மால்கம் என்ற நெடுங்கொடையாளர்

"மால்கம் எக்ஸ் அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய போராளி! என்றால் மால்கம் எஸ். ஆதிசேஷையா (ஏப்ரல் 18, மால்கம் எஸ். ஆதிசேஷையாவின் 110-ஆவது பிறந்த தினம்) இந்தியர்கள் அனைவரும்
மால்கம் என்ற நெடுங்கொடையாளர்

"மால்கம் எக்ஸ் அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய போராளி! என்றால் மால்கம் எஸ். ஆதிசேஷையா (ஏப்ரல் 18, மால்கம் எஸ். ஆதிசேஷையாவின் 110-ஆவது பிறந்த தினம்) இந்தியர்கள் அனைவரும் "எழுத்தறிவு' பெற வேண்டும் என்று போராடிய அறிஞர், வறுமை ஒழிப்பிற்காகவும் பாடுபட்ட பொருளாதார வல்லுநர்!

தமிழ்ப் பொதுச் சமூகம் மால்கம் எக்ஸ்ûஸ அறிந்த அளவிற்கு மால்கம் எஸ். ஆதிசேஷையாவை அறிந்திருக்கவில்லை!

"யுனெஸ்கோ' நிறுவனத்தின் துணைப் பொது இயக்குநராக இருந்து கல்வி - பண்பாடு - அறிவியல் தொழில் நுட்பங்களுக்கும், தமிழ் மொழியின் மேன்மைக்கும், அவர் வகுத்துக் கொடுத்த திட்டங்கள், ஆற்றிய பணிகள் ,உதவிகள் கவனப்படுத்தத் தக்கன.

தமிழ்மொழி, பண்பாடு, கலை தொடர்பாக மால்கம் எஸ். ஆதிசேஷையா எடுத்த முன்னெடுப்புகள், பங்களிப்புகள் மிகவும் ஆக்கப் பூர்வமானவைகள். ஆனால் அவைகள் அதிகம் நினைவு கூறப்படுவதில்லை. பாரிஸில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டினை நடத்துவதற்கு "யுனெஸ்கோ' மற்றும் பிரெஞ்சு அரசிடம் நிதியுதவி பெற்றுத் தந்தார். அந்த மாநாட்டினை தொடங்கி வைத்து அவர் ஆற்றிய உரை சிறப்பானது. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளில் அவரின் உரையை யுனெஸ்கோ அச்சிட்டு வழங்கியது.

1968-ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10 வரை சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்' தொடங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலக அளவில் தலைசிறந்த அறிஞர்களை எல்லாம் இணைத்து தமிழ், மொழி, பண்பாடு தொடர்பான உயர் ஆய்வுகளை நிகழ்த்தும் களமாக அது அமையப் பெற வேண்டும் என்பது திட்டம். இதற்கான அறிஞர்கள் தயாரித்த அளித்த திட்ட முன் மொழிவை 1968 நவம்பர் மாதம் நடைபெற்ற யுனெஸ்கோவின் பொதுக் குழுவில் நிறைவேற்றித் தந்தவர் மால்கம்!

தமிழ் செவ்விலக்கியங்களை எல்லாம் மொழி பெயர்க்க யுனெஸ்கோ வழியாக நிதியுதவி வழங்கினார். 1961-இல் ராஜாஜி எழுதிய "கம்பர்' என்ற நூலும் 1967-இல் ஏ.கே. ராமானுஜம் எழுதிய "சங்க இலக்கியம் குறித்த தொகுப்பு நூலுக்கும்' யுனெஸ்கோ நிதியுதவி வழங்கியது!

தமிழில் கூரியர் இதழ்

பன்னாட்டு அளவில் புகழ் பெற்றுத் திகழ்ந்த "யுனெஸ்கோ கூரியர்' இதழினை தமிழில் வெளியிட மால்கம் திட்டம் வகுத்தார். தமிழ் இந்திய ஆட்சி மொழி அல்ல; ஒரு மாநில மொழி என்று அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. அப்போது யுனெஸ்கோவின் உறுப்பினராக இருந்த மணவை முஸ்தபா, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா மூலமாக நடுவண் அரசுக்கு அழுத்தம் தந்தார். அப்போதைய லால்பகதூர் சாஸ்திரியின் அரசு இந்தியிலும் "யுனெஸ்கோ கூரியர்' வெளியிட்டால், ஒப்புக் கொள்வோம் என்றது. அதனை ஏற்று 1967- இல் தமிழ், இந்தியில் யுனெஸ்கோ கூரியர் வெளியிடப்பட்டது!

தமிழ் இதழின் ஆசிரியர்களாக எஸ். கோவிந்த ராஜு, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், நெ.து. சுந்தர வடிவேலு செயல்பட்டனர். பின்னர் மணவை முஸ்தபா பொறுப்பேற்றார். 1984-இல் தமிழ்நாடு பற்றிய சிறப்பிதழ் யுனெஸ்கோ கூரியரால் வெளியிடப்பட்டது. அதில் பிரெஞ்சு நாட்டு தமிழாய்வாளர் பிரான்சுவா குரோ "சங்க இலக்கியத்தில் நிலக் காட்சி' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது உலக அளவில் தனிக் கவனத்தைப் பெற்றது.

மால்கம் எஸ். ஆதிஷேசையாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு, தமிழ்நாட்டின் புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரியச் சிறப்புக் கொண்ட ஏழு ஆலயங்களைப் புதுப்பிக்கவும் இதன் பாரம்பரியச் சிறப்புகளை உலகறியச் செய்யவும் "யுனெஸ்கோ' மூலம் நிதியுதவி அளித்து உதவினார். "அஜந்தா' பற்றிய கலைத் தொகுப்பு (Album) வெளியிடுவதற்கும், இந்தியாவின் பாரம்பரியச் சிறப்புகள், சின்னங்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளுக்கும் முன் நின்று உதவியவர் மால்கம்!

முழு எழுத்தறிவுத் திட்டம்

பள்ளி சார்ந்த கல்வி முறையை மட்டும் நம்பி நம் அனைவருக்கும் எழுத்தறிவினை வழங்கி, முழுமையான கற்ற சமூகத்தை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை என்று "பள்ளிசாராக் கல்வித் திட்டம்' என்ற மாற்றுச் சிந்தனையை வழங்கி, அதை நம் தேசத்திற்கு வடிவமைத்துத் தந்தவர். 1967-ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்ற "உழவர் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம்' தொடங்கி 1990-இல் தொடங்கப் பெற்ற "முழு எழுத்தறிவுத் திட்டம்' (Total Literacy Programme) என்ற அறிவொளி இயக்கம் வரை சுமார் 22க்கும் மேற்பட்ட எழுத்தறிவுத் திட்டங்கள் உருப்பெறுவதற்கு மிகப் பெரிய பங்களிப்பைத் தந்தவர். இத்திட்டங்களால் தான் இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் (Literacy Rate) உயர்ந்தது!

1976-ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொடர் கல்வி வாரியத்தினைத் தோற்றுவித்து, வாழ்நாள் முழுவதும் கற்கும் வாய்ப்பினையும், தொழில் திறன் மேம்பாட்டுக் கல்வியையும் வழங்கினார்.

இந்தியாவின் பல்வேறு முன்னோடிக் கல்வித் திட்டங்களை வடிவமைக்கும் பணிகளுக்கு மால்கம் பெரும் பங்களிப்பு செய்தவர். குறிப்பாக புது தில்லியில் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (சஇஉதப) தொடங்குவதற்கும், இந்தியாவின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்குவதற்கும் திரைப்பட செய்திப் பிரிவினை நவீனப்படுத்தி சீரமைக்கவும் "யுனெஸ்கோ' வழியாக அவர் ஆற்றிய பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது!

பொறியியல் மற்றும் அறிவியல் சார்ந்த கல்வி - பயிற்சித் திட்டங்களை மறு சீரமைப்பு செய்ய உலகின் தலைசிறந்த 20 வல்லுநர்களை யுனெஸ்கோ நிதியுதவியுடன் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். பம்பாய், கரக்பூர் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கும் (ஐஐப'ள்) சென்னை அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரிக்கு 12 மில்லியன் டாலர் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை தயாரித்து யுனெஸ்கோவிற்கு வழங்கிச் செயல்படுத்தினார். சென்னை எழும்பூரில் உள்ள "உலகப் பல்கலைக் கழக சேவை நிறுவனம் (World University Service Centre) அவர் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டதுதான்.

மால்கம் எஸ். ஆதிசேஷையா, ஐ.நா.வின் நூற்று இருபத்தேழு உறுப்பு நாடுகளுக்கும் நேரில் சென்று கல்வி, பொருளாதாரத் திட்டங்களை ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கியவர். 15-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவர் ஆற்றிய பணிகளைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு "டாக்டர் பட்டம்' வழங்கியுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர்

1970- இல் யுனெஸ்கோவில் இருந்து ஓய்வு பெற்ற பின் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தன் நாட்களைச் செலவிட வேண்டும் என விரும்பினார். 1971-1976 வரை தமிழ்நாடு திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்து பல்வேறு திட்டங்களை வடிவமைத்துத் தந்தார்.

அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப 1975-1978 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்றார். மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்றுக் கொண்டார். துணை வேந்தராகப் பொறுப்பு ஏற்ற உடனே மூன்றாண்டிற்கான தன்னுடைய செயல் திட்டத்தினை வெளியிட்டார். பணி நிறைவின் போது அதில் எவற்றை எல்லாம் செயல்படுத்தினேன். எவற்றை எல்லாம் ஏன் செயல்படுத்த முடியவில்லை என்று விரிவான அறிக்கையை வெளியிட்டு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். (வயது வந்தோர் கல்வித் துறை, அகராதி உருவாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு புதிய கல்விப் புலங்கள் தொடங்கினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் துறைகள் "ஆராய்ச்சிப் படிப்புகளை மட்டுமே வழங்கி வந்த நிலையில் கற்பித்தல் பணியை'யும் மேற்கொள்ளும் நிலையை அவர் தான் உருவாக்கினார். மறுமுறையும் துணைவேந்தராகத் தொடர அரசு கேட்டுக் கொண்டும் மறுத்துவிட்டார். இந்திய அரசு இவருடைய பணிகளைச் சிறப்பிக்கும் வகையில் 1976-இல் "பத்மபூஷண்' விருது வழங்கியது.

1977-இல் அப்போதைய மத்திய அரசு மால்கம் எஸ். ஆதிசேஷையாவை "கோவா' மாநில ஆளுநராக நியமிக்க விரும்பியது. அவரிடம் அதற்கான இசைவைக் கேட்டது. தமிழகத்தில் இருந்து பணியாற்றவே விரும்புகிறேன் என்று மறுத்துவிட்டார். 1978-இல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தன்னுடைய மனைவி 1986-இல் இறந்தவுடன் மால்கம் ஆதிசேஷையா தான் ஈட்டிய செல்வங்களையும் சென்னை செனடாப் சாலையில் இருந்த மிகப் பெரிய பங்களாவையும் எலீசபெத் - ஆதிசேஷையா அறக்கட்டளைக்கு எழுதி வைத்து விட்டார். அடையாறு காந்தி நகரில் இருந்த விலை மதிப்பு மிக்க பங்களாவை சென்னை வளர்ச்சி - ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கினார்.

அவருடைய வாரிசுகள் வெளிநாட்டில் வசித்ததால் தான் இறப்பதற்கு முன்பு வரை அதாவது, நவம்பர் 21, 1994 -இல் தன்னைக் கவனித்துக் கொள்ள ஒரு பணிப் பெண்ணை நியமித்துக் கொண்டு ஒரு வளர்ப்பு நாயுடன் தனியாக வாழ்ந்து வந்தார். தான் வாழ்நாள் முழுவதும் ஈட்டிய செல்வங்களில் பெரும் பகுதியை கல்வி - ஆராய்ச்சி பணிகளுக்கும், ஒரு பகுதியை தன்னைக் கவனித்துக் கொண்ட பணிப் பெண்ணுக்கும், தன்னிடம் பணியாற்றிய கடைநிலை ஊழியர்களுக்கும் தான் ஆசையாய் வளர்த்த நாயைப் பராமரிக்க ஒரு தொகையையும் உயில் சாசனம் எழுதி வைத்துவிட்டு மறைந்தார்.

முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிப்பொறுப்பில் இருந்த பொழுதெல்லாம், சில முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு, மால்கத்தின் கருத்தைக் கேட்ட பின்பு நடைமுறைப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்! எம்ஜிஆரும் மால்கத்திடம் தொடர்ந்து ஆலோசனை பெறுவார் ,அவர் கருத்திற்கு மிகுந்த மதிப்புத் தருவார்.

எம்ஜிஆர் முதன் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சமயம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நடைபெற்றது . அந்த மாநாட்டை எம்ஜிஆர் தான் தொடங்கி வைத்துப் பேசினார். அந்த விழா மேடையில் மால்கத்தின் இரு கரங்களையும் பற்றி முத்தமிட்டார். அந்தக் காட்சியைப் பார்த்துக் கூட்டமே ஆரவாரம் செய்தது.

சென்னை வந்த பின்பு தன்னுடைய வாகன ஓட்டியை உடன் அழைத்துக்கொண்டு தானே தனக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் , பெரும்பாலும் நடைபாதைக் கடைகளில் சிறு வியாபாரிகளிடம் தான் அவர் பொருட்களை வாங்குவார் . அப்படி வாங்கும் போது பேரம் பேசுவார் . அப்போது விற்பனை செய்பவர்கள் தங்கள் தரப்பு கருத்துக்களை விளக்குவதைக் கவனித்து உண்மைநிலையை அறிவார். கடைசியில் அவர்கள் கேட்ட தொகையை விடக் கூடுதல் தொகையை கொடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி விடுவார்.

திட்டமிடுவதில் மால்கம் சிறந்த வல்லுநர் என்பது நமக்குத் தெரியும். திடீரென்று தான் இறந்துவிட்டால், தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு மற்றவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று ஒரு தொகையைக் காசோலையாக எழுதி எப்போதும் தன் மேஜையில் தயார் நிலையில் வைத்திருப்பா .
ஆறு மாதம் கழித்து அந்தக்காசோலை காலாவதியான உடன் மீண்டும் ஒரு காசோலையை அதேபோல் எழுதி வைத்துவிடுவார்.

இன்னொரு சம்பவம் தான் இறப்பதற்கு முன்னதாகவே கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் தனக்கான கல்லறையை தானே திட்டமிட்டு வடி
வமைத்துக்கட்டியும் வைத்துவிட்டார்.

இவருடைய இறப்பிற்கும் - இறுதிச் சடங்கிற்கும் வாரிசுகள் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் ஏராளமான கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும், மாணாக்கர்களும் கண்ணீர் மல்க கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்!

கட்டுரையாளர்; எழுத்தாளர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com