செல்லப்பிராணிகளின் காவலர்!

'வாழப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் பொருள் வேண்டும்'' என்ற வாசகத்துடன் வரவேற்கிறது புழுதிவாக்கத்திலுள்ள சி.எஸ்.ஜெகந்நாதன் இல்லம். இவர் விலங்குகளின் பாதுகாவலர்.
செல்லப்பிராணிகளின் காவலர்!

'வாழப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் பொருள் வேண்டும்'' என்ற வாசகத்துடன் வரவேற்கிறது புழுதிவாக்கத்திலுள்ள சி.எஸ்.ஜெகந்நாதன் இல்லம். இவர் விலங்குகளின் பாதுகாவலர். வாசலிலேயே அவர் பராமரிக்கும் செல்லப்பிராணிகளின் பட்டாளத்தையும் பார்க்க முடிந்தது. செல்லப்பிராணிகளின் மேல் ஆர்வம் வந்தது எப்படி? அவரிடம் பேச ஆரம்பித்தோம். 
என்னுடைய மனைவி கோமதி டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரே மகள் மருத்துவர். திருமணமாகி தற்போது பெங்களூரில் வசிக்கிறார். நான் பொறியாளராகப் பல துறைகளில் பணியாற்றியுள்ளேன். ஆரம்பத்தில் மயிலாப்பூரில் குடியிருந்தோம். 2002-ஆம் ஆண்டு முதல் புழுதிவாக்கம் பகுதிக்கு குடிவந்தோம். என் அம்மாவும் செல்லப்பிராணிகளை மிகவும் விரும்புவார். ஆரம்பத்தில் 2 பூனைகளை வளர்த்தேன். நாளடைவில் அதனுடைய எண்ணிக்கை 20 ஆனது. அதனைத் தொடர்ந்து தெரு நாய்களின் மீது என்னுடைய கவனம் திரும்பியது. 
பிறந்த நாய்க்குட்டிகளை முறையாகப் பராமரிப்பது, நாய்களுக்குப் பிறப்பை தடுக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்வது, காயம் அடைந்த நாய்களை மீட்டு சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளைச் செய்து வருகிறேன். இதுவரை 750 நாய்க்குட்டிகளைக் காப்பாற்றி இருக்கிறேன். ஆயிரம் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள புளூ கிராஸ் அமைப்பு மற்றும் சென்னை மாநகராட்சி பெரும் உதவி செய்தது. மாநகராட்சியிடம் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக அப்போதைய மேயர் சைதை துரைசாமி 80 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்ற வள்ளலாரின் கொள்கையை கடைபிடித்து வருகிறேன். இப்போது என்னுடைய முழு நேரப்பணியும் தெருவிலுள்ள செல்லப்பிராணிகளைக் கவனிப்பது மட்டுமே. 
காலை 5 மணிக்கு எழுந்ததும் பூனைகளுக்குத் தேவையான பால் தயார் செய்து 5.30 மணிக்கு அவற்றிற்கு உணவளித்து விடுவேன். அதைத் தொடர்ந்து 6.30 மணி முதல் 8 மணிக்கு எங்கள் பகுதியிலுள்ள 75 நாய்களுக்கு உணவளித்து விட்டு, 8 மணி முதல் 10 மணி வரை புழுதிவாக்கத்திலிருந்து வேளச்சேரி வரையுள்ள 40 நாய்களுக்கு உணவளித்துவிட்டு வீடு திரும்புவேன். 

இதே போல் மதியம், இரவு என அவைகளுக்கு உணவளிப்பது தொடரும். நாம் மூன்று நேரம் உணவருந்துகிறோம். அதே போல் அவற்றிற்கும் உணவு கொடுப்பது அவசியம் என கருதுகிறேன். இதனால் நான் வெளியூர் எங்கும் செல்வதில்லை. உறவினர் வீட்டில் விசேஷம் என்றால் போக முடிவதில்லை. இதனால் குடும்பத்தில் நிறையப் பேர் என்னிடம் செல்லமாகச் சண்டைக்கு வருவார்கள்.
சைதை துரைசாமி சென்னை மேயராக இருந்த போது தெரு நாய்களைப் பராமரிப்பது பற்றி அவரிடம் கோரிக்கை வைத்தேன். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். கண்ணம்மாபேட்டை, வடசென்னை, மத்திய சென்னை நாய்களைப் பராமரிப்பதற்காகப் பிரத்யேகமாக இடங்களை ஒதுக்கினார். 
தெரு நாய்களை எல்லோரும் பராமரிக்கலாமா?
தாராளமாகச் செய்யலாம். ஆனால் தெரு நாய்களைத் துன்புறுத்தினால் இரண்டு ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிப்பதற்குச் சட்டம் உள்ளது. நாய்கள் நம்முடைய பாதுகாவலர்கள். அவை குப்பைகளைச் சாப்பிடுவதால் தான் வெறி நாய்களாக மாறி
விடுகின்றன. மேலும் கழிவு நீர் குடிப்பதால் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. தெரு நாய்களைப் பராமரிப்பது மிகவும் எளிது. உங்கள் தெருவில் நாய் குட்டிப் போட்டால் அவை தாயுடன் 45 நாள்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் புளூ கிராஸ் அமைப்பிற்குத் தகவல் தெரிவித்தால் தாய் குட்டி இரண்டையும் எடுத்துப் போய் விடுவார்கள். குறிப்பிட்ட நாள்கள் வளர்த்து குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி போட்டு தத்து கொடுத்துவிடுவார்கள். தாய்க்கு பிறப்பு தடைக்கான அறுவை சிகிச்சை செய்து மீண்டும் நம்முடைய முகவரிக்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். பொதுவாக நாய்கள் 10 முதல் 15 ஆண்டுகள் உயிர் வாழும். நாளடைவில் அவை நோய் வாய்ப்பட்டிருந்தால் புளூ கிராஸ் அமைப்பிற்குத் தெரிவித்தால் போதும் அவர்களே சிகிச்சை அளிப்பார்கள். தெரு நாய்கள் இறந்துவிட்டால் மாநகராட்சிக்கு தெரிவித்தால் அவர்களே வந்து எடுத்து சென்று விடுவார்கள். 
பொதுவாக, நாய்களுக்குத் தேவையான சுத்தமான தண்ணீர் குடிப்பதற்குக் கொடுத்தால் போதும். பத்து ரூபாய் கொடுத்து சிகரெட் பிடித்து உடலை கெடுத்து கொள்கிறார்கள். வெறும் மூன்று ரூபாய் கொடுத்து அதற்கு பிஸ்கட் வாங்கிப் போடலாம். உங்கள் வீட்டில் வாசலிலே காத்து நிற்கும். தெருவுக்கு மூன்று நாய்கள் இருந்தாலே திருட்டுப் பயம் இருக்காது. உங்கள் தெருவிற்குள் அந்நியர்கள் நுழைந்தால் அவை அடையாளம் காட்டி கொடுத்துவிடும். இது போன்று தெரு நாய்களால் நாம் அடையும் நன்மைகள் ஏராளம். இது போன்ற விஷயம் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. நம் நாட்டில் 85 சதவிதம் பேர் நாய்களை வெறுப்பதில்லை. விரும்புவதும் இல்லை. அவைகளுக்கு உணவு கொடுக்கமாட்டார்கள். 15 சதவீதம் பேர் செல்லப்பிராணிகளை விரும்புகிறார்கள். 
இவற்றில் சிறப்புப் பிரிவுகள் உண்டா?
தெரு நாய்களும், பலர் வீட்டில் வைத்து பராமரிக்கும் உயர் ரக நாய்களுக்கு ஈடானது தான். இவற்றில் "ஆல்பா' என்ற வகையைச் சேர்ந்த நாய்களை தான் போலீசாரும், ராணுவத்தினரும் பயன்படுத்தி வருகிறார்கள். பனி பிரதேசங்களில் இவை ராணுவ வீரர்களுக்கு உதவுகின்றன. எங்கள் பக்கத்துத் தெருவில் இதே இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் உள்ளது. அதற்குப் பெயர் தாதா என வைத்துவிட்டோம். அனைத்து ரக நாய்களையும் இந்த "ஆல்பா' வகை நாய்கள் தலைமை தாங்கி வழிநடத்தி செல்லும். குறிப்பாகத் தெருவில் குடித்து விட்டு வருபவரை அனுமதிக்காது. எங்கள் ஏரியாவில் இரண்டு முறை திருடர்களைப் பிடிக்க உதவியது. 15 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த தாதா இப்போது உயிருடன் இல்லை. 
தாதாவை போல் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் என அவற்றை நமக்கு அறிமுகப்படுத்தினார். வாலு, வாஞ்சிநாதன், அழுக்கு, அப்பு, ராம், ஸ்ரேயா, மணி, டிங்கு என பெயர்களைச் சொல்லும் போதே ஜெகன்நாதன் முகத்தில் அத்தனை உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது. இந்தப் பகுதியில் இவரை டைகர் ஜெகந்நாதன் என்றே அழைக்கிறார்கள். 
நாள்தோறும் இவற்றிற்கு உணவு அளிக்கிறீர்கள் நிறையச் செலவாகுமே?
செலவு பற்றி மட்டும் கேட்காதீர்கள். நாய்களை வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை கிடையாது. நாய்கள் துன்பப்படாமல் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். இவற்றின் பின்னால் நாள்தோறும் அலைகிறேன். இதனால் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கிறது. இவற்றைப் பாதுகாப்பதற்கு spca (Society for Prevention of Cruelty to Animals) என்ற விலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ளேன். 
நாய்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா?
தமிழ்நாட்டில் விலங்கு நல வாரியம் என்பது பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. தெரு நாய்களைச் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி விரிவாகவும், அதற்கான தீர்வு என்ன என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி அதை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் என்னுடைய ஒத்துழைப்பை முழுமையாகத் தருகிறேன் என்று விரிவாகக் கடிதம் எழுதியும் அதற்கு இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் விலங்கு நல வாரியம் முழுமையாகச் செயல்பட ஆரம்பித்தால் நாய்கள் மட்டுமல்ல, மான், பறவை, பூனை, பாம்பு, குதிரை போன்ற பல விலங்குகள் பாதுகாக்கப்படும் என்றார் ஜெகந்நாதன். 
-வனராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com