Enable Javscript for better performance
என்றும் இருப்பவர்கள்! - 31- Dinamani

சுடச்சுட

  
  sk6

   

  ""எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும் என்று நான் எழுத ஆரம்பித்த போதே எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை. இவையிரண்டும் இல்லாமல் எழுதுவதில் தான் என்ன பயன்? படிப்பதில்தான் என்ன பயன்?'' என்று கேட்ட நவீன தமிழ் எழுத்தாளர் விந்தன். இயற்பெயர் கோவிந்தன்.

  எழுத்துக்குப் பயன் உண்டு; வாசிப்புக்கு அர்த்தம் இருக்கிறது என்று நம்பிய அவர் 1916-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் உள்ள நாவலூரில் பிறந்தார். படிக்க வசதியில்லை. ஆரம்பப் படிப்போடு படிப்பு முடிந்துவிட்டது. இளம் வயதிலேயே சென்னைக்கு வந்தார். சென்னையில் சிறுவயதினருக்குப் பலவிதமான வேலைகள் இருந்தன. அவர் சிறிது காலம் கருமான்பட்டறையில் சம்மட்டி அடித்தார். கொஞ்ச காலம் பெரிய மேட்டில் இந்த  ஓவியப்பள்ளியில் சேர்ந்து சித்திரம் வரைய கற்றார். ஆனால், தொடர்ந்து கற்க முடியவில்லை. 

  சென்னை நகரில் பல இடங்களிலும் அச்சுக்கூடங்கள் -பத்திரிகைகள், புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், பஞ்சாங்கங்கள், புராணக் கதைப் புத்தகங்கள் என அச்சிட்டு வந்தன. அது புதிய தொழில். சிறிதளவு படித்தவர்கள் அச்சுத் தொழிலில் சேர்ந்தார்கள். அச்சிடப்படும் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார்கள். மொழியை வழுவில்லாமல் இலக்கணப்படி கற்றுக்கொண்டார்கள். அவர்களில் சிலர் அரசியல்வாதியானார்கள்; சிலர் கதாசிரியர்களாக மாறினார்கள்.

  அவர்களில் ஒருவர் விந்தன். அவர் பல அச்சகங்களில் வேலை பார்த்துக்கொண்டே சிறுகதைகள் எழுதினார். அது அவர் வேலை பார்த்தப் பத்திரிகைகளில் வந்த கதைகளைத் தொடர்ந்து வந்தவை இல்லை; வேறுபட்டக்கதைகள்.

  1941-ஆம் ஆண்டில் "கல்கி' கிருஷ்ணமூர்த்தியும், சதாசிவமும் "கல்கி' இதழைத் தொடங்கினார்கள். சொந்தமாக அச்சகம் ஏற்படுத்தி இருந்தார்கள். அதற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். ராஜாபாதர் என்பவர் சிபாரிசின் பேரில் விந்தன் "கல்கி' அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். 

  அச்சகத் தொழிலாளியான விந்தன் கதைகள் எழுதக்கூடியவர் என்பது தெரிந்ததும் "கல்கி' கதைகள் எழுத வாய்ப்புக் கொடுத்தார். அவர் எழுதிய கதைகள் கருத்திலும், கதைச் சொல்லும் பாணியிலும் மொழி நடையிலும் வேறுபட்டிருந்ததால் வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.

  விந்தன் இலக்கிய அழகியல் என்பது, அவர் இலக்கியம் படித்து-தமிழ்ப் பத்திரிகைகளின் கதைகள் படித்து பெற்றதில்லை. இளம் வயதில் சமூக வாழ்க்கையில் இருந்து பெற்றதை எல்லாம் கதைக்கான அழகியலாக மாற்றிக் கொண்டார். அவர் சோவியத் எழுத்தாளர் கார்க்கியைத் தமிழில் படித்து இருந்தார். அவருக்கு உத்வேகம் அளித்த எழுத்தாளர் என்றால் அது "தாய்' எழுதிய கார்க்கிதான். ஆனால் அவர் கம்யூனிஸ்டு முற்போக்கு எழுத்தாளர் இல்லை. காங்கிரஸ் அகிம்சாவாதியும் கிடையாது. திராவிட சிந்தனையாளருமில்லை. ஆனால் சுயமரியாதைவாதி. மனிதநேயம் மிக்கவர். எழுத்து என்பது எல்லா மக்களின் நன்மைக்காக என்பதை இலட்சியமாகக் கொண்டவர்.

  1946-ஆம் ஆண்டில் மதராஸ் மாகாண அரசு தமிழ் வளர்ச்சிக் கழகத்தை ஆரம்பித்தது. அதன் முதல் பரிசு விந்தனின் சிறுகதைத் தொகுப்பான "முல்லைக்கொடியாள்'- தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. அப்பொழுது அவருக்கு முப்பது வயதாகியிருந்தது." முல்லைக்கொடியாள்' நூலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருந்தார். 

  விந்தன் தமிழ்ச் சமூகம் மதிக்கும் ஒரு படைப்பு எழுத்தாளராக இருந்தார். திராவிட சிந்தனையாளரான முருகு சுப்பிரமணியம் புதுக்கோட்டையில் இருந்து "பொன்னி' என்ற இலக்கிய இதழைக் கொண்டு வந்தார். 1947- ஆம் ஆண்டில் வெளிவந்த "பொன்னி' மாற்று இலக்கிய மரபை முன்னெடுத்துச் சென்றது. விந்தன் பொன்னியில் "கண்திறக்கும்' என்று எழுதினார். அதற்காக "நக்கீரன்' என்று பெயர் வைத்துக் கொண்டார். 

  1950-ஆம் ஆண்டில் "கல்கி'யில் அவர் "பாலும் பாவையும்' என்ற தொடர்கதை எழுதினார். அதுவே அவர் நாவல்களில் அடிக்கடி எடுத்துச் சொல்லப்படும் ஒன்றாக இருக்கிறது. அதோடு விந்தன் "பாலும் பாவையும்' நாவல் வழியாகவே அறியப்படும் எழுத்தாளராக இருக்கிறார்.

  சினிமாவிற்கும், இலக்கியத்திற்கும் எப்போதும் உறவு உண்டு. சினிமா என்பதே எழுதப்பட்ட கதைகளில் இருந்து உருவாவதுதான். சினிமா ஜொலிக்க ஆரம்பித்ததும், உலகம் முழுவதிலும் பல எழுத்தாளர்கள் அதற்குள் சென்றார்கள். சில எழுத்தாளர்களைச் சினிமா இழுத்துக்கொண்டு சென்றது. தமிழில் வ.ரா புதுமைபித்தன், பாரதிதாசன் எல்லாம் சினிமாவால் வசீகரிக்கப்பட்டு உள்ளே சென்றவர்கள் தான். 

  1954-ஆம் ஆண்டில் டி.ஆர்.ராமண்ணா, அவர் சகோதரி டி.ஆர்.ராஜகுமாரியின் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் என்ற சினிமா கம்பெனி தயாரித்த "கூண்டுக்கிளி' என்ற படத்திற்கு வசனமும், மூன்று பாடல்களும் எழுதினார். "கூண்டுக்கிளி' சிவாஜிகணேசன் எம்.ஜி. ராமச்சந்திரன் இணைந்து நடித்தப் படம். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

  விந்தன் அடிப்படையில் கலைஞர்தான் என்றாலும் அவர் பகட்டான சினிமா ஆசாமி இல்லை. பத்திரிகை, எழுத்து என்பதின் மீது அவர் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். தன் படைப்புகளை முன்னெடுத்துச் செல்வது போல-தான் நம்பும் எழுத்தாளர்கள், படைப்புகளையும் மக்களிடம் கொண்டு செல்லப் பத்திரிகை வேண்டுமென்று நம்பினார்.

  1954-ஆம் ஆண்டில் "மனிதன்' என்ற இலக்கிய சமூக இதழைத் தொடங்கினார்.ஜெயகாந்தன் அவரோடு சேர்ந்திருந்தார். நிறைய எழுதினார். பத்திரிகைக்குப் பெயரும் வரவேற்பும் இருந்தது. ஆனால் சரியான நிர்வாகம் இல்லை. பத்திரிகை ஏஜெண்ட்களிடம் இருந்து பணம் வசூலிக்க முடியவில்லை. எனவே மனிதன் நின்று போய்விட்டது.

  அவர் எழுத்து இலக்கியம் என்று செயல்படுகிறவர். "மனிதன் இதழ்' நின்று போனதும் "புத்தகப் பூங்கா' என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். இலக்கிய உலகத்திலும்,  சினிமா உலகத்திலும் தனக்கு உவப்பான எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டார். புத்தகப் பூங்கா வெளியிட்ட முதல் புத்தகம் திரைப்பட வசனகர்த்தா இளங்கோவன் எழுதிய "சாவே வா'.

  அவரின் புத்தகப் பூங்கா வெளியீடுகளில் நிலைத்து நிற்பது ஜெயகாந்தனின் "ஒரு பிடிசோறு'. 

  1964-ஆம் ஆண்டில் அமைந்தகரையில் இருந்த "பாலகிருஷ்ணன் நியூஸ்மார்ட்' புத்தகக்கடையில் வார, மாத இதழ்கள் வாங்கிக் கொண்டு இருந்தேன். சில இதழ்களை எடுத்துப் புரட்டிப் பார்ப்பதும், படிப்பதும் கூட உண்டு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அமைந்தகரை பேருந்து நிலையம், கிளை நூலகம், சினிமா தியேட்டர், சலூன், ஓட்டல்கள், காய்கறி மார்க்கெட் கொண்ட கிராமமாக இருந்தது.

  காலைப் பொழுதில் பத்திரிகைகள், புத்தகங்களை படிக்கிறவர்கள் பாலகிருஷ்ணன் நியூஸ் மார்ட் முன்னே கூடுவார்கள். அரசியல் இலக்கியம் பற்றிப் பேசுவார்கள். நான் அவர்கள் பேச்சையெல்லாம் பல நாட்கள் கேட்டுக் கொண்டிருந்தேன்.

  ஒரு நாள் பாலகிருஷ்ணன், ""எழுத்தாளர் விந்தனைத் தெரியுமா?'' என்று கேட்டார். ""அவர் எழுதிய "முல்லைக் கொடியாள்', "பாலும் பாவையும்' படித்திருக்கிறேன். ஆனால்,  அவரைப் பார்த்தது இல்லை. பழக்கம் கிடையாது'' என்றேன்.

  ""அவர் காலையில் கடைக்குத் தினம் வருகிறாரே. உனக்குத் தெரியுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல. சினிமா பாடலாசிரியர். கதை வசனகர்த்தா. ரொம்ப வித்தியாசமான மனிதர்.''

  ""நாளை காலையிலேயே வந்துவிடு. நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்'' என்றார்.

  அடுத்த நாள் காலையில் ஏழு மணி வாக்கில் பாலகிருஷ்ணன் நியூஸ் மார்க்கெட்டில் விந்தனைச் சந்தித்தேன். கையில் நான்கைந்து பத்திரிகைகளும், வாயில் சிகரெட்டுமாக இருந்தார். அவருக்கு நாற்பத்தெட்டு வயதாகி இருந்தது. நான் இருபத்து நான்கு வயதில் இருந்தேன். வெறும் வாசகனாக. பாலகிருஷ்ணன் என் கையைப் பிடித்து விந்தன் முன்னே அழைத்துக் கொண்டு போய் ""இவர் பெயர் கந்தசாமி. அரும்பாக்கத்தில் இருக்கிறார். பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாம் படிக்கிறார். உங்கள் "பாலும் பாவையும்', " முல்லைக் கொடியாள்' எல்லாம் படித்து இருக்கிறார்.''என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

   ""அப்படியா?ரொம்ப சந்தோஷம்'' என்றவர் என் வீடு, குடும்பத்தினர், படிப்பு, வேலை பற்றி விசாரித்தார். கடைசியாக, "எழுதுறியா?' என்று கேட்டார்.

  நான் பதில் சொல்லவில்லை.

  ""தைரியமா எழுது. ஆனால் எவன மாதிரியும் எழுதாதே'' என்று சொன்னார்.

  நான் கேட்டுக் கொண்டேன். பின்னர் அவரும் நானும் நெருக்கமாகிவிட்டோம். அவர் எனக்கு தேநீர் வாங்கிக் கொடுத்தார். அவர் சிகரெட் பிடிப்பார். ஆனால், எனக்கு சிகரெட் கொடுக்கவில்லை. ஐந்தாறு முறை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இலக்கியம், அரசியல், சினிமா பற்றி நிறையப் பேசினார். அவர் வீடு பச்சையப்பன் கல்லூரிக்குப் பின்னால் ஒரு தென்னந்தோப்பில் இருந்தது.

  நான்கைந்து ஆண்டுகள் அவரோடு பழகி வந்தேன். அவர் தன் புத்தகங்கள் பற்றியோ  திரைப்படப் பாடல்கள், வசனம் பற்றியோ ஒன்றும் பேசவில்லை. ஆனால்,  அவருக்குத் தன் காலத்தின் தமிழ்ப் பத்திரிகைகள், அவற்றில் வெளியாகும் கதைகள், சினிமாவின் தரம் பற்றியெல்லாம் கடுங்கோபம் கொண்டிருந்தது தெரிந்தது.

  1970-ஆம் ஆண்டில் நான் சென்னை நந்தனம் வாசியாகிவிட்டேன். விந்தனோடு பேசிப் பழகும் வாய்ப்பு குறைந்து விட்டது.

  சாவி "தினமணி கதிர்' ஆசிரியரானார். "தினமணி கதிர்' ஆசிரியர் குழுவில் விந்தன் சேர்ந்தார். அவர் பிரபல சினிமா நடிகர் எம்.கே. தியாகராஜபாகவதர், எம்.கே ராதா வாழ்க்கை வரலாற்றை எழுதினார். 

  எழுத்து என்பது படைப்பாற்றலின் வெளிப்பாடு. எப்பொழுதும் ஒரே வீரியத்தோடு எழுதிக்கொண்டு இருக்க முடிவதில்லை. பல நேரங்களில் இளமையில் பொங்கிவரும் கதைகள் பின்னால் மாயமாக மறைந்து போய்விடுவது உண்டு. சில எழுத்தாளர்கள் முதல் நாவலோடு காணாமல் போய்விடுகிறார்கள். வெகு சிலரே ஒன்றுக்கும் மேற்பட்டச் சிறுகதைகள், நாவல்கள் எழுதி இறுதிவரை எழுத்தாளராகவே வாழ்ந்து மறைந்து போகிறார்கள்.

  எழுத்துலகத்தில் எத்தனை ஆண்டுகள் எழுதி கொண்டே இருந்தார்கள் என்பது கணக்கிடப்படுவதே இல்லை. ஒரு கவிதை, ஒரு சிறுகதை, ஒரு நாவல் தரமாக அசலாக எழுதினால் போதும் - எழுத்தாளர் என்று  சொல்வது மரபாக 
  இருக்கிறது. 

  விந்தன் ஒன்றுக்கு மேற்பட்ட அசலான படைப்புகள் எழுதிய எழுத்தாளராகவே கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் 1975-ஆம் ஆண்டு தன் ஐம்பத்தொன்பதாவது வயதில் சென்னையில் காலமானார். 

  1975-ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் ஜெயகாந்தன் மடத்தில் இருந்தேன். அவர் ""உங்களுக்கு விந்தனோடு பழக்கம் உண்டா? அவரைப் பார்த்துப் பேசியிருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.

  ""ஐந்தாறு ஆண்டுகள் பழக்கம் உண்டு. அவர் வீட்டிற்கு எல்லாம் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவார்'' என்றேன்.

  ""ரொம்ப நல்லவர். என்னை விட பத்து வயதிற்கு மேல் பெரியவர். நான் ஒரு நாள் அவரை அடிக்க வீடு தேடி சென்றேன். அது பற்றி ஏதாவது சொன்னாரா?'' என்று கேட்டார்.

  நான் ஜெயகாந்தனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

  ""எங்களுக்கு ஒரு சிநேகிதன் விஜயரங்கம். அவன் "தமிழ் ஒளி' என்ற பெயரில் கவிதைகள் எழுதி வந்தான். நல்ல படிப்பாளி. நவீன இலக்கியமெல்லாம் படித்திருந்தான். புதுச்சேரி ஆள். அவன் நல்லவன் கிடையாது. நண்பர்கள் இடையில் ஏதாவது சொல்லி சண்டைப் போட்டுக் கொள்ள வைத்துவிடுவான்.''

  ""விந்தன் தமிழ் ஒளிளைப் பற்றிக் கொஞ்சம் சொன்னார்.''

  ""அவர் சொன்னது இருக்கட்டும். நான் சொல்லப் போவதைக் கேட்டுக் கொள்ளுங்கள். நானும் தமிழ் ஒளியும் ஒரே அறையில் இருந்தோம். அவன் விந்தன் என்னைப் பற்றி ஊரெல்லாம் அவதூறு பரப்பி விடுவதாகச் சொன்னான். அவன் சொன்னவற்றில் கொஞ்சம் உண்மை உண்டு. ஆனால், அது பற்றியெல்லாம் சொல்ல விந்தனுக்கு உரிமையில்லை. நான் இல்லாத இடத்தில் என்னைப் பற்றிச் சொன்ன அவரை அடிக்க வேண்டும் என வெறி ஏற்பட்டது. உடனே அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் என்னை விட பெரியவர். என்னை மதிக்கக்கூடியவர் என் வீட்டிற்கு அடிக்கடி வந்து என்னோடும், அம்மாவோடும் பேசிக் கொண்டு இருப்பவர். அப்படிப்பட்ட விந்தன் என்னைப் பற்றி அவதூறு பரப்புவாரா என்று நான் யோசித்துப் பார்க்கவில்லை. தமிழ் ஒளி ஏற்றி வைத்து இருந்ததெல்லாம் எரிந்து கொண்டிருந்தது. கட்டுக்கடங்காத கோபத்தோடு அவர் வீட்டிற்குச் சென்றேன். கதவைத் தட்டினேன்.

  விந்தன் மனைவி கதவைத்திறந்தார். அவர் என்னை வரவேற்றார். ""அவர் இல்லையா?'' என்றேன்.

  ""அவனை எங்கே பார்த்தாலும் உதைப்பேன். அடிப்பேன். அதனை அவனிடம் சொல்லி வையுங்கள் என்று கூறிவிட்டு வந்தேன்'' என்றார்.  

  நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

   ""என்னை மாதிரி மூடனும், மூர்க்கனும் உண்டா?'' என்று கேட்டார்.

  விந்தன் எழுத்தில் தெரிகிற அளவிற்கு யதார்த்தத்தில் தீவிரவாதியில்லை. பரிவும் இரக்கமும் கொண்டவர். எழுத்தும் அதனை எழுதுகிற எழுத்தாளனும், எப்பொழுதும் ஒன்றில்லை என்று அதன் காரணமாகவே சொல்லப்பட்டு வந்தது.

  விந்தன் தன் படைப்புகளுக்காகவே என்றும் இருப்பவராக உள்ளார்.

  (அடுத்த இதழில்.. நகுலன்) 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai