பாராட்டி சீராட்டி வளர்த்த தாய் "தினமணி' 

இன்றைய தலைமுறையின் மீது ஒரு போர் தொடுக்கப்பட்டுள்ளது. சமூக வாழ்க்கைக்கும், சகஜமான சமூக வாழ்க்கைக்கும் சவால் விடுகிற அல்லது வேட்டு வைக்கிற வகையில் சொல்லப் போனால் வாழ்க்கையில்
பாராட்டி சீராட்டி வளர்த்த தாய் "தினமணி' 

இன்றைய தலைமுறையின் மீது ஒரு போர் தொடுக்கப்பட்டுள்ளது. சமூக வாழ்க்கைக்கும், சகஜமான சமூக வாழ்க்கைக்கும் சவால் விடுகிற அல்லது வேட்டு வைக்கிற வகையில் சொல்லப் போனால் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய நேரத்தை அப்படியே விழுங்கக்கூடிய வகையில் ஓர் இனம் தெரியாத போர் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போரின் வெகு துவக்கத்தில் அப்போதைய சூழ்நிலையில் நான் எழுதிய கட்டுரை. "காற்றில் பரவும் கலாசார விஷம்' தினமணி தலையங்கம் பக்கத்தில் நீளமான கட்டுரையாக  பிரசுரமானது. அறிஞர்கள் பலரும் பாராட்டினார்கள். எந்தவொரு தணிக்கைக்கும் உட்படாத வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தனியார் சாட்டிலைட் சேனல்களைப் பற்றி தான் அந்தக்கட்டுரை.

மிகவும் ஆபத்தான ஒன்று இது என்ற வகையில் அபாயச்சங்கு ஊதியிருந்தேன். இந்தக் கட்டுரையின் சாராம்சம் இன்றைக்கும் பொருந்தும். சமூக வலைதளங்கள் என்ற பெயரில்  வெளியாகும் பல அநாகரீக சமாச்சாரங்களுக்கு அந்தக் காலகட்டமே தொடக்கம். 

மருத்துவ மாணவனாக 1977-இல் தினமணி அலுவலகத்தின் உள்ளே நுழைந்து நான் சுற்றி வந்த காலத்தை எண்ணிப் பார்க்கிறேன். நாற்பத்தைந்து ஆண்டுகளைத் தாண்டிய தொடர்பு.

சே.ராமானுஜம், கே.ஆர் வாசுதேவன், இராம.சம்பந்தம் இன்றைய ஆசிரியர் குழுவிலுள்ள பலரும் அங்கீகரித்து உற்சாகம் அளித்தார்கள். எழுதிக் கொடுக்கும் கட்டுரைகள்  பிரசுரமானது. 

மருத்துவம் சம்பந்தமான கட்டுரைகள் போலியோ எனப்படும் இளம் பிள்ளை வாதம் சமூகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான "வருமுன் காவா தான் வாழ்க்கை' கட்டுரை பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. "கருவில் வளர்வது ஆணா? பெண்ணா?' "மலட்டுத் தன்மைக்கு மாற்று உண்டு' என்று வரிசையாகப் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து என் முதல் நூல் வெளியானது: "இசைபட வாழ்வோம்!' தலைப்பில். கட்டுரைகள் எல்லாமே தினமணி உபயம். 

இன்றைக்கும் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் அமைதியில்லை. 1998-ஆம் ஆண்டு சட்டப் பேரவைக் குழுவில் நான் அந்த மாநிலங்களில் சுற்றிப் பார்த்துவிட்டு எழுதிய கட்டுரை: "கிழக்கில் உதிக்காத சூரியன்' வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வகைகளில் அன்றைக்கு இருந்த இருளைப் போக்க  கோரிக்கை அல்லது எச்சரிக்கை விடுத்த கட்டுரை அது.  மலேசியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கையோடு எழுதிய கட்டுரை. "தென்கிழக்கில் சில பாடங்கள்'.

இப்படி எல்லா வகைகளிலும் எனக்கு உறுதுணையாக வந்து, கைபிடித்து நடத்திச் செல்லும் பத்திரிகை தினமணி என்பதை நான் நன்றியுடன் பதிவு செய்ய வேண்டும்.

பத்து ஆண்டுகள் நான் சட்டப் பேரவையில் உறுப்பினர். முதல் கன்னிப் பேச்சிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு கருத்தை "உதிர்ந்த முத்து' என்ற தலைப்பில் முதல் பக்கத்திலேயே வெளியிட்ட போது எனது கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை.

ஒரு முக்கியமான அம்சம் என் எழுத்து சுதந்திரத்தில் தினமணி கடுகளவு கூட தலையிட்டது இல்லை. ஆனால், தினமணியின் பெருந்தன்மை மட்டுமல்ல தன்மையே அது தான்.

இன்றைக்கும் என்னால் மறக்க முடியாத நாள் ஒன்று உண்டு. தலைவர் மூப்பனார் மறைந்துவிட்டார் என்று காலைப் பொழுதில் ஊருக்கு செய்தி கிடைக்கிறது. ஊரில் இருந்த எனக்கு செய்தி சொல்லப்படுகிறது. உடனே கார் வழியாக சென்னை புறப்பட்டேன். செல்லும் வழியிலேயே தினமணி ஆசிரியர் இராம.சம்பந்தத்திடம் பேசினேன். "மூப்பனாரைப் பற்றி  கட்டுரையை அனுப்புகிறேன். அவர் நல்லடக்கம் செய்யப்படும் தினம் அதாவது மறுநாள் தினமணியில் எனது கட்டுரையைப் பிரசுரம் செய்ய இயலுமா?' என்று ஆவலோடு கேட்டேன். "பகல் ஒரு மணிக்குள் என் கைக்குக் கிடைக்கும் வண்ணம் அனுப்புங்கள்!' என்றார். 

சென்னை சென்றடைய எடுத்துக்கொண்ட பயணத்தில் மூப்பனார் அஞ்சலி கட்டுரையை எழுதி அவருடைய பூதவுடல் கிடத்தப் பெற்றிருந்த காமராஜ் அரங்கில் மூலையில் உட்கார்ந்து அதை இறுதி செய்து தினமணி அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் அனுப்பி வைத்தேன். "அரிய வரிசையின் கடைசி மனிதர்' என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை நல்லடக்கம் செய்யப்பட்ட நாளில் பிரதான கட்டுரையாக சிறப்புற பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. அன்று கட்டுரை வடிவில் அஞ்சலி செலுத்திய நாளேடு தினமணி மட்டும் தான். அந்தப் பெருமையை இளைஞனாகிய எனக்கு தினமணி வழங்கியதை என்றைக்கும் மறக்க முடியாது. 

என்னைப் போன்ற பலருக்கும் தினமணி பாராட்டி சீராட்டி வளர்த்த தாய் எனில் மிகையன்று.  "வாரியர் ஒரு பெரியார்'; "தமிழ் மா முனிவர் மங்கலங்கிழார்"; என்ற வகையில் பெரியவர்களைப் போற்றிட தளம் அமைத்துத் தந்த தினமணி சங்கப் பலகை அல்லவா!

கட்டுரையாளர் : சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com