எம்ஜிஆரின் நினைவு நாள்: 24-12-2020 - அவர்தான் எம்.ஜி.ஆர்

எம்ஜிஆரின் திரையுலக மற்றும் அரசியல் பொதுவாழ்க்கைப் பயணத்தில் 1955-ஆம் ஆண்டு முதல்  இறுதிவரை நீண்டகாலம் அவரின் மெய்காப்பாளராகச் செயல்பட்டவர் கேபி.ராமகிருஷ்ணன்.
எம்ஜிஆரின் நினைவு நாள்: 24-12-2020 - அவர்தான் எம்.ஜி.ஆர்

எம்ஜிஆரின் திரையுலக மற்றும் அரசியல் பொதுவாழ்க்கைப் பயணத்தில் 1955-ஆம் ஆண்டு முதல்  இறுதிவரை நீண்டகாலம் அவரின் மெய்காப்பாளராகச் செயல்பட்டவர் கேபி.ராமகிருஷ்ணன். எம்ஜிஆரின் எளிமையான வாழ்க்கைப் பக்கத்தினைத் தனது அனுபவ நினைவுகளாக இங்கு தருகிறார்:

எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர் எம்ஜிஆர் என்பதற்கு அவரது வாழ்வில் எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம். எம்ஜிஆரின் இந்த எளிமை என்பது அவரது இளமைக் காலம் தொட்டு இறுதிவரை அப்படியே மாறாமல் இருந்தது. இளமையில் அவர் அனுபவித்த வறுமையும் அதன் காரணமாக சமூகம் அவருக்கு கற்றுதந்த பாடங்களையும் பிரதானமாகக் கூறலாம். 

சிறுவயதில் நாடகங்களில் நடித்து வந்த காலங்களில் பசியின் கொடுமையை நன்கு உணர்ந்த அவர்  பிறரது கஷ்ட நஷ்டங்களையும் நன்கு உணரக்கூடியவர் தான். பொருளாதார நிலையில் அவ்வளவாக வளராத சூழலில் ஒரு சாதாரண பாயில் தரையில் படுத்து உறங்கியவர் அவர்.  பின்னாளில் தனது கடும் உழைப்பினால், முயற்சியினால் வளர்ந்து  பெரிய மனிதராக உயர்ந்த பின் எத்தனையோ ஹம்சதூளிகா மஞ்சங்கள் எல்லாம் அவரைத் தேடி வந்தன.  அவையெல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஒரு சாதாரண மரத்தாலான கட்டிலையே இறுதிவரை பயன்படுத்தினார்.  

1970-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய நட்சத்திரமாக அவர் உயர்ந்த பின் எம்.ஜி.ஆரை காணவரும் பல்வேறு  பெரிய மனிதர்கள் அவரிடம்  "உங்களது எளிமையை  நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் உறக்கம் என்பது நமது வாழ்வில் முக்கியமான ஒன்று. அதில் கூட எளிமை வேண்டுமா? சொல்லுங்கள். வெளிநாட்டிலிருந்து உயர்தரக் கட்டில்களை வரவழைக்கிறோம்'  என்பார்கள். அதற்கு எம்ஜிஆரோ "நான் தூங்குவதே ஐந்து மணி நேரம் தான் அதற்கு ஏன் இந்தஆடம்பரம்' என்று கூறிவிடுவார்.   

அவர் வீட்டிலுள்ள அமரும் நாற்காலிகள் டேபிள்கள் உட்பட பல்வேறு உபகரணங்களும் இறுதிவரை விலை உயர்வில்லா மரத்தால் செய்யப்பட்ட சாதாரணமானவைகளே. பொது வாழ்வில் மக்களை சந்திக்க நீண்ட பயணவழி மேற்கொள்ளும் போதும் தேர்தல் பிரச்சார சமயங்களின் போதும் ஆடம்பரமில்லாத வகையிலான சாதாரண வில்லிஸ் வேனிலேயே பயணம் மேற்கொள்வார். அந்த வாகனத்தில் எவ்வித ஆடம்பர வசதிகளும் இருக்காது. அப்போதெல்லாம் இரவு பகல் பாராது தொடர் பிரச்சார பயணம் மேற்கொள்ளும் போதும் குறிப்பாக காட்டுவழி பயணங்களின் போதும் நள்ளிரவு சமயங்களில் இயற்கை உபாதைகளுக்குக் கூட ஆள் அரவமற்ற காட்டுப்பகுதிலேயே  முடித்துக்கொள்வார். 

அந்த சமயங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பாதுகாவலர்களாகிய நாங்கள் கையில் டார்ச் விளக்குடன் அவரைப் பின் தொடர்ந்தால், "வேண்டாம்' என்று கூறி மிகுந்த தைரியமுடன் தனிமையிலேயே செல்வார். இருப்பினும் அவருக்கு எவ்வித இடையூறும் ஏற்படா  வண்ணம் எங்கள் பணியைச் சரியாக செய்வோம். 

தேர்தல் பிரச்சாரக் காலங்களில் நீண்ட தூரப் பயணம் என்பதால் நேரத்திற்கு உணவு உட்கொள்ள முடியாது. எனவே உடன் இருப்பவர்களின் பசி நிலையறிந்து சில சமயங்களில்  சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத  பகுதியில் வண்டியை நிறுத்தி ஒரு போர்வையை விரித்துத் தரையில் அமர்ந்து அனைவருடனும்  உணவு சாப்பிட்ட நிகழ்வுகள் எல்லாம் கூட வரலாற்றில் அவரது எளிமையான பக்கங்கள் தான்.

பொதுவாழ்விற்கு மக்கள் பணியாற்ற வந்துவிட்ட  பின் உயிரைப் பற்றிக் கவலை கொள்ளவும் கூடாது , ஆடம்பரங்களும் கூடாது என்பதே எம்ஜிஆரின் எண்ணமாக இருந்தது.  அதேபோல் முதல்வர் ஆகி விட்ட  பின்னரும் எவ்வித ஆடம்பர வசதிகள் இல்லாத அம்பாசிடர் காரையே இறுதிவரை பயன்படுத்தினார்.  அவர் நினைத்திருந்தால் திரையில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தபோதே ஆடம்பரமிக்க வெளிநாட்டுகார்களை பயன்படுத்தியிருக்கலாம். எனினும் எளிமையான வாழ்வையே அவர் விரும்பினார். 

பல்வேறு வெளிநாடுகளுக்கு அவர் சென்றிருந்தபோதெல்லாம் அவருடன் செல்வோர் பல்வேறு பொருள்களை வாங்க முற்படுவர். சிலருக்கு எம்ஜிஆரே பணம் கொடுத்து வெளிநாட்டு பொருள்களை வாங்கி கொடுத்துள்ளார் என்றாலும் அவர் எந்த பொருளையும் விரும்பி வாங்கமாட்டார், எவரேனும் தங்கள் அன்பளிப்பாக அவருக்கு கொடுத்தாலும் அவற்றை தன்னுடன் இருப்பவர்களுக்கு கொடுத்துவிடுவார்.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  பொருட்களையே மிகவும் விரும்பி பயன்படுத்துவார்.  

ஆடம்பரமாக வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் எம்ஜிஆரின் எளிமையே மக்களிடம் அவருக்குச் செல்வாக்கு பெற்று தருவதற்கான வாய்ப்புகளில் ஒன்றாக இருந்தது. 

திரையில் எம்.ஜி.ஆர் கோலோச்சிய காலங்களில் படப்பிடிப்புக்களுக்காகப் பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும்போதும், அரசியல் பொது வாழ்வில் ஏராளமான கிராமங்களின் மூலை முடுக்குகளுக்கு சென்று மக்களைச் சந்திக்கும் போதெல்லாம் கூட  அந்த ஏழை எளிய மக்களின் குடிசை வீடுகளுக்கு உள்ளே சென்று அவர்கள் தரும் உணவுகளை எவ்வித தயக்கமுமின்றி விரும்பி உண்பார். உடனிருப்பவர்களில் ஒரு சிலர் இது குறித்து கேட்டால், "ஏழைகள் தரும் இப்படியான எளிமையான உணவுகளின் சுவை உங்களுக்குத் தெரிய நியாயமில்லை. இளமைக் காலத்தில் இப்படியான உணவுகளுக்கு நானும் அண்ணனும் அம்மாவும் பட்ட கஷ்டம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று, இன்று வசதி வாய்ப்புகள் வந்துவிட்டது என்பதற்காக நான் இந்த உணவுகளை மறந்தால் என் தாய்கூட என்னை மன்னிக்கமாட்டார்' என நெகிழ்ச்சியுடன் கூறுவார்.  

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் உணவு உண்ணும் சமயங்களில் அதிகபட்சமாக தரையில் அமர்ந்து உணவு உட்கொள்வதையே விரும்புவார் எம்ஜிஆர். இப்படியாக எண்ணிலடங்கா ஏழை மக்களின் குடும்பங்களில் ஒருவராகவே எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர் எம்ஜிஆர்.

எளிமை என்பதை அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி ஏழ்மை நிலையிலும் எளிமையாக இருப்பவர்களையும் எம்ஜிஆர் மிகவும் விரும்புவார். தனவந்தர்கள், செல்வந்தர்கள் என எண்ணற்றோர் அவரை விரும்பி காண வந்திட மிகச் சாதாரணமானவர்களை நேசிப்பதும் அவர்களிடம் அளவளாவுவதிலுமே எம்ஜிஆர் ஆர்வம் கொள்வார். 

அவரது தோட்டத்தில் நீண்டகாலம் காவலாளியாகப் பணியாற்றிய கிருஷ்ணனிடம், சமையற்காரர்களிடம், தோட்ட வேலை செய்பவர்களிடம் அவ்வப்போது பேசுவார்.வெளியில் சென்றுவிட்டுத் தோட்டத்திற்குத் திரும்புகையில் காரை நிறுத்தி காவலாளி கிருஷ்ணனிடம்" சாப்பீட்டீர்களா?' என்று கேட்பார். இல்லையென்று அவர்கூறினாலோ கோபம் கொள்வர், "நேரத்திற்குச் சாப்பிட்டு வந்து பணியை செய்யுங்கள், அதற்காகத்தானே உழைக்கிறீர்கள்' என அன்புடன் கடிந்துகொள்வார்.  எம்ஜிஆரிடம் இருந்த எளிமையான இந்த நற்பண்புகளெல்லாம் அவ்வளவு எளிதில் வேறு எவரிடமும் காண கிடைக்காதது.   

இன்னும் சொல்லப்போனால் அவர் மக்களைச் சந்திப்பதற்காகப் பயன்படுத்தி வந்த தேர்தல் பிரச்சார வாகனத்தின் மேற்பரப்பில் மக்கள் தன்னைக் காணுமாறு ஒரு வட்ட வடிவிலான மரமேசை மீது நீண்டநேரம் நின்று கொண்டு வெயில் மழை போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் அவைகளை எதிர்கொண்டு அவர் மக்களைச் சந்தித்த காட்சிகளை அருகேயிருந்து கண்ட வகையில் இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்ந்துபோகும். மக்களைச் சந்திப்பதிலும் மிக எளிமையான நிலையினை அவர் மேற்கொண்டார். 

அவரது ராமாவரம் தோட்ட வீட்டிலும் ஆடம்பர வசதிகள் கிடையாது. சென்னை நகரின் ஒரு ஒதுக்குப்புறத்தில் சாதாரண நிலையில் 1955-ஆம் ஆண்டுகளில் அவர் அவ்வீட்டை வாங்கிபின் வேண்டிய கட்டுமான பணிகள் செய்தபின் 1962-இல் ராமாவரம் வீட்டில் குடியேறி இறுதிவரை அந்த வீட்டில்தான் முதல்வர் ஆன பின்னரும் வாழ்ந்து வந்தார். 

திரையில் முன்னணி நடிகராக உயர்ந்திருந்த போது லட்சங்களைச் சம்பளமாகப் பெற்றிருந்தபோதே அவர் நினைத்திருந்தால் சென்னையில் ஏராளமான ஆடம்பர பங்களாக்களை வாங்கிக் குவித்திருக்கலாம். 

 எம்.ஜி.ஆர் தானே முன்வந்து அவருக்கென்று வசதியான இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளமாட்டார் எனும் அவரது எண்ண ஓட்டத்தை நன்கறிந்த அவர் மீது பற்றுகொண்ட அவரது நலம் விரும்பிகளில் ஒரு சிலர் சென்னை நகரின் மையபகுதியில் ஆடம்பர பங்களாக்களை அவருக்காக வாங்கித் தரமுன்வந்த போதும் அவர்களின் கோரிக்கைகளை மறுத்துவிட்ட எம்ஜிஆர், தனது அன்னை கோயில் கொண்டுள்ள எளிமையான ராமாவரம் தோட்டத்தையே தனது வாழ்வின் வசந்தமாகக் கொண்டார்.  

இந்த எளிமை அவர் விரும்பி ஏற்றுக்கொண்டது. இளமையில் அவர்பட்ட  கஷ்ட நஷ்டங்கள் அவருக்கு வடிவமைத்துத் தந்தது.  இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பொதுவாக ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பின்னாளில் வசதி வாய்ப்புகள் அமைய பெற்ற சூழலில் அதற்கேற்றவாறு தங்களது வாழ்க்கைச் சூழலை மாற்றிக்  கொள்வது இயல்பு. ஆனால் கோடிக்கணக்கான மக்களால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களால் போற்றப்பட்டவர், திரையில் பொருளாதாரத்தில் உட்சபட்ச நிலையில் இருந்தவர்,  உலகின் எந்த ஒரு நாட்டிலிருந்தும் என்ன வேண்டுமென்றாலும் வரவழைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர், முதல்வராகப் பத்து ஆண்டுகள் தொடர்ந்து இருந்தவர் எனப் பல்வேறு உயர் பரிமாணங்களைக் கொண்டிருந்த ஒருவர்  இறுதிவரை எளிமையாகவே வாழ முனைந்தது ஆச்சரியம்தானே. அவர்தான் எம்ஜிஆர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com