மது அருந்தினால் அபராதம்

தமிழகத்தில் எத்தனையோ கிராமங்கள் உள்ளன. ஆனால் சிவகங்கை மாவட்டம் மதகபட்டியை அடுத்துள்ளது ஆலவிளாம்பட்டி கிராமம்  இது தமிழகத்திற்கே முன்னோடியாக விளங்குகிறது.
மது அருந்தினால் அபராதம்


தமிழகத்தில் எத்தனையோ கிராமங்கள் உள்ளன. ஆனால் சிவகங்கை மாவட்டம் மதகபட்டியை அடுத்துள்ளது ஆலவிளாம்பட்டி கிராமம்  இது தமிழகத்திற்கே முன்னோடியாக விளங்குகிறது.  காரணம் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் யாரும் மது அருந்துவதில்லை. வரதட்சணை வாங்குவதும் இல்லை கொடுப்பதும் இல்லை.

இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இது பற்றிக் கேட்ட போது சொன்னார்கள்:

""எங்கள் கிராமத்தில் யாரும் மது அருந்துவதில்லை. அப்படி யாராவது மது அருந்தியது தெரியவந்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிப்பார்கள். மேலும் அவர்களுக்கு மொட்டையும் அடிக்கப்படும். தன்னுடைய தவறை உணர்ந்தவர்கள் மது அருந்தும் பழக்கத்தை விட்டுவிடுவார்கள். வெளியூரைச் சேர்ந்தவர்கள் மது அருந்தி விட்டு ஊருக்குள் வந்தது தெரியவந்தால் அவர்களைப் பிடித்து மரத்தில் கட்டிப் போட்டுவிடுவோம். அவர்கள் மன்னிப்பு கேட்ட பிறகு தான் விடுவிக்கப்படுவார்கள். இது மட்டுமல்ல நாங்கள் யாரும் உடலில் பச்சை குத்திகொள்ள மாட்டோம். 700 ஆண்டுகளாக இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறோம். எங்கள் ஊருக்கு வருபவர்கள் பலரும் இந்த விஷயங்களைப் பார்த்து வியந்து போகிறார்கள். அதுவே எங்களுக்குப் பெருமையாக உள்ளது'' என்கிறார்கள். 

எப்படி இந்த நடைமுறை உருவானது?:  இங்கு 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். இந்த ஊருக்குள் 13-ஆம் நூற்றாண்டில் குடியேறினார்கள், இங்குள்ள பொன்னழகி அம்மனுக்குக் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையில் தற்போது வரை தலைமுறை, தலைமுறையாக மது அருந்தாமல் உள்ளனர்.  இவ்வூர் மக்கள் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலன்று ஊர் எல்லையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பருக்கு பொங்கல் வைத்து, 7 தெய்வங்களுக்குப் படைத்து வழிபடுகின்றனர். பின்னர் இத்தெய்வங்களின் நினைவாக 7 கோடிட்டு, வீட்டுக்கு ஒருவர் வீதம், "மது அருந்த மாட்டோம்' என சத்தியம் செய்கின்றனர். இப்பழக்கம் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இது தொடர்பான கல்வெட்டு ஊர் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.

""எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலானவர்கள் தொழில் விவசாயம் தான். சுயதொழில் செய்வதால் வருமானத்திற்கு யாரையும் சார்ந்து இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் மது அருந்தும் பழக்கம் கிடையாது. மேலும் வீட்டில் பெண் குழந்தைகள் அதிகம் இருந்தாலும் கவலைப்படுவதில்லை. காரணம் நகையோ, பணமோ சேர்க்க வேண்டிய தேவையில்லை. வரதட்சணை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் பெற்றோர்கள் ஆகிய நாங்கள் பலர் நிம்மதி பெருமூச்சு விடுகிறோம்'' என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த அபிராமி. 

மூன்றாவது கண்: "சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எங்கள் மீது பெரும் மரியாதை உண்டு. மது அருந்தாமல் காலம் காலமாய், நாங்கள் கட்டி காத்து வந்த இந்தப் பழக்கம் வரும் காலத்திலும் தொடரும். சென்னை போன்ற பெருநகரங்களை மூன்றாவது கண் போன்ற திட்டங்கள் மூலம் காமிராவால் கண்காணிக்கும் போது எங்களை ஊரை கண்காணிப்பது எளிது. முக்கியப் பகுதிகளில் காமிரா பொருத்தியுள்ளோம். அதனால் ஊருக்குள் நுழைப்பவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வெளி நபர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் எங்களுக்கு உடனே தகவல் வந்து விடும் என்கிறார்கள் இந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com