சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 66: தீமையை - நன்மை வெற்றிக் கொள்ளும் விழா
By DIN | Published On : 05th May 2019 12:00 AM | Last Updated : 05th May 2019 12:00 AM | அ+அ அ- |

""ஹோலியின் வண்ணங்கள் அமைதி, சந்தோஷம் என்ற செய்தியைப் பரப்பட்டும்.''
- ஹோலியின் மொழி
டெல்லியை விட்டு நாங்கள் கிளம்பும்பொழுதே தெருக்கள் கூடும் இடங்களிலும், பெரிய மைதானங்களிலும் காய்ந்த மரக்கிளைகளையும், சருகுகளையும் கூம்பு வடிவில் கட்டி வைத்திருந்தனர். இதைத் தவிர மாட்டுச் சாணத்தினால் தயாரிக்கப்பட்ட வறட்டிகளை இந்தக் கூம்பைச் சுற்றி வைத்திருப்பதைப் பார்த்தோம். அன்றைய இரவு இவைகள்தான் எரிக்கப்பட்டன. இது ஹோலியின் போது வட இந்தியா முழுவதிலும் பின்பற்றப்படுகிறது. ஏன் இப்படி? என்ற என் கேள்விக்கு கிடைத்த பதில்தான் இது!
ஹிரண்யனின் பிள்ளையான பிரகலாதன், தன் தந்தையை வணங்க மறுத்து ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தையே ஜெபித்துக் கொண்டிருந்தான். இதனால் கோபம் உற்ற ஹிரண்யன் தன் மகனை பலவிதத்தில் கொல்ல முயன்றும், நாராயணனின் அருளால் தப்பித்துவிட, கடைசியில் தன் தங்கையான (ஏர்ப்ண்ந்ஹ) ஹோலிகாவின் உதவியை நாடினான்.
பிரம்மதேவன் கொடுத்த வரத்தினால் ஹோலிகாவிற்குத் தீயினால் ஆபத்து இல்லை. அவளிடம் உள்ள ஒரு போர்வை அவளை நெருப்பிலிருந்து காத்துவிடும், என்பதினால் தீயை மூட்டி அதன் நடுவே ஹோலிகா போர்வையை மூடிக் கொண்டு அமர, அவள் மடியில் பிரகலாதன் உட்கார வேண்டும் என்று ஹிரண்யன் கட்டளை இடுகிறான். கொழுந்துவிட்டு எரிந்த தீயின் நடுவில் தன் அத்தையின் மடியில் பிரகலாதன் அமர, ஸ்ரீமன் நாராயணனின் அருளால் ஹோலிகாவின் போர்வை பறந்து சென்றுவிட அவள் தீயில் எரிந்து சாம்பலாகி விடுகிறாள். பிரகலாதனோ ஒளிவீசும் முகத்தோடு, ஒருவிதமான பாதிப்பும் இன்றித் தீயிலிருந்து வெளிவருகிறான்.
தீமையை- நன்மை வெற்றிக் கொள்ளும் என்பதை எடுத்துக்காட்டும் இந்த நிகழ்ச்சியை நினைவூட்டி, அதை வலியுறுத்தவே ஹோலியின் முன் தினம், இப்படி ஹோலிகா எரிந்ததுபோலவே, சருகுகளை எரிக்கின்றார்களாம்.
கிருஷ்ணன் அவதரித்த இடமான மதுராவை வந்து அடைந்தோம். ஸ்ரீ கிருஷ்ணனின் சிறிய சிலை அவர் பிறந்ததாகச் சொல்லப்படும் சிறைச்சாலையில் உள்ளது. பிறகு பக்கவாட்டில் உள்ள படிகளில் ஏறிச் சென்றால், ராதை, கிருஷ்ணனின் ஆளுயர பளிங்கு சிலைகள் நம் சிந்தையைக் கவர்கின்றன. இந்தக் கோயிலைச் சுற்றி பொதுமக்கள் அமைதியான முறையில் ஹோலியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
மறுநாள் காலை கோவர்த்தனகிரியை நோக்கிச் சென்றோம். வழியில் நாங்கள் கடந்து சென்ற கிராமங்களில் எல்லாம் ஹோலி கோலாகலமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அன்று ஹோலி தினமாயிற்றே, அதனால் முக்காடிட்டுத் தங்கள் முகங்களை மூடிக்கொள்ளும் பிராஜ் நகரங்களின் பெண்கள்கூடத் தங்கள் முக்காடுகளை நீக்கி, தெருக்களில் ஒன்று கூடி நடனமாடிக் கொண்டிருந்தனர். ஒருவர் முகத்தில் மற்றொருவர் வண்ணங்களைப் பூசி, ஹோவென்று கைகளைத் தட்டி மகிழ்ந்தும், பீச்சு குழல்கள் மூலம் வண்ணத் தண்ணீரைப் பீச்சி அடித்துச் சுற்றியிருப்போரை வண்ணமழையில் நனைய வைத்துக் கொண்டிருந்தனர்.
ஸ்டீரியோ சிஸ்டங்களில் இருந்து புகழ்மிக்க ஹிந்தி திரைப்படங்களில் வந்த ஹோலி பாடல்கள் அதிர்ந்து ஒலிக்க, அதற்கு தகுந்தாற்போல ஆண்களும், பெண்களும் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் உறைகளில் வண்ணத் தண்ணீரை ஊற்றி, அதை அந்த வழியாக வரும் வாகனங்களின் மீது வீச, உறைகள் கிழிந்து, வண்ணத் தண்ணீர் வாகனங்களையும் குளிப்பாட்டியது. கோவர்த்தனகிரியை அடைந்தோம்.
பெருவெள்ளத்திலிருந்து மக்களைக் காக்க கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தான். அந்த மலை இன்றைய நிலையில் வெறும் 82 அடி உயரமே இருக்கிறது. இந்த மலை 8 கி.மீ. நீண்டு இருக்கிறது. திருவண்ணாமலையைச் சிவலிங்கமாகவே பாவித்து மக்கள் பயபக்தியுடன் அதை வலம் வருவதுபோல, கோவர்த்தன மலையைக் கிருஷ்ண ஸ்வரூபமாகவே நினைத்து அதைச் சுற்றி வருகிறார்கள்.
23 கி.மீ நடந்து செய்யவேண்டிய இந்தப் பரிக்கரமாவை மக்கள் திரளாகச் செய்து கொண்டிருந்தனர். வேகமாக நடந்தால் ஆறுமணி நேரத்தில் இதைச் செய்து முடித்துவிட முடியுமாம். வண்ணப் பொடிகளால் குளித்து முழுகிய நிலையில் மக்கள் சென்று கொண்டிருந்தனர். மிக விசேஷமான "தண்டவடா' (dandavata) பரிக்கிரமாவைப் பார்க்கும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது. இந்த 23 கி.மீ தூரத்தையும் தரையில் விழுந்து வணங்கியபடியே சென்ற இரண்டு தம்பதியரைக் கண்டோம். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, கைகள் வைத்த இடத்தில் ஒரு கல்லை வைத்து, கோடு கிழித்து, பிறகு எழுந்து மீண்டும் கோடு இருக்கும் இடத்தில் காலை வைத்து நீண்டு விழுந்து கும்பிடுகிறார்கள்.
இப்படி வலம் வர பல வாரங்கள் ஆகுமாம். சில சாதுக்கள் 108 தண்டவடா செய்வார்களாம். எப்படி ஒரே இடத்தில் 108 முறை வணங்கி பிறகு மீண்டும் சாஷ்டாங்க நமஸ்காரம் என்று இப்படிச் செய்யப் பல மாதங்கள் ஆகும் என்று கேள்விப்பட்டதும் ஆச்சரியத்தில் நானும் என் கணவரும் உறைந்து போனோம். கோவர்த்தனகிரியில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணனுக்காக கட்டப்பட்ட கிரிராஜ் கோயிலில் இருந்த ராதை, கிருஷ்ணா விக்ரகங்கள் கூட ஹோலி வண்ணப் பொடிகளால் மூடப்பட்டிருந்தன. அங்கே இருந்த சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் வண்ணப்பொடிகள் தூவப்பட்டதால் நிறம் மாறி இருந்தன.
அடுத்து ராதை பிறந்த இடமான பர்சானாவுக்கு (Barsana) சென்றோம். அங்கே ராதை முகத்தில் வண்ணம் பூச வந்த கிருஷ்ணனை அவளின் தோழிகள், கம்புகள் கொண்டு விரட்டினார்களாம். அந்த பாரம்பரியத்தின்படி இன்று பர்சானாவில் பெண்கள் கம்புகளைக் கொண்டு ஆண்களை அடிக்க தங்களைக் காத்துக் கொள்ள ஆண்கள், கேடயங்களை தலையில் சுமப்பார்களாம். மீறி அடிவாங்குபவர்கள், பிறகு பெண் வேடமிட வேண்டுமாம். பின்னர் என்ன? வண்ணப் பொடிகளின் அபிஷேகம்தான். இந்த ஹோலியை "லாத் மார் ஹோலி' (Lath mar holi) என்று அழைக்கின்றனர்.
நாங்கள் பர்சானா சென்றபொழுது இத்தகைய ஹோலியைப் பார்க்கமுடியவில்லை. ஹோலிக்கு இரண்டு தினங்கள் முன்பே லாத் மார் ஹோலி முடிந்துவிட்டது. ஆனாலும் ஹோலி அன்று மக்கள் வண்ணப்பொடிகளை வீசி நடனமாடிக் கொண்டிருந்தனர். ஒரு குன்றின் மீது இருந்த ராதா ராணி கோயிலில் கொலுவிருந்த ராதை, கிருஷ்ணன் விக்ரகங்களை வணங்கி மகிழ்ந்தோம். நந்த கிராமம் சென்றோம். கிருஷ்ணன் காலத்தில் அங்கே இரண்டு லட்சம் பசுக்கள் இருந்தனவாம். அங்கு ஸ்ரீ கிருஷ்ணன், தன் அண்ணன் பலராமனோடும், தாய் யசோதை தந்தை நந்தகோபருடன் குடிகொண்டிருக்கும் கோயிலை தரிசித்தோம். கடைசியாக கோகுலம் சென்றோம். அங்கு உள்ள கிருஷ்ணன் வளர்ந்த வீட்டைப் பார்த்தோம். யசோதை தயிர் கடைந்த இடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஊஞ்சலில் தவழ்ந்த இடம் இவற்றைப் பார்த்து மெய் சிலிர்த்தோம். மற்ற இடங்களைப் போலவே இங்கும் ஹோலி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணனின் பாதங்கள் பட்ட இடங்களில் எல்லாம், நாங்கள் கண்ட ஹோலியின் கொண்டாட்டங்கள் எங்களை ஸ்ரீ கிருஷ்ண யுகத்திற்கே அழைத்துச் சென்றது, பக்தியில் மூழ்க வைத்தது.
(தொடரும்)