பல்லவர்  கால  கலைச்சிறப்பு: பனைமலை

பனைமலை - தாளகிரீசுவரர் திருக்கோயில் பல்லவர்கால கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பல்லவர்  கால  கலைச்சிறப்பு: பனைமலை

பனைமலை - தாளகிரீசுவரர் திருக்கோயில் பல்லவர்கால கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் சூரப்பட்டு என்னும் ஊரின் வடமேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், பனைமலையை சென்றடையலாம். செஞ்சி - திருக்கோயிலூர் சாலையில் சுமார் 17 கி.மீ. தொலைவில் அனந்தபுரம் என்னும் ஊருக்கு அருகே பனைமலை அமைந்துள்ளது.

இவ்வூரில் உள்ள சிறிய குன்றில் தாளபுரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. மலைக்குன்றின் தொடக்கத்தில் பல்லவர் கால புடைப்புச் சிற்பமாக விநாயகர் காட்சி தருகிறார். பிற்காலத்தில் இத்திருமேனிக்கு முன்பாக சிறு கோயிலை அமைத்துள்ளனர். கட்டடக்கலை - தூண் வடிவமைப்பு ஆகியவற்றை நோக்கும் பொழுது இக்கோயில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது.

பனைமலை துர்க்கை: மேலே செல்லும் வழியில் ஒரு பாறைக்கு அருகில் ஊரின் அருகே உள்ள ஏரியைப் பார்த்தவாறு சிறிய குகை உள்ளது. அதன் உட்புறம் அழகிய துர்க்கை வடிவத்தைக் காணலாம். அழகு மிக்க பல்லவர் கால சிற்பம். சிம்மத்தின் மீது இடது காலை ஊன்றி வலது காலை தரையில் நிறுத்தி,  தனது எட்டுக்கரங்களால் ஆயுதங்களை ஏந்தி காட்சி தரும் கோலம் அற்புதக்கலை படைப்பாய் விளங்குகிறது. இது போன்ற சிற்பம் பல்லவ மன்னன் ராஜசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் காணலாம். இதனைக் கடந்து மேலே சென்றால் தாளகிரீசுவரர் கோயிலை சென்றடையலாம். கோயில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம், திருச்சுற்று மண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது.

தாராலிங்கம்: கலைக்கடல் - சிவச்சூடாமணி - ஆகமப்பிரியனான இரண்டாம் நரசிம்மன் (கி.பி. 700 - 728) என்னும் ராஜசிம்மன் கட்டிய இக்கோயிலின் கருவறை அமைப்பு சற்று வித்தியாசமானது. கருவறையின் மூன்று பக்கங்களிலும் சற்று வெளியே வந்த சிற்றாலயம், சிறிய கருவறை அமைந்துள்ளது. இவற்றில் முன்பு வழிபாடு நடைபெற்றதற்கு அடையாளமாக 16 பட்டைகள் கொண்ட தாராலிங்கம் மூன்று சிற்றாலயங்களிலும் காணப்படுகிறது. இதே போன்ற கருவறை அமைப்பு ராஜசிம்மனால் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் திருக்கோயிலிலும் காணப்படுவது சிறப்பாகும்.

கருவறையில் இறைவன் லிங்க வடிவிலே காட்சி தருகிறார். கருவறை சுவரில், லிங்கத்திற்கு பின்னால் சோமஸ்கந்தர் காட்சி தருகிறார். அர்த்தமண்டபச் சுவரில் திருமால் - திருமகள், பிரம்மா - சரசுவதி சிற்பங்களைக் கண்டு மகிழலாம். அர்த்தமண்டப வாயிலில் துவாரபாலகர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

குன்றுடைய மகாதேவர் : கருவறையின் வெளிப்புறம் அதிட்டானத்தில் பல்லவர் கால கிரந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் பல்லவ வம்சத்தின் தோற்றத்தையும் அவர்களின் காலத்தையும் குறிப்பிடுகின்றன. அர்த்தமண்டபத்தின் வெளிச்சுவர் பீடத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை “குன்றுடைய மகாதேவர்” எனக் குறிப்பிடப்படுகிறது.

கருவறையின் வெளிப்புறம் மடிப்பு முனைகளில் சிம்மங்கள் நின்றவாறு தலையில் சுமப்பது போல் கருவறை விமானம் காட்சி தருகிறது. விமானம் இரண்டு தளத்துடன் அமைந்துள்ளது. ஒவ்வொரு தளத்திலும் சாலை . கர்ணகூடு அமைப்புகள் மாறி - மாறி அமைந்து விமானத்திற்கு அழகைத் தருகிறது. தற்பொழுது காணப்படும் மூன்றாவது தளமும், உச்சிப்பகுதியும் பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக காட்சி தருகிறது. இக்கோயிலை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை போற்றிப் பராமரித்து வருகிறது.

அழகிய ஓவியம்: இக்கோயிலில் பல்லவர் காலச் சிற்பங்கள் அதிக அளவில் இல்லை. எனினும், இங்கு காணப்படும் ஓவியங்கள் பல்லவர் கால ஓவியக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. கருவறையின் வடக்குப் பகுதியில் உள்ள சிற்றாலயத்தில் லிங்கத்திருமேனியின் பின்புறம் நடனமாடும் இறைவன் வலது காலை ஊன்றி, இடதுகாலை உயர்த்தி தாண்டவம் புரிகின்றார். ஆடவல்லானின் ஆடலை, ஒயிலாக நின்று, காலை மடக்கி நின்று காணும் நிலையில் பார்வதி தேவியின் ஓவியம் பக்கத்துச் சுவரில் தீட்டப்பட்டுள்ளது. தேவியின் முகபாவத்தை எடுத்துக் கூறும், மென்மையானக்கோடுகள். சிவப்பு வண்ணக் கோடுகள். அன்னையின் தலைக்கு மேலே அழகிய வண்ணக்குடை அதன் விளிம்புகளிலிருந்து தொங்கும் தொங்கல்கள் அழகாகக் காட்சி தருகின்றன. இதே போன்றுள்ள சிற்பத்தை காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் காணலாம். மிக அற்புதக் கலை படைப்பு.

கருவறைக்கு முன்பு திருச்சுற்று மண்டபம் உள்ளது. இது நாயக்கர் கால கட்டட அமைப்புடன் காணப்படுகிறது. இம்மண்டபத்தின் வடக்குப்பகுதியில் தெற்கு நோக்கி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இச்சன்னதியில் அம்மன் அஸ்தாளம்பிகை என்ற பெயருடன் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேலிரு கரங்களில் அங்குசம் - பாசம், கீழிரு கரங்களில் அபய - வரத முத்திரை தாங்கி காட்சி தருகிறார். இச்சன்னதி நாயக்கர் கால கட்டடப் பாணியுடன் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் விநாயகர், ஆறுமுகப்பெருமான், பைரவர் ஆகியோருக்கு பரிவார ஆலயங்களும் நாயக்கர் காலத்தில் எடுக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. திருச்சுற்று மண்டபத்தில் தூண்கள் அடிப்பகுதியும், மேல் பகுதியும் சதுரமாகவும், இடைப்பகுதி எட்டுபட்டை கொண்டதாகவும் காட்சி தருகிறது. சில தூண்களில் அடிப்பகுதியில் சிற்பங்கள் காணப்படுகின்றன. (55 தூண்கள் உள்ளன)

தாளகிரீசுவரர் : பல்லவர் காலத்தில் எடுக்கப்பட்ட இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் குன்றுடைய மகாதேவர் என இக்கோயில் அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது. பிற்கால கல்வெட்டில் (கி.பி.17-ஆம் நூற்றாண்டு) "பனசை நகர் தாளகிரீசுவரர்' எனக் குறிப்பிடப்படுவதால் இக்கோயில் "தாளகிரி (பனைமலை) ஈசுவரர்' எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டிருக்க வேண்டும். திருச்சுற்று மண்டபம் நாயக்கர்கால கட்டடப்பாணியுடன் விளங்குகிறது. இம்மண்டபம் எந்த அரசனால் கட்டடப்பட்டது என்பதற்கு சான்றுகள் இல்லை. எனினும் இப்பகுதியில் ஆட்சி செய்த "செஞ்சி நாயக்கர்' காலத்தில் இம்மண்டபம் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பல்லவர் காலம் தொடங்கி, சோழர் காலத்தில் உரிய ஆதரவு பெற்று, நாயக்கர் காலத்தில் கோயில் விரிவடைந்ததற்கு ஒரு அரிய சான்றாக பனைமலை தாளகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. பல்லவர் கால ஓவியங்களைக் காணக் கலைக்களஞ்சியமாக பனைமலை விளங்குவது நமக்கு பெருமைதானே!

கட்டுரையாளர்: தொல்லியல் துறை (ஓய்வு) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com