12 வயதிலேயே காந்திய தொண்டு!

 எனது தகப்பனார் தருமராஜா என்பவர் 1928-ஆம் ஆண்டு தொடக்கம் வேதாந்தப்போக்கும் காந்தியுடைய கருத்துகளாலும் ஈர்க்கப்பட்டு அடிக்கடி தோணியில் தென்னாட்டுக்கு வந்துவிடுவார்.
12 வயதிலேயே காந்திய தொண்டு!

எனது தகப்பனார் தருமராஜா என்பவர் 1928-ஆம் ஆண்டு தொடக்கம் வேதாந்தப்போக்கும் காந்தியுடைய கருத்துகளாலும் ஈர்க்கப்பட்டு அடிக்கடி தோணியில் தென்னாட்டுக்கு வந்துவிடுவார். திருமணமே வேண்டாம் என்று வேதாந்திகளோடு அதிக ஈடுபாடுடன் இருந்தவரை பாட்டி (அப்பத்தா) நெருக்கடி கொடுத்ததினால், அவருடைய குருவான பென்னப்ப சுவாமி வேண்டிக் கொண்டதின் பேரில் எனது அப்பாவுடைய திருமணம் நடைபெற்றது. ஒவ்வொரு தடவையும் எனது தகப்பனார் தமிழ்நாட்டுக்கு வரும் போதும் மாற்றங்களைக் காணலாம். கடைசியில் காந்திக்குல்லாயுடனும், கதர் வேஷ்டி, கதர் ஜிப்பா அணிந்தும் வந்திருந்தார்.

மகாத்மா காந்தியடிகள் இலங்கை வந்து பருத்தித்துறை என்ற ஊருக்கு வரவேற்புக்கு வந்தார். அப்போது காந்தியடிகளின் வரவேற்பு குழுவில் எனது தந்தையும் இணைந்து கொண்டார். நான் அப்போது சிறு பிள்ளையாய் இருந்தேன். பிற்காலத்தில் தொடர்ந்து காந்தியத்துறையில் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்ததால் என்னையும் 12 வயதளவிலேயே காந்திய தொண்டுக்காக அர்ப்பணித்தார்.

1946-ஆம் ஆண்டு அரியநாயகம் அறிமுகத்துடன் திருச்செங்கோடு ராஜாஜியுடைய காந்தி ஆசிரமத்தில் ஆறு மாதம் ராமச்சந்திரன் தலைமையில் 30 பயிற்சியாளர்கள் கல்லுப்பட்டி சீனிவாசன், ராமகிருஷ்ண ரெட்டியார், பாலசுந்தரம் ஆகியோர் ஆசிரியர் குண்டப்பாஜியிடம் பயிற்சி பெற்றோம். சிவன்பிள்ளையுடைய பாரியார் கமலாட்சியம்மாள், அப்பாவு, தேசிகன், ராமகிருஷ்ணன், நாராயணி அம்மாள் ஆகியோரும் கலந்து கொண்டு, ஆறு மாதம் வரை பயிற்சி பெற்றோம். இந்த முகாமில் வயதிலும், அனுபவங்களிலும் மிகவும் குறைந்தவன் நான் ஒருவன் தான்.

இந்த ஆறு மாத காலப் பயிற்சிக்குப் பின் மகாத்மா காந்தியடிகள், சென்னை இந்தி பிரசாரச் சபையில் காந்தியடிகள் கைகளால் சர்டிபிகேட் பெற்றுக் கொண்டும். காந்தியடிகள் "சேவா கிராம் ஆவோ' என்று அழைத்ததும், என்னுடைய தகப்பனாருடைய விருப்பபடி சேவா கிராம இந்துஸ்தானி தாலிமி சங்கத்தில் இணைந்து ஆசிரமத்திலேயே தங்கி பயிற்சிகள் பெற்று வந்தேன்.

அப்பொழுது திருப்பூர் "கதர் மலர்' பத்திரிகை ஆசிரியர் ந.ராமசாமி அழைத்ததின் பேரில் திருப்பூரிலும் சில காலம் அதன் பின் மதுரை ஏ.என். ராஜனுடன் சில காலங்கள் கிராம பணிகளில் ஈடுபட்ட போது உடல் நலம் குன்றியதால் யாழ்ப்பாணம் சென்று திருமணமும் செய்து கொண்டேன்.

அங்கே சி.ந.க. வேலாயுதம், சோக தம்பி, பேராசிரியர் கந்தையா ஆகியோருடன் காந்தியடிகளின் தொண்டில் ஈடுபட்டிருந்தேன். பின்னர் இலங்கை பிரச்னை காரணமாக தமிழகம் வந்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றேன்.

தற்பொழுது காந்தியடிகளுடைய நினைவு நாட்களிலும், கல்லூரிகளிலும் காந்தி ஜெயந்தி முதலிய கூட்டங்களிலும், மதுரை காந்தி நிலையத்தில் நடைபெறும் மாலை பிரார்த்தனைகளிலும் கிராந்திய கூட்டங்களிலும், கலந்து கொண்டு வாழ்ந்து வருகிறேன். எனது வயது 90 ஆகி விட்டதால் அதிகமாக சேவையில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொண்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com