இசைவாணர்களும், எழுத்தாளர்களும்!

இலக்கியம் என்பது அதாவது கவிதை, கதை என்பது எல்லாம் மொழியில் சொல்லப்படுகிறது.
இசைவாணர்களும், எழுத்தாளர்களும்!


இலக்கியம் என்பது அதாவது கவிதை, கதை என்பது எல்லாம் மொழியில் சொல்லப்படுகிறது. அதாவது ஒசைதான் சொல்லாக, வார்த்தையாகப் பொருள் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு சொல்லும்-வார்த்தையும், இலக்கணத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. சொல் மீது ஒரு பொருளோ, பல பொருட்களோ ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. கண்களால் கண்டதை, காதால் கேட்டதை, மனதில் கற்பனையில் உதித்ததை சிந்தனையில் உருவான கருத்துகளை மொழியில் அப்படியே சொல்ல முடியவில்லை. கூட்டியும் குறைத்தும், மாற்றியும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் கிரகிப்பதில் உள்ள குறைபாடும்; பேசும் மொழியில் இருக்கும் பொருத்தமான சொற்களை அறியாமல் இருப்பதும்தான். சொல் இல்லாதது.

தமிழ் மொழியில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் சொற்கள் இருக்கின்றன என்று அகராதி தொகுப்பாளர்கள் கூறுகிறார்கள். அது முழுமையான கணக்கில்லை. கூடுதலாகவும், குறைவாகவும், இருக்கலாம். ஆனால் அகராதியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் கொண்டது. எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியம்.

தமிழ்நாட்டில், தமிழ்மொழி பேசிக்கொண்டு வாழ்வதற்கு ஒருவருக்கு எத்தனைச் சொற்கள் தெரிந்திருக்க வேண்டும். அது அடிக்கடி கேட்கப்படும் கேள்விதான். மருத்துவர் தன் தொழில் சார்ந்து பணியாளர்களிடமும், நோயாளியிடம் பேச எத்தனை சொற்கள் அறிந்திருக்க வேண்டும். பத்திரிகை ஆசிரியர், அரசியல், சமூகம் பற்றி கட்டுரைகள் எழுத எத்தனை சொற்கள் அறிந்திருக்க வேண்டும். கவிதைகள் எழுதும் கலைஞர்களுக்கு எத்தனை சொற்கள் தேவையாக இருக்கும். உரைநடையில் ஐநூறு பக்கங்களில் நாவல் எழுத எவ்வளவு சொற்களால் சாத்தியமாகிறது. ஆட்டோ ஓட்டுநர், தையல்காரர், இல்லத்தரசிகள் எத்தனை சொற்களில் காரியங்கள் செய்கிறார்கள்.

ஒருவர் எந்தப் பணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாழ்வதற்கு எழுதுவதற்கு ஐம்பதில் இருந்து ஆயிரம் சொற்கள் இருந்தால் போதும். செய்யும் தொழில், புரியும் வாணிபம் சார்ந்து ஐம்பது அறுபது சொற்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.

ஒரு மொழியில் இருக்கும் சொற்களைப் பேசுகிறவர்கள் உருவாக்குவதில்லை. கலைஞர்கள், கைத் தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், சாகித்ய கர்த்தாக்கள் சொற்களை உருவாக்குகிறார்கள். அது மூளையில் ஏற்றி வைக்கப்பட்டு விடுகிறது. அர்த்தம் கொண்ட சொற்களை அர்த்தத்தை மறைத்துச் சொல்லும் சொற்களை நொடிப் பொழுதில் மூளையில் இருந்து எடுத்துச் சொல்கிறார்கள். சிலர் எந்தச் சொல்லைச் சொல்வது என்று யோசித்தும் சொல்வதுண்டு. அதற்குக் காரணம் தான் சொல்வது கேட்பவர் மனதில் பதிய வேண்டும் என்பதுதான். அதைத்தான் திருவள்ளுவர் "வெல்லும் சொல் இன்மை அறிந்து சொல்ல வேண்டும்' என்கிறார்.

பேச்சு என்பது ஓசை. அதாவது வாயொலி. இருவர் தங்களுக்குத் தெரிந்த மொழியில் உரையாடும்போது, மொழி அறியாத மூன்றாவது ஆளுக்கு அது வெறும் சப்தம். அரவம். பொருள் இருந்தாலும் அறியாதது.
சங்கீத வித்வான்கள் சாகித்யத்தைப் புறந்தள்ளி விட்டு, இசைக்கு மொழியே இல்லை. அது மொழி கடந்தது. செவியால் கேட்கும்போது ஆழ் மனத்திற்குள்ளும் நுழைந்து நெகிழ வைத்து விடுகிறது. அது இயற்கையானது. காற்றுத் தந்தது. ஆதி மனிதர்கள் சாகித்யம் இல்லாமல் தான் சங்கீதத்தைக் கொண்டிருந்தார்கள்.
புல்லாங்குழல், வீணை, நாதசுரம், வயலின் எல்லாம் ஒலியையே மனங்கவரும் இன்னிசையாக்கி உள்ளது. எனவே தான் மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களை விட இசை மேலானது. அது வாய்ப்பாட்டாக இருந்தாலும் சரி, வாத்தியங்களில் இசைக்கப்படும் இசையாக இருந்தாலும் சரி என்று சொல்லப்பட்டு வருகிறது. அதற்குச் சொல்லப்படும் காரணம் மொழி என்பது மனித அறிவால் கண்டுபிடிக்கப்பட்டது. இலக்கியம் பாட்டு என்பனவற்றை எழுதும் எழுத்து என்பது ஒரு கண்டுபிடிப்பு. இரண்டு கண்டுபிடிப்புகளின் சங்கமம் தான் இலக்கியம்.
இசை என்பது இயற்கையானது. மரம், செடி கொடிகளுக்கிடையில் காற்று புகுந்து செல்லும் போது ஏற்படும் ஒலியே இசைக்குப் பிரதானம். இயற்கையில் இருந்து பெற்றதையே கருவிகள் வழியாகக் கொடுக்கிறார்கள். ஆனால் காற்று எப்பொழுதும் ஒரே மாதிரி வீசுவதில்லை. மரத்தின் இலைகள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி அசைவதில்லை. கடலலைகள் காற்றுக்கு ஏற்ற மாதிரி, மாறிமாறி பாடுகின்றன. ஒரே மாதிரி எழுப்பப்படும் ஓசையில் மனம் கவர்வதைக் கண்டுபிடித்து கருவிகள் செய்து திடமான முறையில் பாடவும், கேட்கவும் இலக்கணம் அமைத்துக் கொண்டார்கள். இலக்கணம் என்பது ராகம் தாளம்தான். 
ஒரே மாதிரி இசைக்கப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். கடுமையான பயிற்சி மேலான கலைஞனை உருவாக்கி விடுகிறது என்று சொல்லப்படுகிறது. கலையென்பது பயிற்சியால் உருவாவதில்லை. பயிற்சி கலையை இரண்டு படிகள், மூன்றுபடிகள் கீழே இறக்கிவிடுகிறது. ஆனாலும் பயிற்சி இல்லாமல் இசையில்லை.
மூன்று நான்கு வயதில் இசையென்பதோ-கலையென்பதோ இன்னதென்று அறியாத வயதில் இசையில் பயிற்சி பெற சிறுவர்கள்-சிறுமிகள் குருவிடம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் பயிற்சி பெறுகிறார்கள். குருவானவர் தனக்கென்று இருக்கும் பாணியிலேயே பயிற்சி கொடுக்கிறார். சீடர்கள் குருவைப் போலவே பாடவும், இசைக் கருவிகளை இசைக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். ராகமும், தாளமும் அவர்களைக் கட்டுக் கோப்பிற்குள் வைத்துவிடுகிறது. பாடகர் பரம்பரையில் தொடர்ச்சியாகி விடுகிறார். ஞானம் மிகுந்த கலைஞர்கள் குருவின் பாணியில் இருந்து தைரியமாக வெளியே வந்து தனக்காவது ஒரு பாணியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
 கலையென்பது எந்தவொரு குருவாலும் கற்றுக் கொடுக்கக்கூடியது இல்லை. சீடர்கள் பாடுவதும் கிடையாது. தன் இதயத்தில் சுரக்கும் கலையைப் பயிற்சி என்ற பெயரில் தரமும், உயிர்ப்பும் இல்லாமல் பாடுவதில்லை.
கலைகளிலேயே குருவின் பயிற்சி இல்லாமல் நீடித்து நிற்கும் கலையென்றால் அது எழுத்து மட்டுந்தான். அது எப்போதும் உயிர்ப்புடன் இருப்பது. அதற்குக் குரு கிடையாது என்பதோடு குரு-பரம்பரை என்பதை ஒழித்ததும் அது தான். ஒவ்வொரு படைப்புக் கலைஞனும் தனக்கு முன்பாகவே சம காலத்திலோ இருக்கும் அசலான படைப்புகளைத் தள்ளிவிட்டு முன்னே போகவே எழுதுகிறான். அதனை அறிந்து செய்கிறவர்கள் சிலர்; அறியாமல் செய்கிறவர்கள் பலர்.
கவி சக்ரவர்த்தி என்று கொண்டாடப்படும் கம்பரை படித்து ரசிக்கும் எழுத்தாளர்கள் ஒரு பொழுதும் அவர் போல் எழுத விழைவதில்லை. எழுத முடியுமா? இயலுமா என்பது கேள்வியே இல்லை. எழுதக்கூடாது என்பதே இலட்சியமாக இருக்கிறது.
1908-ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கு சென்ற பாரதியார் பத்தாண்டுகள் சொந்தச் சிரமங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு கவிதைகள் எழுதி வந்தார். அவருக்கு கனகசுப்புரத்தினம் என்ற தமிழாசிரியர் பழக்கமானார். சுப்புரத்தினம் கவிதைகள் எழுதி வந்தார். அவற்றைப் பாரதியாரிடம் படித்துக்காட்டுவது உண்டு. "எங்கெங்கு காணினும் சக்தியடா?' என்ற பாட்டைக் கேட்டு மனம் பறி கொடுத்தார். பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது என்று சுதேசமித்திரனுக்கு அனுப்பி வைத்தார்.
கனகசுப்புரத்தினம் தன் பெயரை பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டார். ஆனாலும், இருவரும் ஒன்று இல்லை என்பது மட்டுமல்ல எதிரானவர்கள். எழுத்துக் கலைஞர்கள் இன்னொரு படைப்பைக் களவாடியோ, கடன் வாங்கியோ எழுதுவதில்லை. சமூக பிரக்ஞையே எழுதவும், போராடவும் வைக்கிறது. அவர் இன்னொருவர் கற்றுக் கொடுத்ததை-அது எவ்வளவு மேலானதாக இருந்தாலும் புறந்தள்ளி விடுகிறார்கள். 
தன் படைப்புத் தனக்கே சொந்தமானது. அதில் இன்னொருவர் பங்களிப்பு எந்த விதத்திலும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதோடு தன் படைப்புகளில் வெற்றி பெற்றதைக் கூட அவர்கள் முன் மாதிரியாக வைத்துக் கொண்டு எழுதுவதில்லை. ஒவ்வொரு படைப்பும் தன்னளவில் புதிதாக இருக்க வேண்டும் என்றே எழுதுகிறார்கள்.
தமிழில் உரைநடையில் சிறுகதைகள் எழுதி சமூக விமர்சனம் செய்தவர் புதுமைபித்தன். தமிழ்ச் சிறுகதையை மேல் தரத்திற்கு எடுத்துக் கொண்டு சென்றவர். ஏற்கப்பட்டது- அங்கீகரிக்கப்பட்டது என்பதையெல்லாம் புறந்தள்ளி எழுதியவர். அவர் தன் காலத்தில் கலகக்காரராக இருந்தார். அவருக்குப்பின்னால் சுயமாக எழுத ஆரம்பித்தவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். நீ எதனோடும் சேர்ந்து போகாதே என்று கதைகள் வழியாகவே வழிகாட்டினார்.
எழுத்துக் கலைஞர்களின் பிரதான அம்சம் பணிந்து போவதில்லை. அது படைப்பில் என்றுதான் இல்லை. சமூக வாழ்க்கையிலும் அதிகாரம் என்பதற்கு அடங்கி இருப்பது கிடையாது. எதிர்ப்பு- நல்லதற்கு எதிரான எல்லா அதிகாரத்தையும் முதலில் எதிர்ப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள். அதில் நாடு, மொழி என்ற பாகுபாடு இல்லை. தன் வாழ்க்கை-உயிரை சமூகத்திற்காக அர்ப்பணிப்பதில் பின்னே நிற்பதில்லை. அது அவர்கள் சமூகத்தில் இருந்து பெற்றதும்- சமூகத்திற்கு அவர்கள் வழங்கியதுந்தான். அது மரபாக இருந்து வருகிறது. 
ஒவ்வொரு படைப்புக்குக் கலைஞனும், தனக்கு முன்பாக எழுதப்பட்டவைகளைக் கடந்து போகவே எழுதுகிறான். அந்தப் படைப்புகளில் பழைமையின் எச்சம் இருக்குமானால் அது இயல்பாக சேர்ந்து கொள்வது. அவன் விரும்பி செய்தது இல்லை.
இலக்கியப் படைப்பில் பரம்பரை கிடையாது. அறிவுஞானம் என்பது குடும்பப் பாரம்பரியத்தில் இருந்தோ- குரு சிஷ்யர் பரம்பரையில் இருந்தோ வருவது இல்லை. அது யாருக்கும் வரலாம். ஆனால் பயிற்சி மூலம் பெற முடியாது.
ஒரு எழுத்தாளனை விரும்பிப் படிக்கும் யாரும் எழுத்தாளனுக்குச் சீடன் கிடையாது. அவன் ஒரு கலைஞன்.இவனொரு மகா கலைஞன். அது தமிழ் மரபு மட்டுமல்ல; சர்வதேச மரபு என்று உயிரோடு இருந்து வருவது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com