சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 70: மீனாட்சி திருக்கல்யாணம்

"என் வாழ்க்கையில் மிகப் புத்திசாலித்தனமான சாதனை என்பது என் மனைவியை என் திறமையால் இணங்க வைத்து மணந்து கொண்டதே ஆகும்.'
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 70: மீனாட்சி திருக்கல்யாணம்


"என் வாழ்க்கையில் மிகப் புத்திசாலித்தனமான சாதனை என்பது என் மனைவியை என் திறமையால் இணங்க வைத்து மணந்து கொண்டதே ஆகும்.'

- வின்ஸ்டன் சர்ச்சில் 

பாண்டியன் எக்ஸ்பிரஸ் வேகம் பிடித்து ஓடிக் கொண்டிருந்தது. இரவு ஏழு மணிக்கே புறப்பட்டுவிடும் அந்த ரயிலில், சாப்பிடுவதற்காக என் பெரிய தாயார் ராணி அம்மையார், தன் கைகளால் தயாரித்துக் கொடுத்திருந்த புளியோதரையையும், இட்லி பொடியால் அபிஷேகம் செய்யப்பட்ட இட்லிகளையும் கபளீகரம் செய்து கொண்டிருந்தோம். எட்டு வயது சிறுமியான எனக்கு மதுரை போகிறோம் என்பது மட்டுமே புரிந்திருந்தது, அந்த நகரின் மேன்மைகளையும், அங்கே இருக்கும் உலகப் புகழ்மிக்க மீனாட்சி திருக்கோயிலையும் பற்றித் தெரிந்திருக்க நியாயம் இல்லை. 

ஆனால், ஒன்றும் புரியாத வயதிலும், மீனாட்சி கோயிலின் முதல் தரிசனம் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது. அது மட்டுமா, முறுக்கு, வெல்ல வடை, போளி, அதிரசம் என்று வாய்க்கு ருசியான பலகாரங்கள், சுங்கிடி பாவாடை என்று என்னை மயக்கிய ஐட்டங்கள் அங்கே ஏராளம். இன்றைய நிலையில், மதுரையையும், மீனாட்சி திருக்கோயிலையும் எண்ணிக்கையில் அடங்கா வகையில் தரிசித்து விட்டேன். அதுமட்டுமா சித்திரைத் திருவிழாவின் ஹைலைட்டான மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்க்கும் பாக்கியத்தையும் பெற்றுவிட்டேன்.

மதுரை, 2500 ஆண்டுகள் பழமையான நகரம். திருவாலவாய், சிவராஜ தானி, பூலோக கைலாயம், கடம்பவனம், நான்மாடக்கூடல், சிவநகரம், துவாதசாந்தத்தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம், இவ்வளவு பெயர்களையும் தன்னகத்தே கொண்டது மதுரை நகரம்.

பிறகு எப்படி மதுரை என்று அழைக்கப்படுகிறது, என்பதற்கு திருப்பாற்கடலைக் கடைந்தபோது நாகம் உமிழ்ந்த விஷத்தை இறைவன் அமுதமாக மாற்றி மதுரமாக்கினமையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றது என்பர்.

மதுரைக்குச் சிறப்புச் செய்வது மீனாட்சி அம்மனின் திருக்கோயிலாக இருக்கிறது. இங்கே உள்ள தெருக்களுக்குத் தமிழ் மாதங்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருப்பது இதற்கு மேலும் சிறப்பூட்டுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களைத் தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், இதற்கு அடுத்தது ஆவணி வீதிகள். இதைத் தாண்டி வெளியில் வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது. மன்னர் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில் நடைபெறும்.

மதுரையில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. எட்டுக் கோபுரங்கள், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்தக் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இங்கேதான் அம்பாள் மீனாட்சி கொலுவிருக்கிறாள். இவரது விக்ரகம் மரகதக் கல்லால் ஆனது. ஆகையால்தான் மரகதவல்லி என்ற பெயரும் இவளுக்கு உண்டு.

பச்சை தேவி, தடாதகை, அபிசேகவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள்,  கோமகள், சுந்தரவல்லி, பாண்டிபிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுதிமகள், அங்கயற்கண்ணி என்ற எண்ணற்ற பெயர்கள் மீனாட்சிக்கு உண்டு.

இதில் மும்முலைத் திருவழுதி மகள் என்ற பெயர் ஏன் வந்தது?

பாண்டிய மன்னன் மலையத்துவசனுக்கும், அவன் மனைவி காஞ்சனமாலாவுக்கும், புத்திரப்பேறு இல்லாமல் இருந்தது. குழந்தையை வேண்டி அவர்கள் செய்த யாகத்தில்,  அழகான பெண் குழந்தை நெருப்பிலிருந்து வெளிவந்தது. குழந்தைக்கு, மூன்று மார்பகங்கள் இருப்பதைக் கண்டு மன்னனும், மகாராணியும் கவலையுற்றனர். அப்பொழுது அசரீரி ஒன்று, இந்த குழந்தை சக்தியின் மறு உருவம், இவள் வளர்ந்து தனக்கு மணவாளனாக வருபவனைக் கண்ட மாத்திரத்தில் அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்றது. இதனால்தான், மும்முலைத் திருவழுதி மகள் என்ற பெயர் மீனாட்சிக்கு ஏற்பட்டது.

தந்தை மலையத்துவசன் தன் மகள் மீனாட்சிக்கு, எல்லாவிதமான போர் பயிற்சிகளையும் அளித்து அவளை ஒரு வீர மங்கையாக வளர்க்கிறான். தக்க சமயத்தில் தன் ஒரே மகளுக்குப் பட்டாபிஷேகம் செய்ய விரும்புகிறான். ஆனால் மீனாட்சிக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால், அவள் போர்புரிந்து, வெற்றி பெற்று தன் வீரத்தை நிலைநாட்ட வேண்டும்.

மீனாட்சி என்ற அந்த வீர மங்கை வடக்கு நோக்கி பயணிக்கிறாள். போர்புரிந்து, பல மன்னர்களை வெற்றிகொண்டு,  ஆண்ட நாடுகளைத் தன் வசமாக்குகிறாள். கடைசியாகத் திருக்கயிலாயத்தை மீனாட்சி அடைகிறாள். வீரமங்கையாக ஆவேசத்துடன் போர்புரிய, வந்தவளின் முதல் பார்வை, சிவபெருமானின் மீது பட்டதுமே, அவளுடைய மூன்றாவது மார்பகம் மறைந்துவிடுகிறது.

நாணத்துடன் தலைகவிழ்ந்து, பெண்மையின் முழு உருவமாக, தன்னுடைய வாள், வில், மற்றும் அம்புகளைக் கைநழுவவிட்டு, கன்னங்கள் சிவக்க நின்ற மீனாட்சியை, சிவபெருமான் அன்புடன் நோக்கி சொல்கிறார், "மீனாட்சி, நீ மதுரைக்குத் திரும்பி செல், நான் எட்டு நாட்களில் அங்கே வந்து உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்.'

தன் மனதைக் கொள்ளை கொண்டவனின் ஆணைப்படி மீனாட்சி மதுரைக்குத் திரும்புகிறாள்.

மீன் போன்ற கண்களை உடையவள் என்பதினால் மீனாட்சி என்று பெயர் பெற்றவள். தன்னுடைய முட்டைகளை மீன் பார்வையாலேயே தன்மயமாக்குவதுபோல, தன் தேசத்து மக்களை இமைக்காத கண்களால் நோக்கிக் காப்பவள். அந்த எட்டு நாட்களும் விழிகள் மூடாமல் தன் தலைவனுக்காகக் காத்திருந்தாள், தூக்கத்தைத் தொலைத்திருந்தாள். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com