ஆசைப்பட்டதை ரஜினி செய்து காட்டினார்!

80 ஆண்டுகளாக இவரின் சுவாசமே சினிமாதான்.  16 படங்களைத் தயாரித்தவர்.
ஆசைப்பட்டதை ரஜினி செய்து காட்டினார்!

80 ஆண்டுகளாக இவரின் சுவாசமே சினிமாதான்.  16 படங்களைத் தயாரித்தவர். 4 படங்களை இயக்கியுள்ளார். "இது நம்ம ஆளு' படத்தில் பாக்கியராஜ் உடன் நடித்தவர்.   40 ஆண்டுகளுக்கு முன் ரஜினியை "பைரவி' படத்தின் மூலம் ஹீரோவாக்கியவர். இப்படி  சினிமாவில் நீண்ட  முகவரி கொண்டவர் தான் கலைஞானம்.


கலைஞானத்தின் வாழ்க்கைப் பயணம் பல ஏற்ற இறக்கங்களை கொண்டது. 

உசிலம்பட்டி அருகில் உள்ள  ஏழுமலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் . அப்போது அங்கிருந்த ஜமீன் குடும்பத்துக்குக்  கோடாங்கியாக இருந்தவர்கள் இவரின் மூதாதையர்கள். மழை எப்போது வரும் என குறி பார்த்து சொல்லுவதில் இவரின் தாத்தா ராமசாமி கை தேர்ந்தவர்.  1930 - ஆம் ஆண்டு பிறந்த கலைஞானம், சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர். அம்மா இட்லி விற்று  இவரை வளர்த்தார். அப்போது இட்லி விற்ற காசை திருடிக் கொண்டு சினிமாவுக்குப் போனவருக்கு, வீட்டில் அடி, உதை. 

அதன் பின் அந்தத் தியேட்டர் உரிமையாளரிடமே சென்று வேலை கேட்டார். முறுக்கு விற்கிற வேலை கிடைத்தது. முறுக்கு விற்றுக் கொண்டே, சுமார் 500 படங்களுக்கு மேல் பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது.  வளர்ந்ததும் பிழைப்புக்காக, 1952-ஆம் ஆண்டு சென்னைக்கு  வந்தார்.  சினிமா அதிகம் பார்த்த அனுபவம் இருந்ததால், கதை சொல்லுவதில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. படிப்படியாக வளர்ந்து ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வளர்ந்தார். 

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறை கண்ட கதாசிரியர். திரைக்கதையில் தொய்வு என்றாலோ சரியான திருப்பம்  இல்லையென்றாலோ லாஜிக் இடித்தாலோ இவரைத்தான் முதலில் அழைப்பார்கள். தென்னிந்திய சினிமாவே சென்னையில் இருந்த காலகட்டத்தில்,  ஸ்டூடியோ அதிபர்கள் எல்லோருக்கும் நெருக்கமானவராக இருந்தார் கலைஞானம் . ஏவி.எம்., வாஹினி, ஜெமினி என அந்தக் காலகட்டத்தில் சினிமா தயாரிப்பில் முன்னணியில் இருந்த நிறுவனங்களின் கதை விவாதங்களில் இவர் நிச்சயமாக  இடம் பெற்றிருப்பார்.

தேவர் ஃபிலிம்ஸ் கதை இலாகாவில் பணியாற்றி வந்த கலைஞானத்தை "நீ தனியா படம் பண்ணு. நான் உனக்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்து தர்றேன்' எனச் சொன்னார் தேவர். இதன்படிதான் "பைரவி' படத்தை ரஜினியை கதாநாயகனாக வைத்து தயாரித்தார் கலைஞானம். ஆனால், ரஜினியை ஹீரோவாக்கியதில் தேவருக்கு அப்போது உடன்பாடில்லை. "ஜெய்சங்கரை ஹீரோவாப் போடு, ரஜினியை வில்லனாகப் போடு' என்றார். ஆனால், ரஜினிதான் ஹீரோ என்பதில் கலைஞானம் உறுதியாக இருந்ததால். அந்தப் படத்துக்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்து தர மறுத்துவிட்டார் தேவர். இருப்பினும், விடாமுயற்சியோடு போராடி "பைரவி' படத்தைத்  தயாரித்தார் கலைஞானம். அப்போது தெரியாது ரஜினி இத்தனை பெரிய நட்சத்திரமாக வளர்வார் என்று. 

வெறும் 5 ஆயிரம் சம்பளத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினியை சந்தித்து பைரவி கதையைச் சொல்லி, "25 ஆயிரம் சம்பளம் தருகிறேன்' என புக் செய்தார் கலைஞானம்.  ஆனால், ரஜினியோ "எனக்கு வில்லனாக நடிக்கத்தான் ஆசை. அதுதான் எனக்கு சரியாக வரும். ஹீரோ என்றால் அதில் பல கஷ்டங்கள் உண்டு'' என வாய்ப்பை மறுத்து விட்டார். மறுநாள் கலைஞானம் ரஜினியைப் பார்க்கப் போனார்.

"சார்... 50 ஆயிரம் ரூபா சம்பளம் வேணும்... அட்வான்ஸா ஐயாயிரம் குடுங்க' என்று சொன்னார் ரஜினி. உடனே அவர்..."இந்தாங்க அட்வான்ஸ்'னு 30 ஆயிரம் ரூபாயை மொத்தமாகக் கொடுத்து அசத்தியதோடு... "உங்களுக்கு ஜோடி ஸ்ரீப்ரியா' என்றும் சொன்னார். "அடேங்கப்பா! ஆட்டுக்கார அலமேலு புகழ் நடிகையா?' என்று ரஜினிக்கு வியப்பு. அந்த வியப்பு முடியும் முன்னமே, "சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் ஸ்ரீகாந்த் உங்களுக்கு வில்லனாக நடிக்கிறார் என்றார் கலைஞானம்.  வாய்ப்பைத் தட்டிக் கழிக்கப் பார்த்த ரஜினி, மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.  இதுதான் ரஜினி ஹீரோவான கதை. மூலகர்த்தா முழுக்க முழுக்கக்  கலைஞானம். 

பொதுவாகத் திரைத்துறையில் உச்சம் தொட்ட பலர் காலத்தின் மாற்றத்தால், வறுமையின் பிடியில் சிக்கி தவிப்பதுண்டு. ஆனால் தங்களின் நிலையை வெளியே சொல்லாமல் நம்மால் உச்சம் தொட்டவர்கள் என்றாவது ஒரு நாள் திரும்பிப் பார்க்க மாட்டார்களா?  என்று ஏக்கத்துடன் கோடம்பாக்கத்தை சுற்றி வருவதுண்டு. சினிமாவில் இத்தனை சாதனைகள் படைத்தும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார் கலைஞானம் என்பது சினிமாகாரர்கள் அனைவரும் அறிந்ததே. அதனை மேடை யில் பேசி அவரின் நிலையை மாற்றிய பெருமை நடிகர் சிவகுமாரைச் சேரும். 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. கலைஞானத்தின் 90-ஆவது பிறந்த நாளையொட்டி இயக்குநர் பாரதிராஜா ஒருங்கிணைத்திருந்த அந்த விழாவில் ரஜினி, வைரமுத்து, தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் பேச வந்த நடிகர் சிவகுமார், ""சினிமாவில் இவ்வளவு சாதனைகள் புரிந்த கலைஞானம் இன்னும் சொந்த வீடில்லாமல் இருக்கிறார். அவருக்கு தமிழக அரசு ஒரு வீடு வழங்க வேண்டும்'' என்ற கோரிக்கையை முன்வைத்தார். 

இதை கவிஞர் வைரமுத்துவும் வரவேற்றார். அடுத்துப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "உடனடியாக முதலமைச்சரின் கவனத்துக்கு இந்தக் கோரிக்கை எடுத்து செல்லப்படும்'  என அந்த மேடையிலேயே அறிவித்தார். இறுதியாகப் பேச வந்த ரஜினிகாந்த், ""தமிழக அரசுக்கு அந்த வேலையைக் கொடுக்க மாட்டேன். நானே அவருக்கு  வீடு வாங்கித் தர இருக்கிறேன்'' என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகை ஓன்றை செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில்  கொடுத்து விட்டார்.  , சென்னை விருகம்பாக்கம் வெங்கடேசன் நகர், 34 விநாயகம் தெரு,"அமுதினி ஃபிளாட்ஸ்',    முகவரியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்  1,320 சதுர அடி பரப்பில் 3 படுக்கையறைகளுடன் கூடிய வீடு தரைத்தளத்தில் வீடு பார்க்கப்பட்டது.  இயக்குநர் பாக்யராஜ் அந்தப் பணிகளை முன்நின்று செய்துவந்தார். இந்த வீட்டின் மொத்த மதிப்பு ரூ. 48 லட்சம்.  இதர பணிகள் முடிந்ததும், கலைஞானத்திடம் வீடு ஓப்படைப்பட்டது. 

"ரஜினி வீட்டுக்கு வந்து குத்துவிளக்கேற்றி வைத்தால் நன்றாக இருக்கும்' என்று கலைஞானம் விருப்பம் தெரிவித்திருக்கிறார். "தர்பார்' படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிக்கு, கலைஞானத்தின் விருப்பம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, ரஜினியின்  வீட்டிலிருந்து போன் வந்தது.  அதில், " ரஜினி உங்கள் வீட்டுக்கு வருவார்' என்று தகவல் சொல்லப்பட்டது. சொன்னபடியே,  சரியான நேரத்தில் விருகம்பாக்கம் வீட்டுக்கு ரஜினி வந்தார். அவரை பொன்னாடை போர்த்தி கலைஞானம் வரவேற்றார். பின்னர், வீட்டின் பூஜையறைக்குச் சென்று குத்துவிளக்கேற்றிய ரஜினி, பாபா படம் ஒன்றை பரிசளித்தார். பின்னர், கலைஞானம், தனது குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகப்படுத்தி, அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து கலைஞானத்திடம்  கேட்ட போது, "வீட்டை சுற்றிப் பார்த்த ரஜினி, "வீடு தெய்வீகமாக இருக்கு' என்றார். குத்துவிளக்கேற்றிய ரஜினிக்கு, இனிப்புகள் கொடுத்தோம். அவர் வந்திருந்து விளக்கேற்றியதில் மகிழ்ச்சி. வீடு வாங்கி கொடுத்தார், விளக்கும் ஏற்றி வைத்தார்' என்றார் நெகிழ்ச்சியாக.

மேலும் அவர் பேசும்போது, "நான் ரஜினிக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தேன் என்பதற்காக எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அது படி செய்து விட்டார். கடைசி காலத்தில் வீடு வாங்கிக் கொடுத்ததை கூட சிலர் கிண்டல் செய்தனர். நான் அதை பொருட்படுத்தவில்லை.  ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும்போது அவர் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக மாறுவார் என்று நான் நினைத்துகூடப் பார்க்கவில்லை. ரஜினியை கதாநாயகனாக மாற்றும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை. நான் செய்தேன். பின்னர் தான் மற்றவர்கள் செய்தனர். ரஜினி சொன்னதை செய்வார் என்று ரசிகர்கள் சொன்னார்கள். அதுவே நடந்திருக்கிறது. ரஜினி அரசியல்வாதி ஆவதற்கு நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.

எம்.ஜி.ஆருக்கு வந்த அதே நிர்பந்தம். 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் இன்று முதல்வர் ஆகியிருப்பார்.

அவர் மக்களை ஏமாற்ற கூடாது, ஏமாற்ற மாட்டார்' என்று  ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆரூடம் சொல்லி முடிக்கிறார் கதாசிரியர் கலைஞானம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com