நடிக்கத் திரும்பும் முன்னாள் நாயகிகள்  

தமிழ் சினிமாவில் ஜொலித்த பல நடிகைகள் வாய்ப்புகள் இல்லாமல் விலகியது, திருமணம், அரசியல் காரணங்களுக்காக விலகியது... என நாம் மிஸ் செய்த நடிகைகள் எண்ணிக்கை ஏராளம்.
நடிக்கத் திரும்பும் முன்னாள் நாயகிகள்  


தமிழ் சினிமாவில் ஜொலித்த பல நடிகைகள் வாய்ப்புகள் இல்லாமல் விலகியது, திருமணம், அரசியல் காரணங்களுக்காக விலகியது... என நாம் மிஸ் செய்த நடிகைகள் எண்ணிக்கை ஏராளம். சினிமாவிலிருந்து விலகியிருந்து, மீண்டும் நடிக்க வந்து பரபரப்பாக இருப்பவர் ஜோதிகா. 2007-ஆம் ஆண்டு "மொழி', "பச்சைக்கிளி முத்துச்சரம்' படங்களுக்குப் பிறகு, 2015-இல் "36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் வந்தவர், தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதுபோல, 90-களிலும் 90-களுக்குப் பிறகும் கனவுக்கன்னியாக ஜொலித்துப் பிறகு, சினிமாவுக்குக் கொஞ்சம் இடைவெளி கொடுத்து இப்போது நடிக்க வந்து இருக்கிறார்கள் சில நடிகைகள். அவர்களைப் பற்றிய புதுத் தகவல்கள் இதோ...,

லைலா

கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான லைலாவுக்கு, "தீனா', "தில்' ஆகிய படங்கள் பெரும் திருப்பத்தைக் கொடுத்தது. பின், "நந்தா', "மௌனம் பேசியதே', "உன்னை நினைத்து' ஆகிய படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் "சூர்யாவுக்கு நல்ல ஜோடிப்பா' என்று பெயர் வாங்கினார். "பிதாமகன்' திரைப்படம் இவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. பின், தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்தவர், பிரசன்னாவுடன் "கண்டநாள் முதல்', அஜித்துடன் "பரமசிவன்' படங்களில் நடித்தார். "திருப்பதி' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார். பிறகு, திருமணமாகி குடும்பம், குழந்தை என இயங்கி வந்தவர், கோலிவுட் பக்கம், ஏன் சினிமா பக்கமே வரவில்லை. இப்போது யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா நடிக்கும் "ஆலிஸ்' எனும் ஹாரர் த்ரில்லர் படத்தில் பேயாக நடிக்கவிருக்கிறார்.

நக்மா

ஹிந்தி, தெலுங்கு என பரபரப்பாக நடித்து வந்த நக்மா, ஷங்கர் இயக்கத்தில் உருவான "காதலன்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இவரின் அசத்தல் நடிப்பு, அடுத்தப் படத்திலேயே ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக்கியது. உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்துவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வருவது எதார்த்தம்தானே. தொடர்ந்து, "மேட்டுக்குடி', "பிஸ்தா', "லவ் பேர்ட்ஸ்' படங்களில் நடித்தார். "சிட்டிசன்' படத்தில் மிரட்டலான சி.பி.ஐ அதிகாரி கதாபாத்திரத்தில் அசத்தினார். பிறகு, தமிழில் அவர் நடிக்கவே இல்லை. மராத்தி, பேஜ்பூரி படங்களில் பிஸியாக இருந்தவருக்கு அரசியல் ஆர்வம் வர, காங்கிரஸில் இணைந்தார். அரசியலுக்கு வந்த பின் அவர் நடிப்பதையே நிறுத்திவிட்டார். இப்போது, அவருக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்துள்ளதாம். தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார் நக்மா.

இஷா கோபிகர்

மும்பையில் பிறந்து வளர்ந்த இஷா கோபிகர், 1995 -ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் "மிஸ் டேலன்ட் கிரவுன்' பட்டம் வென்ற பிறகு, முதல் வாய்ப்பை கொடுத்தது, டோலிவுட்தான். நாகர்ஜுனா நடித்த "சந்திரலேகா' படத்தில் அறிமுகமானார். பின், "காதல் கவிதை', "நெஞ்சினிலே', "என் சுவாசக் காற்றே', "நரசிம்மா' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து நடித்துப் பிரபல வரிசைக்கு வந்தார். அவருக்குப் பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வர அதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். ஹிந்தியில் அதிகப் படங்கள் நடித்துகொண்டிருந்தவர், பின் தென்னிந்தியா பக்கம் வரவே இல்லை. இப்போது, 17 வருடங்கள் கழித்து, கோலிவுட்டில் மறு பிரவேசம் கொடுக்க இருக்கிறார். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

பிரியங்கா திரிவேதி

பெங்காலி மொழியில் தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த பிரியங்கா திரிவேதி, "ராஜ்ஜியம்' படத்தின் மூலம் விஜய்காந்த்துக்கு ஜோடியாகத் தமிழில் அறிமுகமானார். பின், அஜித்துடன் "ராஜா', விக்ரமுக்கு ஜோடியாக "காதல் சடுகுடு' உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்குத் தமிழில் வாய்ப்புகள் குறைந்தது. அதனால், பெங்காலி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். கன்னட நடிகர் உபேந்திராவைத் திருமணம் செய்த பிறகு, சில காலம் நடிக்காமல் இருந்தவர், இப்போது கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவான "ஹவுரா பிரிட்ஜ்' திரைப்படம் விரைவில் கன்னடத்திலும் தமிழிலும் வெளியாக உள்ளது. தவிர, மஹத், யாஷிகா ஆனந்த் நடிக்கும் த்ரில்லர் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மகேஷ் -
வெங்கடேஷ் இயக்குகின்றனர்.

மதுபாலா

கே.பாலசந்தர் இயக்கத்தில் "அழகன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மதுபாலாவுக்கு, "ரோஜா' திரைப்படம் உச்சபட்ச அந்தஸ்தை கொடுத்தது.

பிறகு, "ஜென்டில்மேன்', "மிஸ்டர்.ரோமியோ', "பாஞ்சாலங்குறிச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் நடித்துக்கொண்டே பாலிவுட்டிலும் அசத்தினார். சிலகாலம் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தவர், மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். "வாயை மூடிப் பேசவும்' படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது "சென்னையில் ஒருநாள் 2' படத்தை இயக்கிய ஜான் பால்ராஜ் - ஷாம்சூர்யா இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் "அக்னி தேவ்' எனும் அரசியல் படத்தில் வில்லியாக நடிக்க இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com