Enable Javscript for better performance
கமல் திரைப்பயணம்: 6 முதல் 60 வரை- Dinamani

சுடச்சுட

  
  sk11


  நடிக்கத்தான் வந்திருக்கிறோம் எனத் தெரியாத சிறுவன்... பள்ளிக்கூடம் போக விருப்பமில்லாத மாணவன்... இப்படியான மன நிலையில் தனது பள்ளிக்கூடமாகவும், விளையாட்டு மைதானமாகவும், "களத்தூர் கண்ணம்மா' படத்தின் களத்தை மாற்றிக் கொண்டவர்தான் கமல்ஹாசன். அன்று முதல் இன்று வரை 60 ஆண்டுகள் இந்திய சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமா அரங்கில் இந்தியாவின் அடையாளமாகத் திகழ்கிறார் கமல். திரைத்துறையில் கால்பதித்து 60 ஆண்டுகள் கடந்தோடிய நிலையில் அவர் கடந்த வந்த பாதையின் சில சுவாரஸ்யத் தகவல்களை இங்கே காணலாம்...

  சட்டம் படித்த குடும்பம்

  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசன் - ராஜலக்ஷ்மி தம்பதிக்கு மகனாக பிறந்தார் கமல். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமலின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.

  மருத்துவர் தந்த வாய்ப்பு

  சகோதரர்களின் உயர்கல்விக்காக கமலின் குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தது. அப்போது தனது தாயாருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் சாரதா ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.அப்போது ஒரு முறை சிகிச்சையளிப்பதற்காக அவர் ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரின் வீட்டிற்கு சென்றபோது கமலையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அங்கு கமலின் சுட்டித்தனத்தை பார்த்த மெய்யப்ப செட்டியாரின் மகன் சரவணன் தங்கள் நிறுவனமான ஏவிஎம்மின் "களத்தூர் கண்ணம்மா' படத்தில் நடிக்க வைத்தார். 

  60 ஆண்டு பயணம்

  "களத்தூர் கண்ணம்மா' படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஐந்து. முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், இளைஞனாக, 1970-ஆம் ஆண்டு வெளியான "மாணவன்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 

  1973-இல், வெளியான கே.பாலசந்தரின்"அரங்கேற்றம்' என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. துணைக் கதாபாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்த "சொல்லத்தான் நினைக்கிறன்', "குமாஸ்தாவின் மகள்' போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 

  1974-ஆம் ஆண்டு வெளிவந்த, "நான் அவன் இல்லை' திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.1974-ஆம் ஆண்டு வெளியான "கன்னியாகுமரி' என்ற மலையாளப் படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் கமலுக்கு மலையாள மொழிக்கான ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தது. தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அவர் அறிமுகமான முதல் படம், கே.பாலசந்தர் இயக்கிய "அபூர்வ ராகங்கள்'. இப்படத்திற்காக, அவருக்கு "ஃபிலிம் ஃபேர் விருதும்', "தேசிய விருதும்' கிடைத்தது.

  70-களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். "16 வயதினிலே', "மூன்று முடிச்சு', "அவர்கள்', "இளமை ஊஞ்சல் ஆடுகிறது' போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

  பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான "சிகப்பு ரோஜாக்கள்', "வறுமையின் நிறம் சிகப்பு', "நீயா', "கல்யாண ராமன்', "நினைத்தாலே இனிக்கும்', "ராஜபார்வை', "மூன்றாம் பிறை' ஆகிய படங்கள்  பல விருதுகளைப் பெற வாய்ப்பாக அமைந்தன. அதே சமயத்தில், அவர் ஹிந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். "ஏக் துஜே கே லியே', "சாகர்', "ராஜ் திலக்', கிரஃப்தார்' ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில.

  90-களில் வெளியான "அபூர்வ சகோதர்கள்', "குணா', "தேவர் மகன்', "மகாநதி', "குருதிப்புனல்', "இந்தியன்', "அவ்வை ஷண்முகி' போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன.

  90-இல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான "பத்மஸ்ரீ' விருதை வழங்கியது. .இரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், "ஹே ராம்'. இது அவருடைய சொந்தத் தயாரிப்பாகும் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்த படத்திற்குத் தடை விதித்தாலும், இப்படம் பெருமளவு வெற்றியை அடைந்தது. 

  பின்னர், "தெனாலி', "பம்மல் கே. சம்பந்தம்', "பஞ்சதந்திரம்', "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' போன்ற படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. 

  கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "வேட்டையாடு விளையாடு', கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த "தசாவதாரம்' உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. 

  நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான "விஸ்வரூபம்' பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் பெற்றது வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டி சாதனை படைத்தது. .நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார்.  அடிப்படையிலேயே பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.

  இந்திய அரசு  கௌரவம்

  "மூன்றாம்பிறை', "நாயகன்', "இந்தியன்' ஆகிய படங்களுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார் கமல். மொத்தம் 4 தேசிய விருதுகள், 19 ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் சினிமாத்துறையில் அவர் ஆற்றிய பணிக்காக மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் வழங்கி கௌரவம் செய்துள்ளது. 2016-ஆம் ஆண்டு செவாலியே விருது பெற்றார் கமல்ஹாசன். தமிழில் நடிகர் சிவாஜி கணேசனுக்குப் பின் செவாலியே விருது பெறும் நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். 

  சிறந்த மொழிப்புலமை 

  தமிழகத்தில் பேசப்படும் சென்னை தமிழ் முதல் கொங்கு தமிழ் வரை அத்தனை தமிழையும் சரளமாக எந்த நிமிடத்திலும் பேசி ஆச்சரியப்படச் செய்வார். அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பெரும்பாலான இந்திய மொழிகளை பேச வல்லவர். கமல்ஹாசன் நடிப்பில் இதுதான் சிறந்தது என எண்ணமுடியாத அளவுக்கு பல படங்களை கொடுத்திருக்கிறார்.

  "நாயகன்', "குணா', "அபூர்வ சகோதர்கள்', "வறுமையின் நிறம் சிவப்பு', "மூன்றாம் பிறை', "மகாநதி', "அன்பே சிவம்', "தசாவதாரம்', "விருமாண்டி', "சலங்கை ஒலி', "தேவர் மகன்', "வாழ்வேமாயம்', "சகலகலா வல்லவன்', "மைக்கேல் மதன காமராஜன்', "சதிலீலாவதி', "சிவப்பு ரோஜாக்கள்', "அவ்வை சண்முகி', "உன்னால் முடியும் தம்பி', "இந்தியன்', "ஹேராம்', "தெனாலி', "புன்னகை மன்னன்', "ஆளவந்தான்', "நம்மவர்', "பாபநாசம்', "விஸ்வரூபம்' உள்ளிட்ட படங்கள் சட்டென நினைவுக்கு வருபவை.

  திரைத்துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமல் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கிறார். கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படம் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

  இலக்கிய ஆர்வம் 

   

  தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் "மய்யம்' என்ற பத்திரிகையை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்விதழைக் "கமல்ஹாசன் நற்பணி மன்றம்' வெளியிட்டு வருகிறது. தனது ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, குழந்தை வசவு, காஷ்மீர் மோதல், போதை மருந்துப் போன்ற சமுதாயப் பிரச்னைகளை, தனது புத்தகமான "தேடித் தீர்ப்போம் வா' என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.

  உலக நாயகன்

  நடிகர் கமல்ஹாசன் ஆண்டவர், நம்மவர் என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலின் சினிமாத்துறையின் 60 ஆண்டு சாதனைகளை ஒரே நாளில் சொல்வதென்பது முடியாத ஒன்று. 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகளை சினிமாத்துறைக்காக அர்பணித்த மிக குறைந்த மனிதர்களில் கமலும் ஒருவர் என்பதில் பெருமை கொள்கிறது தமிழகம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai