மர்மக் கதை 2-ஆம் பாகம்
By DIN | Published On : 09th June 2019 12:00 AM | Last Updated : 09th June 2019 12:00 AM | அ+அ அ- |

1983-ஆம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளிவந்த படம் "ஆத்தோர ஆத்தா'. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக "சூப்பர் ஹீரோயினி' என்ற படம் உருவாகி வருகிறது. ஆறுகளால் சூழப்பட்ட அழகிய கிராமத்தில் மர்ம கொலைகள் நடக்கின்றன. திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே குறி வைக்கப்படுகின்றனர். காவல்துறை விசாரிக்க இறங்கும் போது, அவ்வூர் மக்கள் அவர்களை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். ஆற்று ஓரத்திலுள்ள எல்லை சாமி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என நம்புகின்றனர். காவல்துறை ஊருக்குள் வருவது தெய்வக் குற்றம் என நம்புகின்றனர்.
இதனால், போலீசார் பூசாரி உள்ளிட்ட மாற்று வேடங்களில் ஊருக்குள் நுழைகின்றனர். இறுதியாக அந்த ஊரிலுள்ள மருத்துவர் ஒருவர்தான் பெண்களை நாசமாக்கி கொலை செய்கிறார் என்பது தெரிகிறது. அவர் ஏன் அதை செய்தார். என்ன காரணம் என்பதுதான் கதை. மாங்காடு ராமச்சந்திரன் தயாரித்து இயக்கி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார். ஷிர்டி சாய் ஸ்கிரீன் தயாரிப்பு. இங்கிலாந்து நடிகை ரோஸி நடிக்கிறார். கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய புதுமுகங்களுடன் போண்டா மணி, நெல்லை சிவா, முத்துக்காளை, கிங்காங் ஆகியோர் உள்ளனர். ஒளிப்பதிவு: டி.மகிபாலன், இசை: நேமிநாதன். பெங்களூரு, ஓசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.