360 டிகிரி
By -சேலம் சக்திக்கொடி | Published On : 05th May 2019 12:00 AM | Last Updated : 05th May 2019 12:00 AM | அ+அ அ- |

முதல் தமிழ் பேசும் படம்
✽ முதல் தமிழ் பேசும் படத்தின் விளம்பரம் என்னமாய் இருக்கிறது பாருங்கள்!
ஸ்வர்ணலதா! ஆஹா!
பகவானை எந்த நேரத்தில் எந்த ரூபத்தை நினைக்க வேண்டும்!
போஜனகாலத்தில் ஜனார்த்தனனையும், படுக்கும் போது பத்மநாபனையும், ஸ்த்ரீ சங்க காலத்தில் புருஷோத்தமனையும், மரண காலத்தில் நாராயணனையும், பந்துக்களைப் பார்க்கும் போது ஸ்ரீதரனையும், ஆபத் காலத்தில் சக்ரபாணியையும்(கிருஷ்ணனையும்) மாற்றானது இல்லத்தில் பிரவேசிக்கும் போது த்ரிவிக்ரமனையும், ஆயாஸமாகும் போது வாமனனையும், சுகமாக இருக்கும் போது மாதவனையும், ஆரண்யத்தில் பயணிக்கும் நரசிம்மனையும், எல்லா காரியங்களைச் செய்யும் ஸ்ரீராமனையும் நினைக்க வேண்டுமாம்!
கெட்ட கனவுகள் கண்டால் கோவிந்தனை ஸ்மரிக்க வேண்டும். பயம் உண்டாகும் போது மது என்னும் அரக்கனைக் கொன்ற ஸ்ரீஹரியையும், தண்ணீரில் குளிக்கும் போது வராஹனையும், நெருப்பின் அருகே இருக்கும் போது நாராயணனையும் நினைக்க வேண்டும்.
யார் இந்த ஸ்ரீஹரியின் 16 நாமங்களை எப்போதும் தியானிக்கிறார்களோ உச்சரிக்கின்றனரோ அவர்கள் 1000 சாந்திராயண விரதங்கள், நூற்றுக்கணக்கான கன்யா தானங்கள், ஆயிரம் அஸ்வமேத யாகங்களைச் செய்த புண்ணியம் கிட்டும்.
-பத்மஜா, ஸ்ரீரங்கம்
தமிழில் தீர்ப்பு
✽வாழை மரத்திற்கு ஜப்பானிய மொழியில் "பாஷோ' என்று பெயர்.
✽ டாக்ஸி டிரைவர்கள் பயணிகளிடம் பேசக்கூடாது என்ற சட்டம் ஜெர்மனியில் அமலில் உள்ளது.
-ஏ.தென்றல், அல்லம்பட்டி
✽ வெள்ளையர் ஆட்சியில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு கூறினாரே நீதியரசர் வேதநாயகம் இவர், திருச்சி குளத்தூரில் பிறந்தவர்.
-போளூர் சி. ரகுபதி
✽ மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் தினமும் எந்நேரம் வீடு திரும்பினாலும், ஒரு மணி நேரம் படித்துவிட்டு தான் தூங்குவார். வாரத்திற்கு ஒரு புத்தகத்தை படித்து முடிக்க வேண்டும் என்பது அவர் கணக்கு.
-ராஜிராதா, பெங்களூரு
உள்ளம் உருகுதம்மா...
இந்தோனேஷியாவில் "பெனாங்குங்கன்' என்ற ஊர் இருக்கிறது. அங்கு "மேலாஸ்தி' என்று ஒரு ஆன்மிக நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். அதில் வயதானவர்களை விட இளையவர்களே அதிகம் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி "நெய்ப்பி' விரதம் நடக்கும் நாளில் மெளனவிரதம் இருப்பது. அப்போது வேலை செய்யமாட்டார்கள். ஊரைவிட்டு வெளியில் எங்கும் செல்லமாட்டார்கள். எந்த கெட்டச் செயலும் செய்யமாட்டார்கள். இந்த விழாக்களை இந்தோனேஷியாவில் உள்ள இந்துக்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.