என்றும் இருப்பவர்கள்! 21 - சா. கந்தசாமி

மனிதர்கள் புலம் பெயர்வதில் பிரியம் கொண்டவர்கள். எனவே சொந்த விருப்பப்படியும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளாலும் நாட்டில் நிகழும் போர், வன்முறைகளாலும் இன்னொரு
என்றும் இருப்பவர்கள்! 21 - சா. கந்தசாமி

சுத்தானந்த பாரதியார்
எப்படிப் பாடினரோ-அடியார்
அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையும்
அருள் மாணிக்க வாசகரும்
- சுத்தானந்த பாரதியார்
மனிதர்கள் புலம் பெயர்வதில் பிரியம் கொண்டவர்கள். எனவே சொந்த விருப்பப்படியும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளாலும் நாட்டில் நிகழும் போர், வன்முறைகளாலும் இன்னொரு இடத்திற்குப் புலம் பெயர்ந்து செல்கிறார்கள். மனித சரித்திரம் என்பது புலம் பெயர்ந்த சரித்திரமாகவே இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து பலரும் வெளிநாடுகளுக்குக் கடல் கடந்து புலம் பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். அதுபோல நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் கூட்டமாகவும், தனி ஆளாகவும், குடும்பமாகவும் புலம் பெயர்ந்து வந்திருக்கிறார்கள். புலம் பெயர்வு மூலம் கலாசாரத்திலும், உடையிலும், உண்ணும், உணவிலும் பேசும் மொழியிலும் வாழ்க்கைச் சித்தாந்தத்திலும் பலவிதமான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டிற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆந்திராவில் இருந்து தெலுங்கு மொழி பேசிக் கொண்டு வந்து சிவகங்கையில் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர் சுத்தானந்த பாரதியார், என்னும் வேங்கட சுப்பிரமணியன்.
"தமிழில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் எழுதி இருக்கிறேன்' என்று குறிப்பிடப்படும் அவர் முறையாகக் கல்வி கற்காதவர். அவர் பன்மொழி படிப்பு என்பது அவராகவே கற்றுக் கொண்டது. அவர் பன்மொழி புலவர் இல்லை. இலக்கியவாதி. இலக்கியம் படிக்கவும், எழுதவுமே அவர் ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்க மொழிகளை கற்றுக் கொண்டார். தெலுங்கும், தமிழும் அவருக்கு தாய்மொழியாக இருந்தன. இந்துஸ்தானி, மலையாளம் கற்றுக் கொண்டார். எழுதுவதில் அவருக்குப் பேரார்வம் இருந்தது.
சிறுவயதில் சில காலம் நூலகராகப் பணியாற்றினார். அதனால் நிறைய படிக்க வாய்ப்பு பெற்றார். புத்தகம் என்பதின் மகத்துவத்தை அறிந்து கொண்டார். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அது நிறைவு தரும் வேலையாக இருந்தது. கற்பதும் கற்றுக் கொடுப்பதுமாக இருந்தார். ஆனால், இயல்பிலேயே அவர் எதிலும் நிலைத்து இருப்பவராக இல்லை. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லக்கூடியவராக இருந்தார்.
இளம் வயதில் வீட்டை விட்டுத் துறந்து வெளியில் வந்தார். தேச சேவையில் நாட்டம் ஏற்பட்டது. தேச சேவை செய்ய குடும்பம் இடையூறாக இருக்குமென்று அவருக்குப்பட்டது. எனவே சந்நியாசியாகிவிட்டார். ஆனால் தனக்கென்று ஒரு பீடத்தை அமைத்துக் கொண்டு சீடர்களைச் சேர்த்து கொள்ளவில்லை.
அவர் பெயர் பெற்ற மடங்களுக்குச் சென்றார். அவற்றில் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் அவரைக் கவர்ந்தது. அரவிந்தரையும், அன்னையையும் தரிசித்துவிட்டு, தன்னை ஆசிரமத்தோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார். தான் சந்நியாசியானாலும், அவர்களில் இருந்து வேறுபட வேண்டும் என்பதைக் காட்டுவது போல மெளன விரதம் மேற்கொண்டார். அதாவது பேசாமல் பேசுவதில்லை என 1925- ஆம் ஆண்டு முதல் 1950- வரை முடிவு செய்து கொண்டார். பேசவில்லையே தவிர நிறைய படிக்க, எழுத மொழி பெயர்க்க ஆரம்பித்தார். அவற்றை புத்தகங்களாகவும் வெளியிட்டார். 
திருக்குறளை மொழி பெயர்த்தார். அவரின் மொழி பெயர்ப்புகளில் பிரபலமானது பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய "ஏழைப்படும்பாடு', "இளிச்சவாயன்', தமிழில் வெளிவந்து வெற்றிப் பெற்ற படமாக இருந்தது. இரண்டு நாவல்களையும் மூர் மார்க்கெட் பழைய புத்தகக்கடையில் வாங்கிப் படித்தேன். சுத்தானந்த பாரதியாருக்கு ஒரு வளமான தமிழ்நடை இருந்தது. அது நாவலைப் படிக்க வைத்தது." ஏழைப்படும் பாடு' மனதில் பதிந்து போன நாவலாக இருந்தது.
முப்பதாண்டுகள் சென்று விட்டன. சென்னை வானொலி நிலைய இயக்குநராக துறைவன் (கந்தசாமி) இருந்தார். அவர் கவிஞர், நாடகங்களும் எழுதக்கூடியவர். அவரிடம் கேரள சாகித்ய அகாதெமி, நவீன தமிழ் இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை கேட்டு இருந்தது. அதற்கு மொழி பெயர்ப்பு பற்றி எழுத பல இடங்களிலும் சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்த "ஏழைப்படும் பாடு', "இளிச்சவாயன்' நாவல்களைத் தேடியிருக்கிறார்; கிடைக்கவில்லை.
சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநராக இருந்த ஏ.நடராஜனிடம் இரண்டு நாவல்களை பற்றியும் விசாரித்து இருக்கிறார். அவரோ என்னிடம் கேட்டார். 
"நான் படித்து இருக்கிறேன். ஆனால் கைவசமில்லை. சுத்தானந்த பாரதியாரின் யோக சமாஜம் அடையாரில் இருக்கிறது. கொஞ்சம் பழக்கம் உண்டு. நேரில் சென்றால் பேசி வாங்கிக் கொண்டு வந்துவிடலாம்'' என்றேன்.
ஞாயிற்றுக்கிழமை காரில் யோக சமாஜம் சென்றோம். இரும்பு கதவைத் திறந்தேன். தோட்ட வேலைப் பார்த்துக்கொண்டிருந்த கருத்த இளைஞர் ஒருவர், அவசர அவசரமாக முன்னே வந்து "நீங்கள் யார்? யாரைப் பார்க்க வேண்டும்'' என்றார். 
"இவர் ஏ.நடராஜன். வானொலி நிலைய உதவி இயக்குநர், பாரதியாரைப் பார்க்க வேண்டும்'" என்றேன்.
"நீங்கள் யாரோ?'"
"இவர் எழுத்தாளர் சா.கந்தசாமி" என்றார்'' ஏ.நடராஜன்.
"ஓ! நீர்தான் "சாயாவனம்' நாவல் எழுதியவரோ எங்கள் நாட்டில் உங்கள் நாவலுக்கு நல்ல பெயர்''
"நான் "நீங்கள்?'"என்றேன்.
"நான் கவி. சிலோன் விஜேந்திரன்'' என்று சொல்லியபடியே உள்ளே அழைத்து சென்றார். பின்னால் இருந்து "ராவணா யார் இவர்கள்?" என்று கேட்டுக் கொண்டே சுத்தானந்த பாரதியார் வெளியில் வந்தார். இடுப்பில் காவி வேட்டியும், தலையில் பச்சைத் துண்டும் கட்டிக்கொண்டு இருந்தார்.
"எழுத்தாளர்கள் தங்களைப் பார்க்க வந்து இருக்கிறார்கள்''" என்றார் சிலோன் விஜேந்திரன். 
"நல்லது அமருங்கள்'" என்று சொன்னார்.
விஜேந்திரன் ஒரு கோரைப் பாயை எடுத்து விரித்தார். வலது பக்கத்தில் ஒரு மரப்பலகையை எடுத்து வைத்தார். அதில் பாரதியார் அமர்ந்து கொண்டார்.
எங்கள் இரண்டு பேர்களையும் தனித்தனியாக என்ன படித்து இருக்கிறீர்கள்? என்ன எழுதி வெளியிட்டு இருக்கிறீர்கள்? என்று வினவினார்.
"தாங்கள் எழுதி, டி.கே. பட்டம்மாள் பாடிய "எப்படித்தான் பாடினாரோ' என்ற பாடலை அடிக்கடி ஒலிபரப்புகிறோம். பல நேயர்கள் கடிதம் எழுதுகிறார்கள்''" என்றார். நடராஜன். 
"நல்ல பாட்டுதான். நான் கூட சில சமயங்களில் கேட்டு சந்தோஷப்பட்டிருக்கிறேன். தமிழுக்கு நிறைய இசைப்பாட்டுகள் வேண்டும். வித்வான்கள் கச்சேரியில் பாட வேண்டும். தமிழ்நாட்டில், தமிழ்ப்பாட்டு பாட மாட்டேன் என்று சங்கீத வித்வான்கள் முரண்டு பிடிப்பது சரியில்லை''" என்றார். 
அப்புறம் என் பக்கம் திரும்பி தலையை அசைத்தார்.
"நாவல்கள், சிறுகதைகள் எழுதுகிறேன்" என்றேன்.
"நான் மொழி பெயர்த்துள்ள அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய "ஏழைப்படும் பாடு' படித்து இருக்கிறாயா? நாவல் என்றால் அது. எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். அது ஐரோப்பாவில் பல மொழிகளில் வந்திருக்கிறது."
"நாங்களும் அது விஷயமாகத்தான் வந்திருக்கிறோம். எங்கள் இயக்குநர் கேரள சாகித்ய அகாதெமிக்கு, தமிழ் இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறார். அவர் உங்கள் "ஏழைப்படும் பாட்டை' படித்து இருக்கிறார். இப்பொழுது இன்னொரு முறை படித்துவிட்டு கட்டுரையெழுத ஆசைப்படுகிறார். பல இடங்களிலும் நூல்களைத் தேடியும் "ஏழைப்படும் பாடு' கிடைக்கவில்லை. அதனால் தான் தங்களைத் தேடி வந்தேன்.''
"அது நல்ல செய்தி தான். ஆனால், சென்னையை விட்டுவிட்டு, சிவகங்கைக்குப் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். புத்தகங்கள் எல்லாம் கட்டி சிவகங்கைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். ஆகையால் உங்களுக்கு கிடைக்காது. ஆறு மாதங்களுக்குப் பிறகு புது பதிப்பு வரும். வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள்.''" என்று எழுந்து எங்களுக்கு விடை கொடுத்தார்.
"ராவணன்' என்று அழைக்கப்பட்ட சிலேன் விஜேந்திரன் கார் வரையில் எங்களை வந்து அனுப்பி வைத்தார். 
1982-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எழுத்தாளர்கள் தின விழாவிற்கு வந்திருந்தார். அவரும் க.நா.சுப்ரமணியம் ஒரே அறையில் மாடியில் தங்கி இருந்தார்கள்.
அவரோடு இரவு பதினொரு மணி வரையில் இருந்தேன். சுத்தானந்த பாரதியார் பேசினார். க.நா.சுப்ரமணியமும், நானும் கேட்டுக் கொண்டே இருந்தோம். அவரிடம் சொல்ல பல விதமான விஷயங்கள் இருந்தன.
"நான் பறக்கிறவன். அதாவது மனத்தால் பறந்து கொண்டே இருக்கிறேன். எனக்கு எந்த ஊரும் நாடும் சொந்தமில்லை. எல்லோரும் சுகமாக இருக்க வேண்டும். அதைப் பார்க்க வேண்டும். அதற்காகவே பறக்கிறேன்- நான் இந்த ஆயுளில் ஆயிரக்கணக்கானவர்களைப் பார்த்திருக்கிறேன். பேசிப் பழகியிருக்கிறேன். ஆனால் நான் எங்கும் கால் பதித்து நின்றதில்லை. அரவிந்தரை தரிசித்தேன். அன்னையை வணங்கினேன். பாரதியாரோடு பழகினேன். ரமண மகரிஷியை சென்று பார்த்தேன். கிரிவலம் வந்தேன். சேரன்மாதேவி சென்று வ.வே.சு. ஐயர் நிறுவிய பாரத மாதா ஆசிரமத்தில் சில காலம் இருந்தேன். எங்கும் என்னால் காலூன்றி நிற்க முடியவில்லை.''
"மனிதர்கள் வாழ்க்கை அவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதன் போக்கிலே சென்றால் கொஞ்சம் தெரியும். அதிலே நிறைவுற்று வாழ வேண்டும்.''
"பாரதியார், மணி பதினொன்றாகிவிட்டது. அவர் படுக்கப் போக வேண்டும்.''
ஆம்.. ஆம்... தூங்க வேண்டும். காலையில் வாருங்கள். "நாம் தில்லையில் ஆடும் நடராஜனை தரிசித்து விட்டு வருவோம்'" என்றார்.
நான் எழுந்து இருவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு, அறையை விட்டு வெளியில் வந்தேன்.
நிலவு காய்ந்து கொண்டிருந்தது.
(அடுத்த இதழில் தி.ஜ.ர)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com