நடிப்புக்கு அகராதி நம்பியார்

2019 எம்.என். நம்பியாருக்கு நூற்றாண்டு. இந்திய திரைப்படங்கள் குறிப்பாகத் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் நீண்டகாலம் ரசிகர்களின் மனதிலும் மக்கள் மனங்களிலும் குடிகொண்டிருப்பவர்கள் கதாநாயகன், நாயகி மற்றும்
நடிப்புக்கு அகராதி நம்பியார்

2019 எம்.என். நம்பியாருக்கு நூற்றாண்டு. இந்திய திரைப்படங்கள் குறிப்பாகத் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் நீண்டகாலம் ரசிகர்களின் மனதிலும் மக்கள் மனங்களிலும் குடிகொண்டிருப்பவர்கள் கதாநாயகன், நாயகி மற்றும் இசையமைப்பாளர்கள் தான். ஆனால், தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் எதிர்மறை நாயகனாகவும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூப்பித்தவர் மஞ்சநேரி நாரயணன் நம்பியார் என்கிற எம்.என். நம்பியார். தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதித்த வில்லன் நடிகர். அவர் கையைப் பிசைந்து, கண்களை உருட்டி, கழுத்தை பக்கவாட்டில் அசைத்து நாயகனை அல்லது நாயகியை தன்னுடைய அதிரடிக்குரலால் மிரட்டும் போது மக்களின் கரவொலியால் தியேட்டரே அதிரும். தன்னுடைய சினிமா வாழ்வில் பிற்பகுதியில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர். இந்தியத் திரை உலகில் எழுபது ஆண்டுகள் பன்முக நடிப்பால் கோலோச்சியவர். தலைமுறைகள் கடந்தாலும் வில்லன்களுக்கெல்லாம் நாயகனாகவும் வில்லத்தனமான நடிப்புக்கு அகராதியாகவும் இருப்பார். மிமிக்கிரி கலைஞர்களும் நம்பியார் மாதிரி பேசி மக்களை மகிழ்வித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எம்.என்.நம்பியார் சிறு வயதிலேயே தமிழகத்தின் மேற்குப் பகுதியான ஊட்டிக்கு வருகிறார்.  அங்குச் சிறிதுகாலம் கல்வி, பின்பு  நாடகம் நடத்த வந்திருந்த நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனியான "மதுரை தேவி  பால வினோத சங்கீதசபா' வில் இணைகிறார். நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது, நவாப் ராஜமாணிக்கம் தயாரித்த "பக்த ராம்தாஸ்' என்ற நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்கிறார்கள். இப்படம் மும்பையில் உள்ள ரஞ்சித் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அதில் மந்திரி மாதண்ணா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நம்பியார். இது தான் நம்பியாரின் கன்னிப்படம்.  

அதன்பின்பு, அதே நாடகக் கம்பெனி தயாரித்த "இன்பசாகரன்' படம் முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில் ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தால் படம் வெளிவரவில்லை. இரண்டு படங்கள் நடித்த நிலையில் மூன்றாவது படத்தில் பத்தாண்டுகள்  கழித்துதான் நடித்தார். 

திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாலும், நாடகத்தில் வேஷம் கட்டிக் கொண்டு தான் இருந்தார். தன்னை நாடகத்தில் இன்னும் மெருகேற்றும் முயற்சியாக நவாப் ராஜமாணிக்கம் குழுவிலிருந்து விலகி சக்தி கிருஷ்ணசாமியின் "ஸ்ரீ சக்தி நாடக சபா' வில் சேருகிறார். இவர்களின் புதிய நாடகமான "கவியின் கனவு' என்ற புதிய நாடகம் நாகப்பட்டிணத்தில் மேடையேற்றப்பட்டது.

இந்தப் புரட்சிகரமான தேசிய வரலாற்று நாடகத்தில் எம்.என்.நம்பியார் சர்வாதிகாரியாக நடித்திருப்பார். நாடகத்தைப் பார்க்க வந்த அவ்வை டி.கே சண்முகம் நாடகத்தில் முடிவில் மேடையில் நம்பியாரின் திறமையான நடிப்பை பாராட்டியதோடு, "" வட இந்திய திரைப்பட நடிகர் சந்திரமோகனை நினைவூட்டியது'' என்றார். 

நம்பியார் "திகம்பரசாம்பியார்' "கல்யாணி', "கஞ்சன்', "நல்லதங்கை' ஆகிய நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பார். "திகம்பரசாமியார்'யில் செவிட்டு மந்திரவாதி, முகமதிய தன்வந்திரி, வெற்றிலை வியாபாரி, நாதஸ்வர வித்வான், மைனர், தபால்காரர், குடுகுடுப்பைக்காரன் என்று 11 கதாபாத்திரங்களிலும், "கல்யாணி' யின் முற்பகுதியில் அரைப் பைத்தியமாகவும் பிற்பகுதியில் பைத்தியம் தெளிந்த மூர்த்தியாகவும், கஞ்சனில் கப்பல் விபத்தில் பெற்றோர் மற்றும் தங்கையை இழந்து ஊர் சுற்றும் அனாதை வேலப்பனாகவும், "நல்லதங்கை'யில் படிக்காத விவசாயி கைலாசமாகவும் நடித்துத் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 

திரை உலகின் முற்பகுதியில்  "கவிதா', "வித்யாபதி', "ராஜகுமாரி', "மர்மயோகி', "மோகினி' ஆகியப் படங்களிலும் பிற்பகுதியில் "தூறல் நின்னு போச்சு', "எஜமான்' போன்றப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். ஆரம்பகாலத் திரைப்படங்களில் நகைச்சுவை வேஷங்களில் நடித்த நம்பியாருக்கு ஜோடியாக எம்.எஸ்.எஸ்.பாக்கியம்  நடித்திருப்பார். இருவரும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கலக்கியிருப்பார்கள். 

கதாநாயகனாவும், நகைச்சுவை நடிகராகவும் நிலைத்து நிற்க  முடியுமா என்று நம்பியார் நினைத்திருப்பார் போலும். எனவே வில்லனாக மாறுகிறார். எம்.ஜி.ஆருடன் நடித்த "சர்வாதிகாரி' படத்திற்குப் பிறகு முழு நேர வில்லனாகவே மாறுகிறார்.  நம்பியாரின் சமகாலத்தில் டி.எஸ்.பாலையா, பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ்.மனோகர் போன்ற வில்லன் நடிகர்களும் நடித்துக் கொண்டிருந்தாலும் வில்லன் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்து பாதை போட்டவர் எம்.என்.நம்பியார். 

எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு மட்டுமல்லாமல் மற்ற மொழி  நடிகர்களுக்கும் வில்லனாக நடித்திருப்பார் நம்பியார். அதற்குச் சான்றாக ஜெயன், சீமா, ஸ்ரீவித்யா நடித்து 1980-ல் வெளிவந்த "சக்தி'என்ற மலையாளப் படத்தில் நம்பியாரை வில்லனாக அறிமுகப்படுத்தும் காட்சி கதாநாயகன் அறிமுகப்படுத்தும் காட்சிக்குச் சமமாக இருக்கும்.  இசையும் ஆர்ப்பாட்டமாக இருக்கும். பொதுவாகத் திரைப்படங்களில் வில்லன் நடிகர்கள் தங்களுக்கு அருகில் நாய் அல்லது பூனையை வைத்திருப்பார்கள், ஆனால், "சக்தி' படத்தில் ஆந்தை போல ஒரு பறவையைக் கையில் வைத்திருப்பார். 

நம்பியாருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களுள் "ஆயிரத்தில்ஒருவன்" படமும் ஒன்று.  படத்தில் வாள்வீச்சு சண்டைக்காட்சிகள் இருந்தாலும் வசனகர்த்தா ஆர்.கே.சண்முகத்தின் வாய்வீச்சு (வசனம்) அனல்பறக்கும். ஒரு காட்சியில் நம்பியார் எம்.ஜி.ஆரைப் பார்த்து ""மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா'' என்று தனக்கே உரித்தான வில்லத்தனமான பார்வையோடு காட்சிக்கு பொருத்தமான உடல் மொழியோடும் பேசியிருப்பார்.  இப்படத்தில் எம்.ஜி.ஆர் உட்பட எல்லா வீரர்களும் பைஜாமா போல் உடை அணிந்திருப்பார்கள். ஆனால் நம்பியார் கைலி போல் உடையணிந்து எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை செய்வது சிறப்பம்சம். ஏனென்றால் கைலி போல் உடையணிந்து கொண்டு வாள் சண்டை செய்வது மிகவும் கடினமானதாகும். 

எம்.ஜி.ஆரின் ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்களில் வில்லனாகவும் "நினைத்தை முடிப்பவன்', "ரகசிய போலீஸ்' ஆகியப்படங்களில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பார். 

அடுத்து சிவாஜி நடித்த "ராமன் எத்தனை ராமனடி', "ராஜபார்ட் ரங்கதுரை', "தெய்வமகன்', "சிவந்தமண்', "சங்கிலி', "சந்திப்பு', "மன்னவன் வந்தானடி' போன்றப் படங்களில் வில்லனாகவும் "பாசமலர்' உட்பட சிவாஜியின் பல படங்களில் குணசித்திர நடிகராவும் நடித்திருப்பார். 

பாலமுருகன் கதை-வசனம் எழுதி பி. மாதவன் இயக்கத்தில்  ஜேயார் மூவீஸ் சங்கரன் - ஆறுமுகம் தயாரித்த படம் "மன்னவன் வந்தானடி'.  இப்படத்தில் நம்பியார் வீட்டிற்கு நாகேஷ் வருவார். நாகேஷின் பேச்சைக் கேட்டுக் கோபப்பட்ட நம்பியார், அடியாட்களை வைத்து நாகேஷைக் கட்டுவதற்காக அவர்களின் பெயர்களைச் சொல்லி அழைக்க வேண்டும். கதாசிரியர் பாலமுருகனோ நான்கு அடியாட்களுக்கும் காட்சிக்குத் தகுந்தாற்போல் பெயர்களை வைத்திருப்பார். ஆனால், பாலமுருகன் வைத்த பெயர்களைச் சொல்லாமல் நம்பியார் தன் இஷ்டத்திற்கு டேய் பாலமுருகா! மாதவா! சங்கரா! ஆறுமுகா!  வாங்க இவனைப் பிடிச்சுத்தூணிலே கட்டுங்கடா!  என்பார்.

இந்தக் காட்சியைப் பற்றி கதாசிரியர் பாலமுருகன் சொல்லும்போது, நம்பியார் அடியாட்களுக்கு எங்கள் பெயரை சொன்னவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. காட்சி முடிந்தவுடன் உங்கள் பெயரை சொன்னதில் ஆட்சேபனை ஏதும் உள்ளதா என்று நம்பியார் கேட்ட போது, இல்லை நன்றாக இருந்தது என்றோம். டப்பிங் பேசும் போது இந்தப் பெயர்களையே சொல்லிவிடுங்கள் என்றார் பாலமுருகன். இப்படி கதாசிரியரையும், இயக்குநரையும், தயாரிப்பாளர்களையும் அடியாட்களாக மாற்றிய பெருமை நம்பியாரைச் சேரும். 

ஹரிச்சந்திரா படத்தில் வில்லத்தனமாக முகம் கொண்ட நம்பியாருக்கு விஸ்வாமித்திரர் கதாபாத்திரம். "மந்திரிகுமாரி', "மர்மயோகி', "சர்வாதிகாரி', "காவேரி' போன்றப் படங்களில் வெளிப்படுத்திய முகபாவங்களையும் மிஞ்சி புராணகால விஸ்வாமித்திரராகவே மாறிவிட்டாரோ என்று ரசிகர்கள் ஆச்சிரியப்படும் அளவிற்கு நடித்திருப்பார். பொறுமைக்குப் பெயர் போன ஹரிச்சந்திராவை சோதனைகளின் எல்லைக்கே தள்ளிச் சென்று சிவாஜி கணேசனுக்கு நிகரான தன் இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நம்பியார். 

சிவாஜி நடித்த படம் "பாசமலர்', மனித குலம் இருக்கும் வரையில் இப்படத்தை மறக்க முடியாது. இதே படத்தில் மற்றுமொரு அண்ணன் - தங்கைப் பாசக்கதை உள்ளது. அது சிவாஜி - சாவித்திரி என்கிற அண்ணன் -தங்கைப் பாசத்தின் சுனாமியில் அதிகம் கவனிக்கப்படவில்லை. அதுதான் எம்.என்.நம்பியார் - எம்.என்.ராஜம் சம்பந்தப்பட்ட அண்ணன் - தங்கைப்பாசம் பற்றிய கதை. 

"பாசமலர்' படத்தில்  சிவாஜிக்கும் எம்.என்.ராஜத்துக்கும், நம்பியாருக்கும் சாவித்திரிக்கும் ஒரே மேடையில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கும். பின்னாளில் இது சாவித்திரிக்குத் தெரியவர, அவர் எம்.என்.நம்பியார் வீட்டுக்குச் சென்று, அவரிடம் மன்றாடி, தடைப்பட்ட சிவாஜி-எம்.என்.ராஜம் திருமணத்தை மீண்டும் நடத்தி வைப்பார். ஆனால், படத்தில் இறுதி வரைக்கும் எம்.என்.நம்பியார் திருமணமே செய்யாமல் இருப்பார்.  

அதுமட்டுமல்ல; சிவாஜி தன் சொத்தையெல்லாம் தங்கை சாவித்திரிக்கு எழுதி வைத்துவிட்டு, ஏழ்மையில் இருக்கும் போது நம்பியார் சவரம் செய்யப்படாத முகத்தோடு வந்து, தன் தங்கை எம்.என்.ராஜத்துக்கு வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், என் தங்கை வெளிநாட்டில் போய்ப் படிக்கணுமுன்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அவளுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும்,' என்று சிவாஜியிடம் கேட்டுக் கொள்வார்.. இப்படத்தில் தங்கைக்காகவே வாழும் இரண்டு அண்ணன்கள் சந்திக்கும் இந்தக் காட்சியில், சிவாஜி, நம்பியார், எம்.என்.ராஜம் மூவரது நடிப்பும் மிக மிக இயல்பாக அமைந்திருக்கும்.  இப்படத்தில் நம்பியாரின் நடிப்பு சிறந்த குணசித்திர நடிப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.

"நினைத்ததை முடிப்பவன்', "ரகசிய போலீஸ்', தவிர "கண்ணே பாப்பா'கமல் நடித்த "ராம் லஷ்மண்' படங்கள் உட்பட ஒரு சில படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் நம்பியார். "கண்ணே பாப்பா' படத்தில் சாதாரண உடையில் இருக்கும் போலீஸ்அதிகாரி.   போலீஸ் நடிப்பிலும் வில்லத்தனமான பார்வை இருக்கும்.  அதற்கு உதாரணமாக ஒரு காட்சியில் லாட்டரிச் சீட்டில் பரிசு விழுந்த குழந்தை நம்பியாரின் உயரதிகாரியான மேஜர் சுந்தர்ராஜன் வீட்டிற்கு வந்து விடுவார். குழந்தையைத் தொடர்ந்து நம்பியாரும் வருவார். மேஜர் குழந்தையிடம் ""உன்னுடைய அம்மா அப்பாவைக் கண்டுபிடிக்கும் வரையில் இன்ஸ்பெக்டர் மாமாவிடம் இரு'' என்பார். அதற்குக் குழந்தை, ""நான் (நம்பியாருடன்)  மாமாவுடன் போகமாட்டேன் அவர் கத்தி வச்சிருக்கார்'' என்று சொல்லும்.  குழந்தையைக் கூட்டிச் செல்லும் வரை நம்பியாரின் நடிப்பு வில்லத்தனமாக இருக்கும்.   கதாசிரியர்  பாலமுருகன் நம்பியாரை அவர் வீட்டில் சந்தித்து ஒரு கதை இருக்கு என்று "கண்ணே பாப்பா' கதையைச் சொல்ல ஆரம்பிக்க உடனே நம்பியார் முந்திக்கொண்டு என்ன?  கற்பழிப்புக் கதையா என வில்லத்தனமான சிரிப்போடு கேட்க,  இல்ல இக்கதையில உங்களுக்கு இன்ஸ்பெக்டர் வேடம் என்று சொன்னவுடன் மறுக்காமல் நடிக்க  ஒப்புக்கொண்டார். 

கதாநாயகன், குணசித்திர நடிகர் என்று நடிப்பில் கலக்கிய எம்.என். நம்பியார் "லட்சுமி கல்யாணம்' படத்தில் சுருட்டு சுந்தரம் பிள்ளையாக வில்லத்தனம், நகைச்சுவை இரண்டும் கலந்த நடிப்பில் கலக்கியிருப்பார். இது மட்டுமல்லாமல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த "குலமா குணமா,' படத்தில் கலப்பட வியாபாரியாக, சி.கே.சரஸ்வதியோடு இணைந்து அவர், செய்கிற வில்லத்தனங்களில் ஒரு மெல்லிய நகைச்சுவை தொடர்ந்து இழையோடிக் கொண்டேயிருக்கும்.

நம்பியார் குணசித்திர வேடத்தில் நடித்து மிகவும் பேசப்பட்ட படம் "ஜென்டில்மேன்'இப்படத்தில் அர்ஜுன் கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு, பழி  வாங்கப்  புறப்படும் போது  நம்பியார்  பேசும் வசனம்:

""மனுஷனாப் பொறந்தா நாலு பேருக்கு நல்லது செய்யணும். அட் லீஸ்ட். ஒரு மரமாவது நடணும். நாலு பேருக்கு நிழலாவது கொடுக்கும்'' என்று எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பாலகுமாரனின் வசனத்தைச் சரியான ஏற்ற இறக்க உடல் மொழியில் பேசியிருப்பார்.

அடுத்த நம்பியாரின் நகைச்சுவைப் படம் தூறல் நின்னு போச்சு,'  ஒரு காட்சியில் கதாநாயகி வீட்டின் முன் நம்பியாரும், பாக்யராஜும் காத்துக்கொண்டிருப்பார்கள். 

""என்ன யோசனை?'' என்று  நம்பியாரைப் பார்த்துக் கேட்பார் பாக்யராஜ். 

""இல்லே,  எள்ளுதான் எண்ணைக்குக்காயுது. எலிப்புழுக்கை எதுக்குக் காயுது?'' என்று கேட்பார். தியேட்டரே சிரிப்பில் அதிரும்.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் எதிரும் புதிரும் போன்றவர்கள் என்று சொல்வார்கள். ஆனால், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர் டி.எம்.எஸ், வசன கர்த்தா ஆர்.கே. சண்முகம், ஆரூர்தாஸ் போன்றோர் இருவர் படங்களிலும் பணியாற்றியதைப் போல நம்பியாரும் இருவரது படங்களிலும் நடித்திருப்பார்.  அடுத்தத் தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி, விஜய்காந்த், சரத்குமார் படங்களிலும் நம்பியார் நடித்திருப்பார். 

நம்பியார் நடித்த கடைசிப்படம் "சுதேசி'. தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நான் செய்த உடற்பயிற்சி உணவுக்கட்டுபாடு போன்றவை என்னை நூறு வயது வாழ வைக்கும் என்றார். ஆனால், தனது 89வது வயதில் தனது இஷ்ட தெய்வமான அய்யப்பனிடம் ஜோதியாகி விட்டார்.  

படங்கள் உதவி : ஞானம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com