வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள்!

"சினிமாவுக்கு முன் பின் சம்பந்தம் இல்லாத குடும்பம். கால் போனபோக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதில் இருந்தே இந்த சினிமா மேல் சிறு ஆசை. ஆனால், படிப்பு முக்கியம் என
வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள்!

"சினிமாவுக்கு முன் பின் சம்பந்தம் இல்லாத குடும்பம். கால் போனபோக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதில் இருந்தே இந்த சினிமா மேல் சிறு ஆசை. ஆனால், படிப்பு முக்கியம் என அப்பாவும், அம்மாவும் சொன்னார்கள். அதற்காக டாக்டர் படிப்பு. அவ்வப்போது வருகிற படங்களின் பெரும் வெற்றி, அது தரும் உத்வேகம் இந்தப் பயணத் தொடக்கத்துக்கு பெரும் பலம்.
 சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றி தீவிரமாக தெரிந்து கொண்டேன். ஆனால், சினிமா வாசலுக்கான திறவுகோல் என்னிடம் இல்லை. முதல் வாய்ப்பில் ஆயிரம் கஷ்டங்கள். ஒரு வழியாக "தரமணி' படம் நல்ல அறிமுகம் தந்தது. கமர்ஷியலாகவும் பெரும் வெற்றி, வசூல்.... நல்ல சினிமாவின் பக்கமும் நின்றது.
 எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் எனக்கு குரு, தெய்வம், ஆசான்.'' புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் வசந்த் ரவி. "தரமணி' படத்தின் மூலம் அறிமுகம் கொடுத்தவர். அடுத்து "ராக்கி' படத்துக்காக காத்திருக்கிறார்.
 "தரமணி' படத்துக்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முக்கியமாக, த்ரில்லர் ஜானர், காதல் படங்களில் நடிக்கக் கேட்டார்கள். எந்த மாதிரியான ஜானரில் நடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். நிறைய கதைகள் கேட்டேன். 50 கதைகள் வரை கடந்து இருப்பேன். ஒரு கதையில் மனசு நிலைத்து கிடந்தது. அதுதான் ஆக்ஷன் ஜானரில் திரைக்கதை வந்து சேர்ந்தது. எனக்கு இதை ஆச்சர்யத்தைதான் கொடுத்தது. ஏனென்றால், இரண்டாவது படத்தில் நடிக்கிற ஒரு ஹீரோவுக்கு இயக்குநர் ஆக்ஷன் கதை சொல்ல கொஞ்சம் யோசிப்பார்கள்.
 கதை கேட்டவுடன் இந்தக் கதையை விட்டு விடக் கூடாது என்று தோன்றியது. இது ரொம்பவே சந்தோஷம். அதுதான் இந்த "ராக்கி' . படத்தின் இயக்குநர் அருணுக்கு முதல் படம் இது. ரொம்பத் திறமைசாலி. "இறுதிச் சுற்று' படத்தில் வந்த வசனங்களில் ஈர்த்தவர். தியாகராஜன் குமாராஜாவின் உதவி இயக்குநர். படப்பிடிப்பு முடிந்து விட்டது. சென்னையில நடக்கிற கதைக்களம். படத்தில் முக்கியமான பாத்திரத்தில் ரவீனாரவி, ரோகிணி நடிக்கிறார்கள். இன்னொரு விஷயம் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா சார் நடிக்கிறார். படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும்.

சினிமாவுக்கு வந்த பலருக்கும் நிறைய கதைகள் இருக்கும். ஆனால், எனக்கென்று அப்படி ஒன்றும் இல்லை. துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கிறது. நான் பார்த்து பழகின மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள். நல்ல நல்ல அனுபவங்கள் கொடுத்தார்கள். சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் இருந்த குழப்பங்களை புரிந்துக் கொள்ள துணை நின்றார்கள். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது. "இவன் பெரிய ஆளு...' னு சில பேர் எடைப் போட்டார்கள். சிலர் மனசை பார்த்துப் பார்த்து பழகினார்கள். இப்படி வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள். எல்லோருக்கும் நன்றிகள். ஒரே படம்தான் நடித்திருக்கிறேன். அடுத்த படத்துக்கு வெயிட்டிங்.
 பெரிய இடங்களுக்கு இன்னும் பயணப்படவில்லை. அதற்குள் நிறைய பேரின் அன்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. "இயல்பா இருக்கப்பா...'னு நிறைய பேர் சொல்லுவதில் மகிழ்ச்சி. இவற்றையெல்லாம் விட போராடி வெற்றிப் பெற துடிக்கும் உதவி இயக்குநர்கள், நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் எல்லோருக்கும் என் இடம் பிடித்திருக்கிறது. ஆறுதலாக வந்து விழுகிற வார்த்தைகள் எல்லாம் அற்புதம். இதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன்.
 காலம் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நிற்க கூடிய படங்களில் இருக்க வேண்டும். நான் பிரபலத்தின் வாரிசாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைக் கொண்டாடவும், திட்டி கொட்டவும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அப்படி விஷயம் தெரிந்தவர்கள் கூடவே இருந்தால், இங்கே யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். சினிமாவில் வேலைக்கு காசு இல்லை. பேருக்குத்தான் காசு. லேபிள்தான் இங்கே முக்கியம் என்று நினைக்கிறேன். வதவத என்று நிறைய படங்களில் நடிப்பதை விட, நாலே நாலு நல்லப் படங்களில் நடித்தால் போதும். அந்த எண்ண ஓட்டத்தில்தான் ஓடிக் கொண்டே இருக்கிறேன். பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை.
 கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்.
 நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள், நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. சினிமா ஒரு பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான். ஆனால், நம்பிக்கையோடு உழைத்தால், ஆசீர்வதிக்கப்பட்ட இடம் .உன்னதமான நேரம் இது. "தரமணி' படத்துக்குப் பிறகு மிஷ்கின் சார் என்னிடம் பேசினார்.
 "நம்ம ஒரு படம் கண்டிப்பா பண்ணணும்'னு சொன்னார். அவர் படத்தில் நடிக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன். இது மாதிரி எல்லாமும் சாத்தியப்படும்''நம்பிக்கையாக பேசி முடிக்கிறார் வசந்த் ரவி.
 - ஜி.அசோக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com