இளையராஜா 75

இளையராஜா 75

75 வயது இளையராஜாவிடம் 75 கேள்விகள்...அத்தனைக்கும் அவரின் அசராத பதில்கள் இதோ.

இசையும், தியானமும் இரண்டு கண்களில் மிளிர சிரிக்கிறார் இளையராஜா. ஜூன்2-ஆம் தேதி சென்னையை அடுத்த ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடக்கவுள்ள "இசை கொண்டாடும் இசை' பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு தயாராகி வருபவருடன் ஒரு புல்லட் பேட்டி.
75 வயது இளையராஜாவிடம் 75 கேள்விகள்...அத்தனைக்கும் அவரின் அசராத பதில்கள் இதோ...

1. இளமைத் தொடங்கி இன்றும் கடைப்பிடிக்கும் நல்ல பழக்கம்....
யார், எதை நல்லப் பழக்கமாக எடுத்துக் கொள்கிறார்கள் என தீர்மானமாக தெரியாததால், நான் கடைப்பிடிக்கும் பழக்கம் நல்ல பழக்கமா... கெட்டப் பழக்கமா... என்பதை நான் தீர்மானிக்க முடியாது. எனக்குப் பிடித்ததை எல்லாம் செய்கிறேன். அவையெல்லாம் நல்ல பழக்கம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் பழக்கங்களில் வித்தியாசங்கள் எனக்குக் கிடையாது.
2. சிறு வயதில் அதிகம் கேட்டு ரசித்த பாடல்....
"மாலைப் பொழுதின் மயக்கத்திலே...' கேட்டதை விட அதிக முறை பாடிய பாடல்.
3. சினிமாவில் நீங்கள் யார் ரசிகர்...
நல்ல சினிமா தருபவர்களுக்கு நான் ரசிகன். பொதுவாக சிவாஜியை எனக்குப் பிடிக்கும். எம்.ஜி.ஆரின் வெற்றிக்கரமான படங்கள் எல்லாம் பிடிக்கும்.
4. அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்....
சின்ன வயதில் முணுமுணுத்ததோடு சரி... இப்போது அப்படி எதுவும் இல்லை.
5. பிடித்த உணவு
எது என் முன்னால் வைக்கப்படுகிறதோ, அதுவே என் உணவு. ஏனென்றால் என் உடல் ஓர் பிச்சைப் பாத்திரம்.
6. டி.வி..யில் பார்க்கும் நிகழ்ச்சி..
பார்ப்பதே இல்லை.
7. சந்திக்க விரும்பும் நபர்....
ஜான் வில்லியம்ஸ், ஸ்டீபன் ஸ்பீல் பர்க்.
8. பிடித்த இசை முன்னோடி...
ஏராளமான பேர் இருக்கிறார்கள். அந்தப் பட்டியல் சொன்னால் அது உங்களுக்கு பெயராகத் தெரியும். ஆனால் அது எனக்கு கடவுளின் சோஸ்திரம் மாதிரி.
9. சந்திக்கவே கூடாது என நினைக்கும் நபர்...
அவர்களை நான் சந்திப்பதே இல்லை. அதைப் பற்றி சிந்திப்பதும் இல்லை.
10. பிடித்த பொன்மொழி
"தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்'' எனும் குறள். உன்னையே உனக்கு பிடிக்க வேண்டும் என்றால், சின்ன தவறுப் பக்கம் கூட போகாதே என்று சொன்ன குறள். அதுவே பிடித்த பொன்மொழி.
11. படித்ததில் பிடித்த புத்தகம்...
ரமணர் வாழ்க்கை வரலாறு.
12. எதை பெரும் இழப்பாக
கருதுகிறீர்கள்....
இந்தப் பிறப்பை...
13. மறக்க முடியாத சென்னை நாள்...
எந்த நாளை நான் மறந்தேன்.
14. கிராமத்து விளையாட்டு...
அது திரும்ப வராது.
15. அம்மாவை நினைக்கும் போது...
நினைக்காத நாள் ஏது? அம்மாவை வணங்கி விட்டுத்தான் என் எல்லா நாள்களும் தொடங்கும்.
16. அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை...
ச்சே...
17. பிடித்த வாகனம்...
அப்படி எதுவும் இல்லை.
18. பொது வாழ்க்கையில்
பிடித்த தலைவர்...
என் வாழ்க்கையே பொதுவாக இருக்கிறது.
19. சந்திக்க விரும்பும் தலைவர்
அப்படி எதுவும் இல்லை
20. முதல் சம்பளம்
வைகை அணையில் வேலை செய்த போது, ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் வீதம், வாரத்துக்கு 7 ரூபாய். எல்லாம் புது ரூபாய் நோட்டுகள்.
21. ரோல் மாடல்
நான் யார் மாதிரியும் வர முடியாது என்று எனக்குத் தெரியும். அது தெரிந்ததால், ரோல் மாடல் என்று எவரும் இல்லை.
22. யாருடைய இழப்பு உலுக்கியது...
அம்மா, சகோதரர்கள், சகோதரி எல்லா இழப்பும்தான்.
23. மகன்கள், மகளுக்கு சொல்லும்
அறிவுரை...
அதை தனியாக சொல்லிக் கொள்வேன்
24. பண்ணைபுரம் என்றதும் நினைவுக்கு வருவது...
மேற்குத் தொடர்ச்சி மலை, மணல் ஓடை, இரட்டை ஆலமரம், வீரன்தோப்பு எல்லாமும்தான்.
25. சென்னையில் பிடித்த பகுதி...
பிரசாத் ஸ்டுடியோ.
26. எம்.ஜி.ஆர், சிவாஜி தந்த மறக்க முடியாத பரிசு...
இரண்டு பேருமே தனியாக எதுவும் கொடுக்கவில்லை. மக்களுக்கு அவர்கள் நடித்துக் கொடுத்த படங்கள் எல்லாம் பரிசுதான். அது எனக்கும் பரிசுதான்.
27. ஆட்டோகிராப் வாசகம்..
இறையருள் இளையராஜா.
28. பிடித்த அயல்நாடு...
ஆஸ்திரியாவின் "வியன்னா' .
ஹங்கேரியின் "புடாபெஸ்ட்'
இரண்டுமே இசை நகரங்கள்.
29. பிடித்த வரலாற்று நாயகன்...
நல்ல நீதி சொன்னவர்கள்தான் வரலாற்று நாயகர்கள் என்பது என் கருத்து. அப்படிப் பார்த்தால் திருவள்ளுவர், மகாகவி பாரதியார்
30. அம்மா உங்களிடம் பேசிய கடைசி வார்த்தைகள்....
நினைவில் இல்லை.
31. மறக்கவே முடியாதவர்...
நிறைய பேர் இருக்கிறார்கள்
32. பேரன், பேத்தியிடம் ரசிப்பது....
கொஞ்சும் மொழிகள்.
33. 75 வயதில் உங்கள் மனம் என்ன சொல்கிறது..
மனம் வயதை பற்றிக் கவலை கொள்வதே இல்லை!
34. இசையைத் தவிர்த்து என்னென்ன வேலை செய்து உள்ளீர்கள்...
இசையே பெருங்கொடை. வேறு என்ன வேண்டும்?
35. வாலி எழுதிய பாடல்களில்
பிடித்தது...
"மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா...'
36. கண்ணதாசன் என்றதும் நினைவுக்கு வருவது....
"மாலைப் பொழுதின் மயக்கத்திலே...'
37. போட்டோகிராபர் ராஜா...
நான் எடுத்த புகைப்படங்களை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும்
38. நன்றி சொல்ல தேடிக் கொண்டிருக்கும் நபர்...
யாரையும் தேடுவதில்லை. என் உள்ளத்திலேயே நன்றி சொன்னால், அவர்களுக்குப்போய்ச் சேரும் என்பது சத்தியம்.
39. இசைஞானி பட்டம் கொடுத்த கருணாநிதி குறித்து...
அவர் என்னை இசைஞானியாக பார்த்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். திருச்சியில் இருந்து காரைக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார். எனக்கு அது பாராட்டு விழாவாகத்தான் இருந்தது. அதுவே எனக்கு பட்டம் கொடுக்கும் நிகழ்ச்சியாக மாறும் என்பது தெரியாது. நிகழ்ச்சிக்கு வருகிற வழியில் அப்போது நான் எழுதியிருந்த "வெட்ட வெளிதனில் கொட்டி கிடக்குது.' " சங்கீத கனவுகள்' இரண்டு புத்தகங்களையும் படித்துக் கொண்டே வந்திருக்கிறார். கூட்டத்துக்கு வந்தவர் புத்தகங்களை படித்தது பற்றி சொன்னார். அதை மேடையில் குறிப்பிட்டு இசையிலும், ஆன்மிகத்திலும் இளையராஜா இருப்பதால், அவருக்கு "இசைஞானி' என்ற பட்டத்தைக் கொடுப்பதாக அறிவித்தார். அதன் பின் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது, அவரிடம் "இசைஞானியார் என்பது 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் தாயார் பெயர்' என்றேன். "அது தெரியும். அதனால்தான் வைத்தேன்' என்றார். அவர் வைத்த பெயர் அப்படியே மக்கள் மத்தியில் நிலைத்து விட்டது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். "உளியின் ஓசை' படத்தின் பிரிவியூ காட்சி ஃபோர் பிரேம் தியேட்டரில் நடைபெற்றது. அந்த சமயம் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனிடம் இளையராஜாவுக்கு "இசைஞானி' என்ற பட்டம் வழங்கியது மிகவும் பொருத்தம் என்று குறிப்பிட்டதாகவும் அறிந்தேன்.


40. மெட்டுக்கு எழுதிய பாடல் எது... பாடலுக்கு மெட்டு போட்ட முதல் பாடல் எது...
நிறைய இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல முடியாது
41. படத்தில் அறிமுகப் பாடல்களில் வந்தது பற்றி...
ஞாபகம் இல்லை.
42. ரஜினி, கமல் தந்த பரிசு...
இருவருமே நாட்டுக்கு கிடைத்த பரிசு. கமல் உன்னத கலைஞர். ரஜினி அற்புத மனிதர். நாங்கள் மூன்று பேருமே ஒரே நேரத்தில் திரைத்துறைக்கு வந்தோம். இன்றும் நண்பர்கள். என்றும் நண்பர்கள். மற்றவர் குறைகளை நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொள்ளத் தயங்க மாட்டோம். ஆனால், அதை வெளியில் போய் பேசிக்கொள்வதில்லை. ஒருவரையொருவர் மதிக்கிற பண்பு எங்களிடம் இருக்கிறது.
43. பிடித்த அயல்நாட்டு திரைப்படங்கள்....
எக்கசக்கம்.
44. இசையமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட பாட்டு...
பாடு நிலாவே....
45. முதலில் எழுதிய பாடல்...
இதயம் ஒரு கோயில்...
46. திருத்திக் கொண்டே இருந்த பாடல்...
நிறைய இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் இல்லை.
47. பிடித்த வெளிநாட்டுப் பெண்மணி....
யாரும் இல்லை.
48. பிடித்த நிறம்...
வெள்ளை.
49. பிடித்தது....
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
50. பிடிக்காதது....
பிடிக்காதது என்று எதையும் சொல்லக் கூடாது.
51. மீண்டும் மீண்டும் படிக்கும்
புத்தகம்...
ரமணர் வாழ்க்கை.
52. மழை பெய்யும் போது... என்ன தோன்றும்...
சிறு வயதில் கப்பல் விட்டது ஞாபகத்துக்கு வரும்
53. அப்பாவுடன் பேசிய கடைசி வார்த்தைகள்...
அப்பா படுக்கையில் இருந்தார். நான், பாஸ்கர், அமர் மூன்று பேரின் கைகளையும் பெரியண்ணன் பாவலரின் கைகளில் பிடித்துக் கொடுத்தார். அங்கே வார்த்தைகள் எதுவுமில்லை. மௌனம்தான் இருந்தது. பொய் சொன்னதற்காக என்னை அவர் அடித்திருக்கிறார். அதிலிருந்து பொய் சொல்வதை விட்டு விட்டேன். சினிமாவுக்கு வந்தவுடன் மீண்டும் பொய் சொல்ல தொடங்கி விட்டேன்.
54. நீங்கள் எழுதியதில் அதிகமாக விற்பனையான புத்தகம்...
பதிப்பகத்தாரைத்தான் கேட்க வேண்டும்.
55. நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம்...
நான் படித்தவனும், படிக்கிறவனும் இல்லை.
56. மனிதனின் உண்மை முகம் எது...
எல்லாவற்றையும் மறைப்பது. நல்லது என்று நினைப்பதை மட்டுமே வெளியில் சொல்லுவது... மோசமானதை மறைத்துக் கொள்வது...
57. ரமணர்?
அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே அருகதை வேண்டும்.
58. பஞ்சு அருணாசலம் - இளையராஜா முதல் சந்திப்பு...
முதல் சந்திப்பில் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. ஏனென்றால் கண்ணதாசனுடன் பாடல் எழுத ஜி.கே. வெங்கடேஷ் மியூசிக்
கலுக்கு வந்தார். கிளப் ஹவுஸில் நான் தனியாக பார்க்கும் போது, "வாப்பா... உட்கார்' என்றார். அவ்வளவுதான்.
59. உங்கள் குரு தன்ராஜ் மாஸ்டர் உங்களிடம் எந்த விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார்....
கண்டிப்பு எதுவும் இல்லை.
60. பெருந்தலைவர் காமராஜர் பற்றி சிலாகித்து பேசுவதுண்டு.. அவரிடம் பிடித்த விஷயம் என்ன..
இந்த நாட்டை ஆண்டவர்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் காமராஜர்
61. பாதுகாத்து வரும் பொருள் என்ன...
மனசு.
62. விருப்பமான ராகம்...
மௌன ராகம்.
63. முடங்கி விட்ட பாடல்கள் என்று ஏதாவது இருக்கிறதா...
எடுக்கப்பட்டு வெளிவராத பாடல்கள் நிறைய உண்டு.
64. முதல் காதல்?
அதற்கெல்லாம் நேரம் இல்லை.
65.குறுகிய காலத்தில் உருவான பாடல்...
3 நிமிடங்களுக்கு மேலாக எந்தப் பாடலுக்கும் எடுத்துக் கொள்வதில்லை.
66. தீவிர ரசிகர் குறித்து...
நிறைய பேர் இருக்கிறார்கள். தினம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
67. பிடித்த குறள்?
தன்னைத்தான் காதலன் ஆயின்... எனத் தொடங்கும் குறள். இன்னொன்று மனத்துக்கண் மாசிலன் ஆதல்...எனத் தொடங்கும் குறள்.
68. அடிக்கடி செல்லும் இடம்...
திருவண்ணாமலை.
69. வெள்ளை உடைக்கு மாறிய தருணம்...
மூகாம்பிகை கோயிலுக்கு போய் வந்த போதிலிருந்தே என்னுள் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. முதலில் பேண்ட், ஜிப்பாவுக்கு மாறினேன். அதன் பின் வேஷ்டி, ஜிப்பாவுக்கு மாறி விட்டது.
70. எல்லா ஆன்மாக்களுக்கும் உங்கள் இசை பொருந்துவது எப்படி?
உணர்வதே இசை. அந்த தன்மை இருந்தால்தான் அது இசையின் அடையாளம்.
71. பாலிவுட் இயக்குநர்களில் உங்கள் நண்பர் யார்...
பால்கி. அவர் பெரும் ரசிகர்.
72. ஹிந்தியில் பயன்படுத்தப்பட்ட பாட்டு எது..
"மன்றம் வந்த தென்றலுக்கு...'
73. எல்லா உணர்வுகளுக்கும் பாடல், இசை தருவது எப்படி...
ஒரு பெண் என்ன நினைப்பாள்... என்பதையும் என் இசைத் தொட்டிருக்கிறது... எல்லா உணர்வுகளுக்குள்ளும் நான் பயணமாகிறேன் என்பதுதான் காரணம்.
74. இசை தேடல்...
அது தேடல் அல்ல. அந்த கன நேரத்தில் நடக்கிறது. அவ்வளவுதான்....
75. பயத்தை தருவது எது?
பயம் குறித்து இளையராஜா எழுதிய கவிதையை ப் படித்துக்காட்டியது:

என்மனப் பேய்க்கும் அஞ்சேன்
நான் எனும் நாய்க்கும் அஞ்சேன்
வஞ்சமாம் வாய்க்கும் அஞ்சேன்
அஞ்செனும் தீய்க்கும் அஞ்சேன்
நெஞ்சிலான் உள்ளும் ரமணன்
நிற்கிலா தருளும் அருளை
துஞ்சலில் மறப்பேன் எனிலோ
அய்யநான் அஞ்சும் ஆறே!

வேர்விடும் வினைக்கும் அஞ்சேன்
சீர் புகழ் சிறுமைக் கஞ்சேன்
நேர்கொலும் நெஞ்சிற் கஞ்சேன்
நீர்மையில் நீசர்க் கஞ்சேன்
மார்பிலார் மனத்தும் மண்டும்
மாதவன் ரமணன் அருளால்
நீர்விடாக் கண்கள் காணில்
அய்யநான் அஞ்சும் ஆறே!

பிறந்த ஓர் பிறப்புக் கஞ்சேன்
பெற்றிடார் பிதற்றற் கஞ்சேன்
இறந்துபோம் காலம் அஞ்சேன்
இடர்தரும் கோள்கள் அஞ்சேன்
பிறங்கிடும் ரமணன் அருளே
பிறண்டிடா தென்றும் உண்டேல்
மறந்திடா தளிப்போன் மறக்கில்
அய்யநான் அஞ்சும் ஆறே!

பெற்றவர் கடமை அஞ்சேன்
உற்றநோய் உடைமை அஞ்சேன்
கற்றிலான் மடமை அஞ்சேன்
சுற்றமும் சூழலு மஞ்சேன்
உற்றதோர் ரமணன் உறவும்
உளக்கல்லும் உருகும் அருளும்
மற்றுயான் மறந்தேன் எனிலோ
அய்யநான் அஞ்சும் ஆறே!

சாக்குடை தேகம் அஞ்சேன்
மோகமாம் தாகம் அஞ்சேன்
தாக்கும்தீக் காமம் அஞ்சேன்
தகிக்குமதன் வேகம் அஞ்சேன்
நோக்கிலா ரமணன் நோக்கால்
நோயெலாம் ஓடும் அருளே
வாய்க்கிலா வஞ்சர் வாழ்ந்தால்
அய்யநான் அஞ்சும் ஆறே!
வறண்டமண் வாழ்வும் அஞ்சேன்
வாயிலாத் தாழ்வும் அஞ்சேன்
வரவுறும் போக்கும் அஞ்சேன்
வறுமையின் சிறுமைக் கஞ்சேன்
துறந்திடா உறவாம் ரமணன்
தூய்மையால் அருளும் கருணை
பெறற்கிலாப் பிறப்பைக் கண்டால்
அய்யநான் அஞ்சும் ஆறே!

குற்றங்கூடிட்டார்க் கஞ்சேன்
குற்றங்கொள் கூட்டும் அஞ்சேன்
சுற்றமாம் விதியும் அஞ்சேன்
பற்றுவீனைப் படலம் அஞ்சேன்
பெற்றதோர் தவமாம் ரமணன்
பேரருட் கனியாய்க் கனிந்தும்
பெற்றிடாப் பிழையாய்ப் பிறந்தார்க்
கய்யநான் அஞ்சும் ஆறே!

என் அவம் எண்ணற் கஞ்சேன்
என்னையான் நோதற் கஞ்சேன்
என்னவன் பின்யான் செல்ல
ஏசிடும் எத்தர்க் கஞ்சேன்
தன்தவம் தனக்கே கொள்ளாத்
தாரணிக் கருளும் ரமணன்
தன்பலன் கொள்ளார் தாளேன்
அய்யநான் அஞ்சும் ஆறே !
வாழ்ந்துசெல் வயதுக் கஞ்சேன்
வந்துபோம் வாழ்வுக் கஞ்சேன்
வீழ்ந்தெழும் பொழுதிற் கஞ்சேன்
வேறுபொய் தொழுவார்க் கஞ்சேன்
ஆழ்ந்து என் உள்ளில் நோக்கி
அடிவினை மெய்வேர் பேர்த்து
வாழ்விடும் வார்கழல் வணங்கார்க்
அய்யநான் அஞ்சும் ஆறே!
மெய்வழி சேரற் கஞ்சேன்
மேன்மைகொள் நெறிக்கும் அஞ்சேன்
மெய்யெனும் பொய்க்கும் அஞ்சேன்
கண்ணியர் மைக்கும் அஞ்சேன்
துய்யநற் றவத்தால் தனித்தோன்
தூமலர் அடிக்கீழ் துவண்டு
அய்யன்தன் கண்கள் காணில்
அய்யநான் அஞ்சும் ஆறே !
பேட்டி : ஜி.அசோக்
படங்கள் : ஏ.எஸ்.கணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com