உடையாளூரில் ராஜராஜசோழன்

தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களில் சோழ மன்னனான ராஜராஜசோழன் சிறப்பிடம் பெற்று விளங்கியவர். ராஜராஜ சோழனால் எடுக்கப்பட்ட தஞ்சை பெருவுடையார்கோயில் தமிழகத்திற்கு பெருமை அளிக்கும் வகையில்
உடையாளூரில் ராஜராஜசோழன்

தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களில் சோழ மன்னனான ராஜராஜசோழன் சிறப்பிடம் பெற்று விளங்கியவர். ராஜராஜ சோழனால் எடுக்கப்பட்ட தஞ்சை பெருவுடையார்கோயில் தமிழகத்திற்கு பெருமை அளிக்கும் வகையில் உயர்ந்து காணப்படுகிறது. இக்கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை, உலோகத்திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக்கலை, இங்கு காணப்படும் கல்வெட்டுகள் போன்ற அனைத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ராஜராஜசோழன் பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டான். அதில் ஒன்று "சிவபாதசேகரன்'. சிவபெருமானின் திருவடிகளை எப்பொழுதும் தாங்கியவன் என்று சிறப்பாகப் போற்றப்படுகிறான். இறைவன் வீதிஉலா வரும்பொழுது இறைவன் வருகையைத் தெரிவிக்க (பொன்) தங்கத்தால் ஆன இரு எக்காளத்தை அளித்தான். இவற்றில் ஒன்றில் "ராஜராஜன்' என்றும், "சிவபாதசேகரன்' என்று மற்றொன்றிலும் பெயர் பொறித்திருப்பதை கல்வெட்டு நமக்கு கூறுகிறது. சிவபெருமான் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியை இது காட்டுகிறது.

ராஜராஜசோழனின் சிறப்புப்பெயரான "சிவபாதசேகரன்' என்ற பெயர் பின்னர் வந்த மன்னர்களை ஈர்த்ததால் பல ஊர்களுக்கு இப்பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளனர். மாகறல், திருப்புகலூர், திருச்செங்காட்டாங்குடி கோயில் கல்வெட்டுகளில் சிவபாதசேகர நல்லூர், சிவபாதசேகரமங்கலம், என்று ஊர்பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. 

சென்னை அருகே உள்ள குளப்பாக்கம் என்ற ஊர் சிவபாதசேகரநல்லூர் எனக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. ராஜராஜசோழன் சைவசமயம் மட்டுமல்லாமல், வைணவம், பெளத்தம், சமணம் ஆகிய சமயங்களையும் போற்றினான் என்பதை வரலாற்றுச் சான்றுகளால் உணரமுடிகிறது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னனின் நினைவிடம் எங்குள்ளது? என ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் உயிர் நீத்த பின்னர் அவரது நினைவாக புதைத்த அல்லது எரியூட்டிய இடத்தில் கோயில் எழுப்புவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இத்தகைய ஆலயங்கள் "பள்ளிப்படைக் கோயில்' என அழைக்கப்படுகின்றன.

இறந்த முன்னோர்களை வழிபடுவது என்பது தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்த பழக்கம் ஆகும். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இறந்தவர்களை புதைத்த இடத்தில் வட்டவடிவமாக பெருங்கற்கள் வைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

நடுகல்: இந்த அமைப்பிற்கு "கற்குவை, கற்பதுக்கை, கல்திட்டை' என்ற பெயர்களால் அழைப்பர். இக்காலத்தை பெருங்கற்காலம் எனக்கூறுவார்கள். போரில் இறந்த வீரர்களுக்கு அல்லது வீரச்செயல் புரிந்து இறந்த வீரர்களுக்கு "நடுகல்' எடுத்து வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளதை சங்க இலக்கியங்கள் எடுத்துக்கூறுகின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் இத்தகைய நடுகற்களை வேடியப்பன் என்று இன்றும் வழிபாடு செய்து வருவதைப் பார்க்கலாம்.

தஞ்சாவூரில் கரந்தை அருகே வடவாற்றின் தென்கரையில் தஞ்சையை ஆட்சி செய்து, உயிர் நீத்த மராட்டிய அரச குடும்பத்தினரின் சமாதிகள் உள்ளன. இதற்கு "கைலாச மஹால்' என்பது பெயர். தற்பொழுது "ராசாகோரி' என அழைக்கப்படுகிறது. சமாதி கோயில்கள் சிலவற்றை ஆலயமாகக்கட்டி கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது என்பது இங்கு காணும் கல்வெட்டுச் செய்திகளால் அறிய முடிகிறது. இச்சமாதி கோயில்களைப் பராமரிக்க நிலமும் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வழிபாடுகளும் மேற்கொள்ள அந்தணர் குடும்பமும் நியமிக்கப்பட்டதையும் அறியமுடிகிறது.

இன்றும் ஆதீன மடாதிபதிகள் உயிர் நீத்தால் அவரை புதைத்த இடத்தில் சிறுகோயில் போன்று அமைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதைக் காண்
கிறோம். சில குடும்பங்களில் இறந்தவர்களை புதைத்த இடத்தில் சமாதி எழுப்பி சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடு வதையும் காண்கிறோம்.

பள்ளிப்படைக் கோயில்கள்: தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்கள் பலருக்கு இவ்வாறு "பள்ளிப்படைக் கோயில்கள்' எழுப்பப்பட்டுள்ளன என்பதை வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. வேலூர் அருகில் சோழபுரத்தில் பிருதிவிகங்கரையன் நினைவாக பள்ளிப்படைக் கோயில் உள்ளது. முதலாம் ஆதித்த சோழன் நினைவாக தொண்டைமான் ஆற்றூரில் பராந்தகச் சோழன் எடுப்பித்த ஆதித்தேசுவரம், திருவல்லம் அருகே மேல்பாடியில் அரிஞ்சய சோழனுக்காக முதலாம் ராஜராஜசோழன் எடுப்பித்த பள்ளிப்படைக் கோயில்கள் உள்ளன. 

கும்பகோணம் அருகில் பழையாறையில் உள்ள பஞ்சவன் மாதேவீச்சுரம், சிதம்பரம் அருகில் பள்ளிப்படையான விக்கிரமசோழநல்லூர், திருவண்ணாமலை மாவட்டம் நாட்டேரி பிரம்மதேசத்தில் ராஜேந்திரச் சோழனுக்காக எடுக்கப்பட்ட "பள்ளிப்படை' போன்றவை அறியப்படுகின்றன. ஆடுதுறை அருகே பள்ளிப்படையான விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம் என்று இருந்ததை அறிய முடிகிறது. 

தாராசுரம் கோயில் இரண்டாம் ராஜராஜசோழனால் எடுக்கப்பட்டதாகும். இவனுக்கு "ராஜகம்பீரன்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. இக்கோயில் மதில் சுவரில் காணப்படும் கல்வெட்டில் "இந்நாட்டுப்பள்ளிப்படை ராஜராஜ கம்பீரேசுவரமுடைய மகாதேவர்க்கு' எனக் குறிப்பிடுவதால் இரண்டாம் ராஜராஜசோழனின் பள்ளிப்படையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். கொங்குநாட்டில் உடுமலை, காரத்தொழு என்ற ஊர்களில் பள்ளிப்படை இருந்ததாகவும் அறியப்படுகிறது.

உடையாளூர் சிவபாத சேகர ஈஸ்வர முடையார்: சிவபாதசேகரனான ராஜராஜசோழனின் நினைவிடம் இருப்பதாக கூறப்படும் உடையாளூரில் கைலாசநாதர் வழிபாட்டுச் சிறப்புடன் விளங்குகிறது. 

இக்கோயிலில் 33 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை படியெடுத்து 2015}ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். அக்கல்வெட்டுகளில் இவ்வூர் சிவபாதசேகரமங்கலம் என்றும், இக்கோயில் இறைவன் சிவபாதசேகர ஈசுவரமுடையார் எனக் குறிக்கப்படுகிறது.

இக்கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழன், விக்கிரமச்சோழன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜன், சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகள் அளிக்கும் செய்திகளால் இக்கோயில் சிறப்பாகப் போற்றப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

குலோத்துங்க சோழன் கல்வெட்டில் எங்களூர் ஸ்ரீகைலாசமுடையார் சிவபாத சேகர ஈஸ்வர முடையார் என்றும், விக்கிரமச்சோழன் கல்வெட்டில் "ஸ்ரீமாகேசுவரத்தானம்' என்றும் இவ்வூர் குறிக்கப்படுகிறது. இக்கோயிலில் ராஜபுரந்தர ஈசுவரமுடையார், உடையார், தேவகனாயகர், போன்ற திருமேனிகள் வழிபாட்டிற்காக எழுந்தருளவிக்கப்பெற்றது. 

இக்கோயிலில் திருமுறைகள் ஓத "ராஜராஜ சதுராலயம்' என்ற மண்டபம் கட்டப்பட்டது. வித்யா சிவ பண்டிதர் என்ற தபஸ்வி அபிமுக்தன் மடம் ஒன்றையும் எடுப்பித்தார். இக்கோயிலுக்கு அருகில் உள்ள பால்குளத்தம்மன் கோயிலில் காணப்படும் தூணில் உள்ள கல்வெட்டு, ஓர் சிறப்பான செய்தியைக் கூறுகிறது. "ஸ்ரீசிவபாதசேகரத்து மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ சிவபாதசேகரத்தேவர் திருமாளிகை முன்பில் பெரிய திருமண்டபம்: என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் ராஜராஜசோழனுக்கு இங்கு நினைவாக மண்டபம் எழுப்பப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். 

உடையாளூர் கைலாசநாதர் கோயிலில் பல சிறப்புகள் காணப்படுகின்றன. கருவறை நுழைவு வாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் காலடியில் அடியார் சிற்பமும், மற்றொன்றில் ஜடாபாரத்தலை அலங்காரத்துடன் அடியார் வணங்கும் கோலத்திலும் சிற்பமும் காணப்படுகிறது. வேறு எந்த கோயிலிலும் காண இயலாத வடிவம் இது. கருவறை வாயிலின் இடப்புறம் அரசன் } தேவியின் சிற்பவடிவங்கள் காணப்படுகின்றன. இவரை முதலாம் குலோத்துங்கச் சோழன் } தேவியுடன் உள்ளார் என்று கருதப்படுகிறது. கோயிலின் வாசல் எதிரே தலைப்பாகை அணிந்த ஒருவன் சிவலிங்கத்தை வணங்குவது போன்று சிற்பம் வழிபடப் பெறுகிறது.

வரலாற்றுப் புகழ்பெற்ற ராஜராஜசோழனின் நினைவிடமான } பள்ளிப்படைக்கோயில் எங்கே உள்ளது என்பதை அறிய அனைவரும் ஆவலாய் உள்ளனர். தொல்லியல் துறை இங்கே ஆய்வுகள் மேற்கொள்ள, நடவடிக்கைகளை எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆய்வுகள் முடிந்த பின்னர் பல புதிய வரலாற்றுச் செய்திகளை அறிய வாய்ப்பு உள்ளது.
கட்டுரையாளர்

தொல்லியல் துறை ஆய்வாளர் (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com