சிவன் கோயில் கட்டிய குப்லாய்கான்
By | Published On : 23rd June 2019 09:27 AM | Last Updated : 23rd June 2019 09:28 AM | அ+அ அ- |

சீனர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுவித்த போதிதர்மன் போன்ற பலர் பற்றி அரியத் தகவல்கள் இன்னும் ஏராளம் வெளிவராமல் உள்ளன. அப்படிப்பட்ட தகவல்களில் ஒன்றுதான் மங்கோலியர்கள் சைவ மதத்தையும், சிவனையும் விரும்பி உள்ளனர். அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
12-ஆம் நூற்றாண்டில் சிறு சிறு இன குழுக்களாக பிரிந்திருந்த மங்கோலியர்களை ஒன்றிணைத்து, வலிமை வாய்ந்த படையை உருவாக்கி, பல நாடுகளின் மீது படையெடுத்து உலகின் மிக பெரும் நிலப்பகுதியை ஆண்டான் மங்கோலிய சக்கரவர்த்தி செங்கிஸ்கான். தனது அண்டை நாடான சீனாவின் மீது படையெடுத்து அந்த நாட்டை வென்று ஆட்சி புரிந்தான். வீரமிகுந்த மன்னனாக இருந்தாலும் ஆன்மீகத்திலும் மதங்களின் கோட்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தான்.
பேரரசன் செங்கிஸ்கானின் விருப்பத்திற்குரிய இளைய மகனான தொலுய் என்பவரின் மகன்தான் குப்லாய்கான். சிறுவயது தொட்டே, வில் எய்துவதிலும், குதிரை ஏற்றத்திலும் திறன் படைத்தவராக குப்லாய்கான் இருந்தார். பௌத்த மதத்தை ஆழ்ந்து படித்தார். குப்லாய்கானுக்கு மங்கோலியப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த வடசீனாவின் ஒரு சிறு பகுதியை, ஆட்சி செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. குப்லாய்க்கு 30 வயதாக இருக்கும்போது, அவரது மூத்த சகோதரர் மாங்கே, மங்கோலியப் பேரரசின் கானாக (பேரரசனாக) பொறுப்பேற்றார். இதையடுத்து, வடசீனா முழுவதையும் ஆட்சி செய்யும் பொறுப்பை குப்லாய்க்கு, மாங்கே வழங்கினார்.
இவன் தன் ஆட்சிக் காலத்தில் சீன தேசத்தில் வியாபார நிமித்தமாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களின் மூலமாக சைவ மதத்தின் அருமைகளை தெரிந்து கொண்டு, தமிழர்களின் உதவியுடன் சிவன் கோயிலை எழுப்பினான் குப்லாய்கான். இக்கோயில் கட்டப்பட்டதை குறித்த 13-ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று சீனாவில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்த்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இங்கு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்செள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகே சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்ல வேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து, மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்த வழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமல்லாமல். வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான "திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்' எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சூவன்லிசெள துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகங்களில் குப்லாய்கான் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல்நலத்திற்காக இந்த கோயில் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சித்திரா பெளர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260-ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான்.
இவன்தான் பெய்ஜிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவனுடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான். புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான்.
தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான கோயில் இதுவாகும்.
-ராஜன்