். பேசுவதில் அவருக்குத் தணியாத ஆர்வம் இருந்தது. 

வீட்டில் தான் பேசி கொண்டிருப்பார் என்பது இல்லை. எழுத்தாளர்களோடு டீ குடித்துக் கொண்டிருக்கும் போதும், கடற்கரைக்கு நடைபயிற்சிக்காகச் செல்லும்போதும் பேசிக்கொண்டே இருப்பார். தன் பேச்சு மற்றவர்களுக்குக் கேட்கிறதா; புரிகிறதா என்று பார்த்தது இல்லை.

அவருக்குத் தன் காலத்தில் எழுதப்படும் மலையாள கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மீது கடுங்கோபம் இருந்தது. அவற்றை எதிர்ப்பதற்காகவும், மாற்று இலக்கியம் என்றொன்று இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவும் சிறு பத்திரிகைகள் ஆரம்பித்தார். சிறு பத்திரிகைகள் என்பன நீண்ட ஆயுள் கொண்டவை இல்லை. அடிக்கடி நின்று போகக்கூடியவை. ஆனால் வெளிவராமல் போகக்கூடியவை இல்லை. அவர் இலக்கியப் பூர்வமாக மூன்று சிறு பத்திரிகைகள் நடத்தினார். அவற்றில் அதிகம் கவனம் பெற்றது "சம்ஷா'.
சிறு பத்திரிகைகள் என்பது வெறும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் கொண்டது இல்லை. படைப்புப் பூர்வமான நவீன ஓவியங்கள் கொண்டதென்று கருதினார். சென்னை கவின் கலைக்கல்லூரி முதல்வராக இருந்த நவீன ஓவியர் கே.சி.எஸ் பணிக்கரோடு நல்ல பழக்கம் இருந்தது. ஓவியக் கல்லூரியில் படித்த நம்பூதிரி, தேவன், ஹரிதாஸன், நம்பியார், கோபிநாத் என்ற ஒவியர்கள் சித்திரங்களோடு சம்ஷாவைக் கொண்டு வந்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

கோவிந்தனின் கவிதை நூல்களுக்கு தேவன் முகப்போவியம் போட்டுக் கொடுத்தார். நவீன ஒவியங்கள் முதல் முறையாக ஒரு கவிதைத் தொகுப்பில் நவீன ஒவியங்கள் இடம் பெற்று உள்ளன என்று மலையாள பத்திரிகைகள் பாராட்டியதாக ஒரு சமயம் கூறினார்கள். 

அவர் ஐரோப்பிய கம்யூனிஸ்டு நாடுகளுக்கு இலக்கியப் பத்திரிகையாசிரியர், எழுத்தாளர் என்ற முறையில் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். தன் புத்தகங்களைக் காட்டி அவர்களைப் பிரமிப்படைய செய்ய வேண்டுமென்று ஒவியர்கள் முகப்போவியம் வரைந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு. ஹங்கேரி, செக்கோஸ்லோவேகியா, போலந்து நாட்டு எழுத்தாளர்கள் சங்க வரவேற்பில் கலந்து கொண்டார். சில பதிப்பகங்களைப் பார்த்தார். அவர்களிடம் காட்டலாம் என்று எடுத்துக்கொண்டு போன புத்தகங்களை வெளியில் எடுக்கவில்லை. அவர்கள் புத்தகத் தயாரிப்பு அற்புதம். நம்மால் அவர்களை எட்டிப் பிடிக்கவே முடியாது என்று ஒரு சமயம் குறிப்பிட்டார்.

கோவிந்தனுக்குத் தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும். தான் தமிழில் ஒரு சிறுகதை கூட எழுதியிருப்பதாக விட்டல்ராவிடம் தெரிவித்தார். 

அவருக்கு க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, கி.அ.சச்சிதானந்தம், விட்டல் ராவ் என்று பலரும் நண்பர்களாக இருந்தார்கள். தமிழ் நவீன இலக்கியத்திற்கும், மலையாள நவீன இலக்கியத்திற்குமிடையில் நல்ல புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்று கருதினார்.

1970-ஆம் ஆண்டில் சென்னை தேவநேயபாவாணர் நூலகத்தில் ஓர் இலக்கியக் கருத்தரங்கு நடத்தினார். தமிழ், மலையாளம், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளும் கருத்தரங்கில் பேசப்பட்டன.   

மலையாளத்தில் பெரிய எழுத்தாளர்கள் இருக்கலாம். மகத்தான படைப்புகள் வெளிவந்திருக்கலாம். ஆனால், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் படைப்புகள் அப்படியொன்றும் மேலான தரத்தில் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. கேசவதேவ், தகழி சிவசங்கரன் பிள்ளை, எம்.டி.வாசுதேவன்நாயர் எல்லாம் தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடும் தொடர்கதைகளைத் தாண்டி போகவில்லை.

கேரளாவில் பொதுவாக இலக்கிய எழுத்து என்பதும் பத்திரிகை எழுத்து என்பதும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் தமிழில் அப்படி இல்லை. வெகுஜன பத்திரிகை எழுத்து என்று ஒன்று இருக்கிறது. அது பலரால் படிக்கப்படுகிறது. அதனை இலக்கியமாகத் தமிழ் விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அது எல்லா மொழிகளிலும் இருப்பது போல தமிழிலும் இருக்கிறது-என்று கருத்தரங்கில் பேசினேன். என் பேச்சுக்கு சில மலையாள எழுத்தாளர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

ஞானக்கூத்தன் தமிழில் "அம்மாவின் பொய்கள்'  என்ற புதுக்கவிதையை வாசித்தார். அதற்கு நல்ல பாராட்டுக் கிடைத்தது.

"சம்ஷா'  கருத்தரங்கிற்குப் பிறகு அவரும் நானும் ரொம்ப சிநேகிதமாகிவிட்டோம். சில நாட்கள் அவரோடு அண்ணாசாலையிலுள்ள புகாரி ஓட்டலுக்குப் போய் தேநீர் பருகி இருக்கிறேன். "சம்ஷா' மலையாள பத்திரிகைதான். ஆனால் அவர் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் கொண்டதாகவே நடத்தினார். மொழி பெயர்ப்பில் க.நா. சுப்ரமணியம், நஸீம் இஸிக்கில், முல்க்ராஜ் ஆனந்த்  ஆகியோரின் படைப்புக்களை வெளியிட்டார். 

காலம் என்பது ஒரு சித்தாந்தவாதியை அப்படியே வைத்துக் கொண்டு இருப்பது இல்லை. அது கரைந்து விடுகிறது. ஆனால் சித்தாந்தம் கரைந்து போவது இல்லை. கோவிந்தன் சித்தாந்தம் மலையாள இலக்கியத்தை அதன் கற்பனாவாதம், லட்சியவாதம் என்பனவற்றை அதிகமாகவே பாதித்தது. பல புதிய எழுத்தாளர்கள் அகமனம் சார்ந்தது, உளவியல் ரீதியில் எழுத ஆரம்பித்தார்கள். 1969-ஆம் ஆண்டில் ஓ.வி.விஜயன் எழுதிய "கசாக்கின் இதிகாசம்' என்ற நாவல் பலருக்குப் பதில் சொல்லும் படைப்பு தான். அது எழுதப்பட்ட காலத்தை விட நிகழ்காலத்தோடு கோவிந்தன் சொன்னவற்றை மெய்ப்பிக்கும் நாவலாக இருக்கிறது. 

1973-ஆம் ஆண்டில் எம். கோவிந்தனுக்கு, ஜவஹர்லால் நேரு ஃபெலோஷிப் ஆராய்ச்சி செய்வதற்காக வழங்கப்பட்டது.. கங்கை சமவெளியில் இருந்து காவேரி கரை வரையிலான இலக்கிய ஆராய்ச்சி அது. நான் அவருக்கு டெலிபோனில் வாழ்த்துத் தெரிவித்தேன்.

சென்னையில் நடைபெற்ற சினிமா தணிக்கை வாரியம் நடத்திய கருத்தரங்கில் இருவரும் கலந்து கொண்டோம். அவருக்கு அறுபது வயதிற்கு மேலாகிவிட்டது. ஆனாலும் உற்சாகம் குறையாதவராகவே இருந்தார். தணிக்கை முறை என்பது கலைக்கு எதிரானது; சகிக்கவே முடியாது என்று வாதிட்டார்.

1989-ஆம் ஆண்டில் கோவிந்தன் குருவாயூரில் காலமானார். சென்னை கேரள சமாஜில் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் கலந்து கொண்டு நண்பருக்கு அஞ்சலி தெரிவித்தேன். 

(அடுத்த இதழில் ஜெயகாந்தன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com