சர்வதேசத் தரத்தில் நூறு தமிழ்ப் படங்கள்...!

"வாழ்க்கையின் நீட்சிதான் சினிமா. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வொரு நாளும் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனக்கும் சினிமாதான் வாழ்க்கை, வாழ்க்கைதான் சினிமா.
சர்வதேசத் தரத்தில் நூறு தமிழ்ப் படங்கள்...!

"வாழ்க்கையின் நீட்சிதான் சினிமா. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வொரு நாளும் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனக்கும் சினிமாதான் வாழ்க்கை, வாழ்க்கைதான் சினிமா. காப்ரியல் கார்ஸியா மார்க்வஸ் "வாழ்க்கையே பெரும் கனவு' என்கிறார். ஷேக்ஸ்பியர் "வாழ்வே ஒரு நாடகம், நாமெல்லாம் நடிகர்கள்' என்று சொல்கிறார். வாழ்வியலுக்கு நெருக்கமாக இருந்து வருகிற ரியல் சினிமாதான் எனக்கு ரொம்பவும் விருப்பம்....'' - ஆத்மார்த்தமாக பேசுகிறார் படத்தொகுப்பாளர் சாபுஜோசப். "ஆண்மை தவறேல்', "வல்லினம்', "காஷ்மோரா', "ஒரு நாள் கூத்து', "யாக்கை' என படத்துக்கு படம் கவனம் ஈர்க்கும் இளம் தலைமுறை படத்தொகுப்பாளர். சமீபத்தில் வெளிவந்துள்ள "மான்ஸ்டர்' படத்தில் இவரது எடிட்டிங் பெரும் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.
 ஒரு படத்தை இயக்குநர், ரசிகர்களுக்கு முன்பே பார்த்து விடுகிற சுவாரஸ்யம் எப்படியிருக்கும்....
 அணுக முடியாத பிரம்மாண்டம் என்றுக் கூடத் தோன்றும். சில நேரங்களில் சினிமா என்பது வாழ்க்கையின் தொடர்ச்சி என்று தெரியவரும். தொழில்நுட்பம் சார்ந்த இலக்கியம் என்றும் சொல்லலாம். பலவிதமான வாழ்க்கைகளை வாழ்ந்து பார்ப்பதற்கான இடமாகத்தான் சினிமாவைப் பார்க்கிறேன். உலகின் அனைத்து சினிமாவிலும் நிறம், உடை, கலாசாரம், இடம் மாறியியிருக்கிறது. ஆனால் உணர்வுகள் மாறவேயில்லை. சினிமாவின் புரிந்துகொள்ள முடியாத எளிமை இது. அதுதான் படத்தொகுப்பில் உள்ள சுவாரஸ்யமும்.
 இயக்குநரின் கற்பனையை, திரைக்கதையின் காட்சி அடுக்குகளாக மாற்றுவதுதான் ஒரு சினிமாவின் ஆக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதி. அதனால் படத்தொகுப்பு வேலை என்பது அவ்வளவு பிடிக்கும். வேலை என்பது விருப்பம் சார்ந்த விஷயம். அது இங்கே அப்படியே பொருந்தி வரும். சம்பளம், அன்றாடம், சமூகத் தேவைகள் என்பதைத் தாண்டி வேலை என்பது விருப்பம் சார்ந்த விஷயமாக இருப்பதுதான் சிலருக்கு பெரும் பிரச்னை. முதல் படம் "ஆண்மை தவறேல்'. விறுவிறுப்பான கதை. அடுத்தப் படம் "வல்லினம்'. தேசிய விருது மேடை வரைக்கும் போய் வந்தேன். இப்போது அடுத்தடுத்து படங்கள். இப்போது வந்திருக்கிற" மான்ஸ்டர்' வரைக்கும் அத்தனையும் சவால்தான். ரொம்பவே இஷ்டப்பட்டு வேலைப் பார்த்த படம். படத்தொகுப்பில் மட்டும்தான் மிகை என்பதே இல்லை. ஒரு காட்சி பிடிக்கவில்லை என்றால் அதே மாதிரி வேறு காட்சியை திட்டமிடலாம். ஒரு வகையில் அதில் சுவாரஸ்யம் குறைவு. படத்தொகுப்பு அப்படியல்ல. ஒரு காட்சியை இன்னொரு காட்சியுடன் சேர்ப்பது எப்படி என்று கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. அது கை சேர்ந்தால் நல்ல படத்தொகுப்பு.
 படம் விறுவிறுப்பாக இருந்தால், அது நல்ல எடிட்டிங் என்பது சரியா....
 எல்லாவற்றுக்கும் ஆதாரம் கதைதான். கதையின் தன்மை பொறுத்தே எடிட்டிங் என்பது அமையும். சில நேரங்களில் அது வெவ்வேறு கோணங்களில் வெளிப்பட்டு விடும். கதையின் இலக்கை எடிட்டிங் கொண்டு சேர்த்ததா என்பது மிக முக்கியம். கதையின் தன்மை குறித்து இயக்குநருக்கு தனிப்பார்வை இருக்கும். சில இயக்குநர்கள் விரிவாக எடுத்து வருவார்கள். சிலர் இது போதும், இதுதான்... என நம்பிக்கையாக வருவார்கள். இந்த இரண்டு பேருக்கும் சேர்த்து எடிட்டர் யோசிக்க வேண்டும். கதையை அதன் போக்கில் அணுகி கருச்சிதையாமல் சொல்லுவதுதான் எடிட்டிங். இரண்டு மணி நேர சினிமா என்பது நீங்கள் பார்ப்பது. அது எங்களிடம் வரும் போது குறைந்தது நான்கு மணி நேர சினிமாவாக இருக்கும். இந்த இரண்டு மணி நேரம்தான் எடிட்டருக்கு சவால். அதை உங்களுக்கு புரிவது மாதிரி தந்தால் அதுதான் நல்ல எடிட்டிங்.
 தமிழ் சினிமாவின் மிகை என்பது, உலக இயக்குநர்களும் அறிந்ததது...
 சினிமாவின் அடிப்படை என்பதே மிகைதான். அதை குறைத்து பேசி விடக் கூடாது. உலக சினிமாக்களில் நாம் இருப்பது, வர்த்தக சினிமாவில்... நம் மக்கள் கொடுத்த காசுக்கு திருப்தியை எதிர்பார்க்கிறார்கள். அதைத்தான் இயக்குநர்களும் தருகிறார்கள். "அவதார்' மாதிரி ஒரு வாழ்க்கை இங்கே இல்லை. அது இயக்குநரின் கற்பனை. அந்த கற்பனைக்குத்தான் இங்கே காசு. சினிமாவில் வண்ணம் என்கிற தொழில்நுட்பம் வந்த போது, நடிகர்கள் கலர் கலராக ஆடைகள் அணிந்து வந்தது மாதிரிதான் இதுவும். இதில் விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கும். விதிவிலக்குகளும் இருக்கும். இருந்தாலும், இதை சினிமா என்ற கோணத்தில் அணுக வேண்டும். தமிழ் கலாசாரம் என்பது உலகம் முழுக்க பாராட்டக்கூடியதாக இருக்கிறது. சர்வதேசத் தரத்தில் இலக்கியங்கள் தமிழில் இருக்கிறது. அதுபோல் சர்வதேசத் தரத்தில் நூறு தமிழ்ப் படங்களாவது வர வேண்டும் என்பதுதான் ஆசை.
 மன அழுத்தம் தர கூடிய வேலை இல்லையா....
 முன்பு அது போல் இல்லை. இப்போது எல்லாம் மாறி விட்டது. ட்ரெய்லர், டீஸர் தொடங்கி எல்லாவற்றிலும் புதிதாக எதையாவதுச் செய்ய வேண்டும். சில நேரங்களில் நாம் வெட்டி எடுக்கும் ட்ரெய்லரை விட, சமூக வலைத்தளங்களில் வரும் ட்ரெய்லர் பெயர் வாங்கி விடுகிறது. இதுவெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. சரியான திட்டமிடல் இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம். அவ்வப்போது கிடைக்கும் ஓய்வை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதைப் புரிந்து வேலைப் பார்த்தாலே போதும்.

- ஜி.அசோக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com