இலக்கியங்களுக்கு இசையமைத்தவர்
By DIN | Published On : 23rd June 2019 08:59 AM | Last Updated : 23rd June 2019 08:59 AM | அ+அ அ- |

ஏழு வண்ணக் கொடி பறக்குது . அதில் எங்கள் எண்ணம் குடியிருக்குது' என்ற பாடல் வரிகள் திருச்சி வானொலியைத் தொடர்ந்து கேட்பவர்களுக்கு நினைவுக்கு வரும். இந்தப் பாடலை எழுதியவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன். இதற்கு இசையமைத்தவர் நெல்லை ஆ.சுப்பிரமணியன். இது மட்டுமல்ல இது போன்ற பல இலக்கியங்களுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் சுப்பிரமணியன்.
நெல்லை ஆ.சுப்பிரமணியன் செட்டிநாட்டுப் பகுதியான பள்ளத்தூரில் பிறந்தவர். திருச்சி வானொலியில் சுப்பிரமணியன் என்ற பெயரில் ஏராளமானவர்கள் பணியாற்றியதால் தன்னுடைய முன்னோர்களின் பூர்வீகமான நெல்லையைத் தன்னுடைய பெயருடன் இணைத்துக் கொண்டார். பிரபல வீணை வித்துவான் காரைக்குடி சாம்பசிவத்தின் சீடர் கொத்தமங்கலம் கணபதி சுப்பிரமணியத்திடம் இசை பயின்றவர். இலக்கியங்களுக்கு இசையமைத்த அனுபவங்கள் பற்றி அவரிடம் பேசிய போது சொன்னார்:
""திருச்சி வானொலியில் 1979-ஆம் ஆண்டு முதல் 1993-ஆம் ஆண்டுவரை இசையமைப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அதற்கு முன்பாக 1949-ஆம் ஆண்டு முதல் 1978-ஆம் ஆண்டு வரை திருச்சி வானொலியில் பங்கேற்புக் கலைஞராக இருந்தேன். பல்வேறு இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் உண்டு. இசை சித்திரங்கள், இசை நாடகங்கள்,. சர்வ சமய நல்லிணக்கப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், சேர்ந்திசை எனப் பல நிகழ்ச்சிகளின் வாயிலாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். மணிமேகலை காவியம், மதுரை வானொலி நிலையம் தயாரித்த "சிவகாமியின் சபதம்' 56 வார நெடுந்தொடருக்கு இசையமைத்துளேன்.
திருக்குறளின் 133 அதிகாரங்களையும் அதில் இடம் பெற்றுள்ள 1330 குறட்பாக்களையும் இசையமைத்துப் பாடினேன். திருச்சி வானொலியில் "கீர்த்தனாஞ்சலி' என்ற பெயரில் தியாகராசரின் கீர்த்தனைகளுக்கு விளக்கம் சொன்ன முறை இசையார்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. அது போல் " திருமுறைத் தேனமுதம்' என்ற நிகழ்வின் வாயிலாகப் பன்னிரு திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முதன்மையான இசைப்பாடல்களை ஓதுவார் தருமபுரம் சுவாமிநாதன் குரலில் ஒலிக்கச் செய்தேன். "சந்தத் தமிழ்ப்புனல்' என்ற தலைப்பில் திருப்புகழ்ப் பாடல்களுக்கு இசையமைத்து மக்களுக்கு இசைவிருந்து படைத்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகும்.'' என்றார் சுப்பிரமணியன். வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் இவருடைய நெருங்கிய நண்பராவர்.
- ராஜன்