ஒப்பாரும் மிக்காரும் இல்லா சங்கீத சாகரம்!: மகா வித்வான்களின் மகாவித்வான்!

முத்தையா பாகவதரின் காலத்தில் வாழ்ந்தவர் "மைசூர்' வாசுதேவாச்சார், "டைகர்' வரதாச்சாரியார், "செம்பை' வைத்தியநாத பாகவதர், "அரியக்குடி' ராமானுஜ ஐயங்கார், "மகாராஜபுரம்' விஸ்வநாதய்யர் ஆகியோர் கடந்த
ஒப்பாரும் மிக்காரும் இல்லா சங்கீத சாகரம்!: மகா வித்வான்களின் மகாவித்வான்!

முத்தையா பாகவதரின் காலத்தில் வாழ்ந்தவர் "மைசூர்' வாசுதேவாச்சார், "டைகர்' வரதாச்சாரியார், "செம்பை' வைத்தியநாத பாகவதர், "அரியக்குடி' ராமானுஜ ஐயங்கார், "மகாராஜபுரம்' விஸ்வநாதய்யர் ஆகியோர் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இசை உலகில் வலம் வந்த சங்கீத ஜாம்பவான்கள். அவர்கள் அனைவராலும் ஒருசேர "மகா வித்வான்' என்று அங்கீகரிக்கப்பட்டவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. "எல்லோருக்கும் இனியவராக' திகழ்ந்தவர் முத்தையா பாகவதர் என்று, சாதாரணமாக யாரையும் பாராட்டிவிடாத "மகாராஜபுரம்' விஸ்வநாதய்யரே அவரை வெளிப்படையாகப் பாராட்டிய தருணங்கள் உண்டு.

மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்த்திரிக்குப் பிறகு அனைத்துவிதமான சங்கீத வகைகளிலும், பிரிவுகளிலும் எண்ணிலடங்காத ராகங்களிலும் சாகித்யங்கள் இயற்றி இருக்கும் அசாத்திய சாதனை முத்தையா பாகவதருடையது. நானூறுக்கும் மேற்பட்ட சாகித்யங்களை வழங்கி இருக்கும் முத்தையா பாகவதரின் ராகமாலிகைகளை இன்றைய இசைக்கலைஞர்கள் வரை ரசித்துப் பாடுகின்றனர் என்பதுதான் சிறப்பு.

தீட்சிதரைப் போலவே பாகவதரும் நவா வர்ணக் கிருதிகளையும், நவக்கிரகக் கிருதிகளையும் புனைந்திருக்கிறார். தில்லானாக்கள், நாட்டுப்புற மெட்டுக்கள் என்று  சங்கீதத்தின் அத்தனை வகைகளையும் கையாண்டு வெற்றி கண்டவர் பாகவதராக மட்டும்தான் இருக்கும். பின்னாளில், பாலமுரளி கிருஷ்ணா மேற்கொண்ட பல முயற்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் முத்தையா பாகவதர் என்பதுதான் உண்மை.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முத்தையா பாகவதரின் காசிப் பயணம் அவருக்கு ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அறிமுகப்படுத்தியது - கர்நாடக இசைக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. சமஸ்கிருதத்திலும் புலமை அவருக்கு இருந்ததால், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் அவரால் சுலபமாகப் புலமை பெற முடிந்தது. 

ஏறத்தாழ 20 ராகங்கள் முத்தையா பாகவதரால் பிரபலப்படுத்தப்பட்டன. இப்போது இசைக் கச்சேரிகளில் மிகவும் வரவேற்புப் பெற்று கையாளப்படுகின்றன. விஜய் சரஸ்வதி, ஹம்சத்வனி, கர்ண ரஞ்சனி, புத மனோகரி, நிரோஷ்டா, ஹம்சாநந்தி உள்ளிட்ட ராகங்கள் இன்றைய இளைய தலைமுறையினரால் கச்சேரிகளில் பாடப்படும்போது முத்தையா பாகவதரின் நினைவு வராமலிருக்காது. மோகன கல்யாணியும், ஷண்முகப்ரியாவும் பாகவதருக்கு மிகவும் பிடித்த ராகங்கள். அந்தக் காலத்தில், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாடி மோகனமும், முத்தையா பாகவதர் பாடி மோகன கல்யாணியும் கேட்க வேண்டும் என்று இசை ரசிகர்கள் சிலாகித்துப் பேசுவார்கள்.

ஒரு முறை பர்மாவில் பாகவதரின் ஹரிகதா கச்சேரிக்கு ஹார்மோனியம் வாசிக்க ஆள் தேவைப்பட்டது. அங்குள்ளவர்கள் ஒரு 10 வயது சிறுவனை அழைத்து வந்து ""இந்தப் பையன் ரொம்ப நல்லா ஹார்மோனியம் வாசிப்பான். இந்த ஊரில் வேறு யாரும் தற்போது பக்க வாத்தியம் வாசிக்க ஆள் இல்லை'' என்று தெரிவித்தனர். 

அந்த சிறுவனிடம் ஒருசில ராகங்களை ஹார்மோனியத்தில் வாசிக்கச் சொல்லி முத்தையா பாகவதர் கட்டளை இட்டார். இவர் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக அந்த சிறுவன் எல்லா ராகங்களையும் அழகாக வாசித்து விட்டான். அந்த சிறுவனின் பக்க வாத்தியத்துடன் ஒரு வார காலம் வெகு சிறப்பாக முத்தையா பாகவதரின் ஹரிகதா கச்சேரி நடைபெற்றது. 

பிற்காலத்தில் இசை உலகில் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்ட விமர்சகர் சுப்புடுதான் அன்று பர்மாவில் முத்தையா பாகவதருக்கு ஹார்மோனியம் வாசித்த சிறுவன்.

- நிறைவு

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் நேரடியாக இசை பயின்ற சீடர்களில்  மதுரை மணி ஐயர், எஸ்.ஜி. கிட்டப்பா தவிர, நெல்லை டி.வி. கிருஷ்ணமூர்த்தி, வித்வான் ஸ்ரீனிவாசன், ராமநாதபுரம் சி.எஸ். சங்கரசிவம் சேர்வை, பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், அப்பாக்குட்டி ஐயர், என்.வி. நாராயணன், ஆபிரஹாம் பண்டிதரின் மகனான சுந்தர பாண்டியன், வக்கீல்  டி. ஆர். மகாலிங்கம் ஐயர்,  பெலக்குவாடி ஸ்ரீனிவாச ஐயங்கார், பெங்களூர் வரதராஜ ஐயங்கார், நாராயண ஐயர்,  மும்பை ஹெச். யக்னேஸ்வர பாகவதர், வயலின் ஏ. வெங்கடேஸ்வரன், ஏ. முத்தையா, வயலின் எம். சங்கர நாராயண ஐயர், வித்வான் கே.ஏ. ஸ்ரீனிவாசன், ஹரிஹர பாகவதர், ஹெச். எம். வைத்தியலிங்க பாகவதர், வீணை சுப்பிரமணிய  ஐயர், வடக்கனாஞ்சேரி மணி பாகவதர்,  நாதஸ்வர வித்வான் ஹரிகேசநல்லூர் மூக்காண்டி கம்பர் மற்றும் பாரசாலை பொன்னம்மா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாரசாலை பொன்னம்மா தற்பொழுது 
திருவனந்தபுரத்தில்  வசித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com