பதவி உயர்வுக்கு வழி வகுத்தது...

1957-ஆம் ஆண்டு மாநிலக் கல்லூரி கடைசி ஆண்டு பி.எஸ்சி. படித்துக் கொண்டிருக்கும் போது, எனது சிறுகதை தினமணி கதிரில் பிரசுரமானது.
பதவி உயர்வுக்கு வழி வகுத்தது...

1957-ஆம் ஆண்டு மாநிலக் கல்லூரி கடைசி ஆண்டு பி.எஸ்சி. படித்துக் கொண்டிருக்கும் போது, எனது சிறுகதை தினமணி கதிரில் பிரசுரமானது. (பழைய விகடன் சைஸ், துமிலன் ஆசிரியர்) கதை தலைப்பு "அவளுக்கு அவன்'. புரசைவாக்கம் கோயில் குளத்தின் எதிரே இருந்த கடை வாசலில் போஸ்டரில் என் பெயர் தெரிந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி! அதை விவரிக்க முடியாது.

1959-ஆம் ஆண்டு பத்திரிகை நின்று (கதிர் மட்டும்தான் என்ற ஞாபகம்) 1964 வாக்கில் மு.அ.பத்மநாபன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அப்போது வை.சுப்பிரமணியம் துணை ஆசிரியர். நண்பர் விசுவநாதனும் (சாருகேசி) நானும் இணைந்து எழுதிய நகைச்சுவை குறுநாவலை ஆசிரியரிடம் நேரிடையாகக் கொடுத்தோம். அது பிரசுரமாகவில்லை. காணாமலும் போய்விட்டது. (பிரதி கூட வைத்துக் கொள்ளவில்லை).

1965-இல் "பெண் நிழல்' என்ற சிறுகதை கதிரில் பிரசுரமாயிற்று. பிரபலமான வங்கியின் பெரம்பூர் கிளையில் பணியாற்றியபோது, நான்கு பெண்கள், புதிதாகச் சேர்ந்த பெண், மேலாளருடன் இழைந்து பழகுவது என் கற்பனையைத் தூண்டியது.

கதை பிரசுரமாகியது. பெண்கள், "எங்களைப் பற்றி எப்படி மோசமாக எழுதலாம்?' என்று சண்டைக்கு வந்தார்கள். அவர்களிடம் மன்னிப்பு கேட்டதும், உடனடியாக மேலிடத்தில் எழுதி, பணிபுரியும்போது கதை எழுத அனுமதி பெற்றதும் வேறு விஷயம். (ஆனால், அந்த இளம்பெண், மேலாளருக்கு இரண்டாவது மனைவியாகவே ஆனார்! முதல் மனைவி சம்மதத்துடன்) 1967-ஆம் ஆண்டு சாவி ஆசிரியரானதும் பத்திரிகையில் பல மாறுதல்கள். அசோகமித்திரன், விட்டல் ராவ் போன்றோருடன் "கடுகின்' நகைச்சுவைக் கதைகள், "படேல் ரோடு பஸ் ஸ்டாண்ட்' கதை சாருகேசி எழுதினார். "சிவகாமியின் செல்வன்' (காமராஜர் வரலாறு) அப்போதுதான் சாவி எழுதினார்.
ஆ... ஒன்று விட்டுப் போய்விட்டது. 1966-இல் ரூபாயின் மதிப்பை இந்திரா காந்தி குறைத்தார். ஒரு டாலரின் மதிப்பு ரூ.4-இலிருந்து ரூ.7-ஆக மாறியது. நான் அப்போது வங்கிப் பரீட்சையில் Foreign Exchange பாடத்தில் தோல்வியடைந்து கொண்டேயிருந்தேன். இந்திய ரூபாயின் குறைப்பு எப்படிப் பொருளாதாரத்தைத் தாக்கும் என்று ஏ.என்.எஸ் தினமணியில் கட்டுரை எழுதினார். அதைப் படித்து உள்வாங்கி, கூடவே தனியே ஒரு மையத்தில் சேர்ந்து படித்தும், இஅஐஐஆ தேர்ச்சியடைந்தேன்.

இதே போல், 1969-இல் வங்கிகள் தேசியமயமான போது ஏ.என்.எஸ்.ஸின் கட்டுரை. 

(இத்தகைய பொருளாதாரக் கட்டுரைகள், அப்போது மலிவு விலை நூலாகவே வெளிவந்தது என நினைவு). 1971-ஆம் பதவி உயர்வு பரீட்சையில் தேசியமயமானதன் பாதிப்பு குறித்த கேள்வி வந்தது. தவிர்க்கக் கூடாத கேள்வி. மிக நன்றாகப் பதில் எழுதினேன். ஆக, என் வங்கிப் பணி உயர்வுக்கு மறைமுகக் காரணம் தினமணியும் அதன் ஆசிரியருமான ஏ.என்.எஸ்.!

பின்னர் பதவி உயர்வு, பணியிட மாற்றம், பணிச்சுமை போன்றவற்றால் நிறைய எழுத முடியாவிட்டாலும், படிக்கும் பழக்கம் எள்ளளவும் குறையவில்லை. 

நா.பா.,  கஸ்தூரிரங்கன் என்று தினமணி கதிரின் ஆசிரியர்கள் மாறினார்கள்.

இந்தக் காலகட்டத்தில்தான் "லக்ஷ்மி', ர.சு.நல்லபெருமாள், பிரபஞ்சன், லா.ச.ரா., தி.ஜானகிராமன் போன்றோரது தொடர்கள் கதிரில் வெளியாகின. 

பிரபஞ்சன், லா.ச.ரா. இவர்களின் படைப்புகள் சாகித்ய அகாதெமி விருது பெற்றன. ர.சு.நல்லபெருமாளின் "தூங்கும் எரிமலைகள்' இட ஒதுக்கீடு குறித்து சலசலப்பை உண்டு பண்ணியது. மேலும் திரையுலகம், சிவாஜி கணேசன் மீது பற்றுக் கொண்ட ம.வே.சிவகுமாரின் "வேடந்தாங்கலும்' கதிரில் தொடராக வெளிவந்தது.

2002-இல் நடுபக்கக் கட்டுரைக்கு "வாசகர்களும் எழுதலாம்' என்ற அறிவிப்பு எனது எழுத்துலகில் ஒரு திருப்பம். இராம. திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்தபோது, எனது கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. 

1996 வாக்கில் ஏ.எம்.ஆருக்காக வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வாங்கிய தினமணி நாளிதழ், இன்று எனக்கு இன்றியமையாததாகி விட்டது. புதன்கிழமை தோறும் வெளிவரும் "வாசகர் அரங்கமும்', ஞாயிற்றுக்கிழமை தோறும் கலாரசிகன் கி.வைத்தியநாதன் எழுதும்  "இந்த வாரமும்' என்னை ஈர்ப்பவை. 

முன்னதில் மாற்றுக் கருத்துகளைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றால், பின்னதில் புதிய படைப்பாளிகளை அறிய வாய்ப்பு கிட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com