தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள்!

மதுரையைச் சேர்ந்த இளைஞர் தனது நண்பர்களுடன் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த புத்தகக் கடையிலும், தேநீர் கடையிலும் சிறிது நேரம் பொழுது போக்குவது வழக்கம்.
தமிழில் கையெழுத்திட்ட காந்தியடிகள்!

அண்ணலுடன் எனது நினைவுகள்!
 "அண்ணலுடன் எனது நினைவுகள்' என்கிற தலைப்பில் வாசகர்கள் அனுபவங்களை கேட்டிருந்தோம். வந்த கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இங்கு இடம் பெறுகின்றன.

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் மதுரை தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த புத்தகக் கடையிலும், தேநீர் கடையிலும் சிறிது நேரம் பொழுது போக்குவது வழக்கம். மதுரையில் அந்த நாளில் வேறு பொழுது போக்கு இடம் கிடையாது.

1934-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் தேதி அன்று அவ்வாறே அந்த இளைஞரும், அவரது நண்பர்களும் மதுரை ரயில் நிலையத்தில் வரும், போகும் தொடர்வண்டிகளை வேடிக்கைப் பார்ப்பதும் தமக்குள் பேசி மகிழ்வதுமாக இருந்தனர். அப்போது மதுரை தேச பக்தர்களின் தலைவரான ஜார்ஜ் ஜோசப் துணைவியாரும், தியாகி தாயம்மாளும் தொடர்வண்டி நிலையத்திற்குள் நுழைந்தனர். அதைப் பார்த்து அந்த இளைஞர் வியப்படைந்தார். அவர் வீட்டிற்கு அருகாமையில்தான் ஜார்ஜ் ஜோசப் பின் வீடு இருந்தது. எனவே அந்த இளைஞர் அந்த குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர். தியாகி தாயம்மாளையும், அவர் நன்கு அறிவார். எனவே அவர்களிடம் சென்று விவரம் கேட்டபோது அவர்கள் வியப்பூட்டும் செய்தி ஒன்றைக் கூறினார்கள்.

"மானாமதுரை பொதுக் கூட்டத்தை முடித்துக்கொண்டு அங்கேயே தொடர்வண்டியில் ஏறி காந்தியடிகள் கோவை செல்லவிருக்கிறார். மதுரையில் அவருக்கு அளிப்பதற்காக உணவு கொண்டுவந்திருக்கிறோம்" என அந்த இரு பெண்மணிகளும் கூறியதைக் கேட்டபோது அந்த இளைஞர் பெரும் பரபரப்படைந்தார். காந்தியடிகளைச் சந்திக்கும் மிகப்பெரும் வாய்ப்பு கிடைக்கப்போவதை எண்ணி மகிழ்ந்தார். அவர்களும் அவரை தங்களுக்குத் துணையாக இருக்கும்படி வேண்டிக்கொண்டனர். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போன்ற மகிழ்ச்சியை அவர் அடைந்தார்.

சற்று நேரத்தில் காந்தியடிகள் ஏறிவந்த தொடர்வண்டி மதுரைக்கு வந்து சேர்ந்தது. அந்தப் பெண்மணிகளுடன் இணைந்து காந்தியடிகள் இருந்த பெட்டிக்குள் அந்த இளைஞரும் நுழைந்தார். அந்த இளைஞரை காந்தியடிகளுக்கு ஜார்ஜ் ஜோசப் அறிமுகப்படுத்தி வைத்தார். தான் காண்பது கனவா? நனவா? என்ற திகைப்பில் இருந்த அந்த இளைஞர் சிறிது துணிவு பெற்று காந்தியடிகளிடம் கையெழுத்துக் கேட்டார்.

காந்தியடிகள் புன்னகையுடன் "ஹரிஜன் நிதிக்கு 5 ரூபாய் கொடுக்கவேண்டும்' என்று கூறினார். அந்த இளைஞர் கையில் அப்போது காசு எதுவும் இல்லை. ஆனாலும், ஒரு கணம்கூட யோசிக்காமலும், தாமதிக்காமலும் தன் விரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி காந்தியடிகளிடம் மிக்கப் பணிவுடன் கொடுத்தார். அதைக்கண்ட காந்தியடிகள் அந்த இளைஞரைச் சீண்டிப் பார்க்க எண்ணினார். அவர் அருகே வீற்றிருந்த மீரா பென்னிடம் அந்த மோதிரத்தைக் கொடுத்து "இது உண்மையான தங்கம் தானா? என்று பார்'" என்று கூறினார். அவரும் அதை உற்றுப் பார்த்துவிட்டு உண்மையான தங்கம் தான் என்று உறுதிப்படுத்தினார். அதைக் கேட்ட காந்தியடிகள் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தார். சுற்றிலும் இருந்தவர்களும் சிரித்தார்கள்.

"எங்கே உனது கையெழுத்து புத்தகம்?' என காந்தியடிகள் கேட்டார். அந்த இளைஞரிடம் கையெழுத்துப் புத்தகமும் இல்லை. அவரின் தடுமாற்றத்தைக் கண்ட மீரா பென் தனது நாட் குறிப்பிலிருந்து ஒரு தாளை கிழித்து நீட்டினார். "பார்!அவள் உன்னிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறாள்' என காந்தியடிகள் கூறினார். உலகம் போற்றும் காந்தியடிகளின் கையெழுத்தைப் பெறப் போகிறோம்" என்ற மகிழ்ச்சியுடனும், சற்று துணிவுடனும் அந்த இளைஞர் "தமிழில் கையெழுத்திட்டுக் கொடுங்கள்' என வேண்டிக்கொண்டார்.

காந்தியடிகளும் புன்னகையுடன் தமிழில் கையெழுத்திட்டார். அந்த கையெழுத்திற்குக் கீழே தனது தாய்மொழியான குஜராத்தி மொழியில் நாளைக் குறித்தார். பிறகு அந்தத் தாளை இளைஞரிடம் கொடுத்து "பத்திரமாக வைத்துக் கொள்' எனக் கூறினார். காந்தியடிகள் கையெழுத்திட்ட காகிதத்தை கிடைத்தற்கரிய பொருளைப் பெற்ற மகிழ்ச்சியுடன் அந்த இளைஞர் போற்றிப் பாதுகாத்தார். இன்றும் அந்த இளைஞரின் குடும்பத்தினர் காந்தியடிகளின் கையெழுத்தைப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர்.

அந்த இளைஞர் வேறு யாரும் அல்லர், மதுரை திருவள்ளுவர் கழகத்தை நிறுவியவரும், மதுரை தமிழ்ச்சங்க செயலாளராகப் பணியாற்றியவரும், மதுரையில் பல்வேறு தமிழ் மாநாடுகளைச் சிறப்பாக நடத்தியவரும், பழமுதிர்ச் சோலை முருகன் கோயிலைக் கட்டியவரும், விவேகாநந்தா அச்சக உரிமையாளருமாக இருந்து மறைந்த அறநெறியண்ணல் கி. பழநியப்பனார் அவர்களேயாவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com