Enable Javscript for better performance
மூன்று முகம் கொண்ட எழுத்தாளர்!- Dinamani

சுடச்சுட

  
  PONNELAN

  பெருங்கொண்டாட்டமாய் நடந்தேறியிருக்கிறது பொன்னீலன் - 80. ஒரு படைப்பாளி தான் வாழும் காலத்தில் கொண்டாடப்படுவது தான் எத்தனை சிறப்பு!
   கன்னியாகுமரி மாவட்டம் தந்த ஆகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன் என்ற இயற்பெயர் கொண்ட பொன்னீலன். அவருக்கு அகவை 80 பிறந்ததையொட்டியும், படைப்புலகில் 55 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டியும் அவரது வாழ்வு சார்ந்தும், படைப்புலகம் சார்ந்தும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது நாகர்கோவில் மண்.
   ஒரு பள்ளிக்கூட ஆசிரியராய் இருந்து படைப்பாளியாய் மாறிவிட்ட பொன்னீலனின் முதல் சிறுகதைத் தொகுதி "ஊற்றில் மலர்ந்தது' 1978- இல் வெளிவந்தது. இவர் எழுதிய "கரிசல்' நாவல் இவரை இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டியது. 1992 -இல் வெளிவந்த "புதிய தரிசனங்கள்" நாவல் இவருக்கு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுத் தந்தது. 2010 -இல் வெளிவந்த "மறுபக்கம்" நாவல் தென்திருவிதாங்கூர் மற்றும் இன்றைய குமரி மாவட்டத்தின் மறுபக்கத்தைப் படம் பிடித்துக் காட்டியது. பொன்னீலன் எழுதிய "உறவுகள்" என்ற சிறுகதை இயக்குநர் மகேந்திரனால் "பூட்டாத பூட்டுகள்" என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. வாஞ்சை நிறைந்த முகம். எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளும் கரங்கள். இளம் எழுத்தாளர்களை உச்சி முகர்ந்து கொண்டாடுவது என அவருக்கான தனித்த அடையாளங்கள் வேறு எவருக்கும் வாய்க்காதது.
   எழுத்தாளர் ராம் தங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடந்தேறிய "பொன்னீலன் 80' கொண்டாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தொடங்கி வைத்து, உரையாற்றிய போது,
   "அது கம்பராமாயணத்தில் சொல்லப்படும் நட்புக்கு இணையானது. பொன்னீலன் சிறந்த எழுத்தாளர் என்பதைத் தாண்டி, சிறந்த முற்போக்கு சிந்தனைவாதி. அவர் வேலைப் பார்த்த இடங்களைக் கதைக்களங்களாக்கியிருக்கிறார். ஒரு பள்ளி ஆசிரியர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் அவர் ஓர் உதாரணம். இது குறித்து தினமணி பத்திரிகை கூட ஒருமுறை அவரைப் பாராட்டி எழுதியிருந்தது. அவரது மறுபக்கம் நாவலுக்காக நீண்ட பல ஆண்டுகளாக உழைத்தார். அந்த நாவல் எழுதுவதற்காக மக்களோடு மக்களாக அவர் வாழ்ந்தார்'' என்றார்.
   தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கேரளாவிலிருந்தும் வந்த படைப்பாளிகள் பொன்னீலனின் எழுத்தையும், பண்பு நலன்களைக் குறித்தும் ஆற்றிய உரைகளில் கொஞ்சமும் மிகையில்லை.
   எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது,
   "குமரி மாவட்டம் மிகச்சிறிய மாவட்டம், ஆனால், இங்கு ஏராளமான எழுத்தாளர்கள் இருக்கின்றனர். சாலையில் இரண்டு பேரைப் பார்த்தால் அதில் ஒருவர் கவிஞராக இருப்பார். குமரி மாவட்டத்தைப் போன்று வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் ஏராளமான பத்திரிகைகள் வெளிவருகின்றன. இந்த அலையைத் தொடர்ந்து இங்கே நிலைநிறுத்தக்கூடிய முன்னோடிகளில் ஒருவர் பொன்னீலன். இங்கே எழுதக் கூடியவர்கள் எல்லோருமே பெருந்தச்சனான அவரைத் தொட்டு வாழ்த்து வாங்கி எழுதக் கூடியவர்கள்தாம்.
   கடந்த 50 ஆண்டுகால அவரது எழுத்துகளில் அவரது மூன்று முகங்களை நான் பார்க்கிறேன். அவரது "கரிசல்' நாவல் சரியாக அளவெடுத்து எழுதிய ஒரு முற்போக்கு நாவல். தமிழில் புதிய அலைகளை உருவாக்கிய நாவல் அவரது "புதிய தரிசனங்கள்' நாவல். அவரது மூன்றாவது நாவலான "மறுபக்கம்' நாவல், முதல் இரண்டு நாவல்களுக்கும் இல்லாத தனித் தன்மை கொண்டது. பொன்னீலன் மூன்று வெவ்வேறு முகங்களை கொண்ட எழுத்தாளர் எனச் சொல்லலாம். குமரி மாவட்டத்தில் 50 ஆண்டு கால அரசியல், சமூகவியல், பண்பாட்டுத் தளத்தின் ஓர் ஓரத்தில் பொன்னீலன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது எழுத்துக்கள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடை பெற வேண்டும்''
   விழாவில் காலையிலிருந்தே தனது மனைவி கனியம்மாளுடன் அமர்ந்தவாறு பொன்னாடைகளையும், பூங்கொத்துகளையும், மலர் மாலைகளையும் பெற்றுக் கொண்டிருந்த பொன்னீலன் தனது ஏற்புரையில் பேசுகையில்,
   "கரிசல் காட்டு மக்கள்தாம் என்னை இலக்கியவாதியாக மாற்றினார்கள், அவர்கள் கூறிய கதைகளைத் தான், நான் எழுதினேன். கலை இலக்கியப் பெருமன்றத் தொடர்பும், பேராசிரியர் நா. வானமாமலையின் வழிகாட்டலும் எனக்குப் பேருதவியாக இருந்தன. எனக்குள் எப்போதும் ஒரு மனித நேயப்பார்வை இருக்கிறது. நண்பர்களுடனான உரையாடல்கள் என்னை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. ஒவ்வொருவரும் நேரத்தை சரியாகப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு இதனைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். இந்த நிகழ்வை பன்முக விழாவாக மாற்றிய எழுத்தாளர் ராம்தங்கத்திற்கு நன்றி'' என்றார்.
   நாகர்கோவில் நகரம் கண்ட நல்லதொரு இலக்கியத் திருவிழாவாகப் பொன்னீலன் -80 அமைந்தது!
   - லாசர் ஜோசப்
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai