100 ஆண்டு காணும் பாம்பே சர்க்கஸ்!:  சாகசத்தால் மகிழ்விக்கும் கலைஞர்கள்...

பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கில் தன் உடல் வலியை வெளியே காட்டிக் கொள்ளாமல் சாகசம் செய்யும் கலைஞர்களின் அர்ப்பணிப்பும், தன் உடல் குறைபாட்டைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்
100 ஆண்டு காணும் பாம்பே சர்க்கஸ்!:  சாகசத்தால் மகிழ்விக்கும் கலைஞர்கள்...

பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கில் தன் உடல் வலியை வெளியே காட்டிக் கொள்ளாமல் சாகசம் செய்யும் கலைஞர்களின் அர்ப்பணிப்பும், தன் உடல் குறைபாட்டைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றவர்களை மகிழ்வித்தால்போதும் என்று நினைக்கும் கோமாளிகள் என அழைக்கப்படுபவர்களின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம். இப்படியாக ஒரு காலத்தில் சாகசத்தால், கோமாளிகளின் நகைச்சுவையால் பொழுதுபோக்கு உலகையே கட்டிப்போட்டிருந்தது சர்க்கஸ்.

முன்பு "சர்க்கஸ்' என்ற பெயரே ஒரு காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் உற்சாகம் பொங்கும் சொல். சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்படுகிறது என்றாலே அந்த ஊரே திருவிழாக்கோலம் பூணுவதுடன், வகுப்புகளில் சர்க்கஸ் கோமாளிகளின் சேட்டை, சாகசங்கள், விலங்குகளின் விளையாட்டு ஆகியவையே மாணவர்களின் பேசுபொருளாக இருக்கும். குழந்தைகளை சர்க்கஸ் அழைத்துச் செல்வது குறித்து அலுவலகம், வீடு என அதுகுறித்த பேச்சு அடிபடாத இடமே இருக்காது ஆக மொத்தத்தில் பொழுதுபோக்கின் உச்சம் இந்த சர்க்கஸ்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திரைப்படங்களில் சாகச காட்சிகள் அமைக்கப்பட்டு வரும் காலத்தில், 100 அடி உயரத்தில் பிடிமானமில்லாமல் அந்தரத்தில் இருந்து தலைகீழாகத் துணி மூலம் இறங்கும் பெண், அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி ஒருவர் காலை மற்றவர் பிடித்து, ஊஞ்சலுக்கு மாறும் காட்சிகள், 10 அடி கயிற்றில் நின்றபடி தலையில் கப் அண்டு சாசரை காலால் எடுத்து அடுக்கும் பெண், பெரிய வளையத்துக்குள் பைக் ஓட்டுவது, கத்தி மேல் படுப்பது, பிடிமானம் இல்லாத ஏணியில் ஏறுவது என கண்முன் உயிரைப்பணயமாக வைத்து சாகசத்தில் ஈடுபடும் கலைஞர்கள் இன்றைக்கும் உள்ளனர்.

""தொலைக்காட்சி, செல்லிடப்பேசி ஆகியவற்றின் வருகை வனவிலங்குகளைக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்த தடை, சர்க்கஸ் பார்ப்பதில் மக்களுக்குக் குறைந்து வரும் ஆர்வம் ஆகியவற்றால் தற்போது, அழியும் நிலைக்கு வந்துவிட்டது இத்தொழில். இந்தியாவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கம்பெனிகள் இருந்த காலம்போய், தற்போது 8 சர்க்கஸ் கம்பெனிகளே உள்ளன'' என்கிறார் பாம்பே சர்க்கஸின் உரிமையாளர் கே.எம்.சஞ்சீவ். அவர் மேலும் கூறுவதாவது:

""1920-ஆம் ஆண்டு அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் சிந்து மாகாணத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) இவரது தாத்தா குஞ்சு கண்ணனால் தொடங்கப்பட்டது இந்த பாம்பே சர்க்கஸ். அன்று தொடங்கி 3 தலைமுறையாக பல்வேறு சிக்கல்களுக்கு இடையே சர்க்கஸ் கம்பெனியை நடத்தி வருவதாகவும் கே.எம்.சஞ்சீவ் தெரிவிக்கிறார். மேலும், சர்க்கஸில் வனவிலங்குகளை ஈடுபடுத்த தடை விதித்ததால் 40 சதவீதம் தொழில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் எங்களிடம் 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது 150 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

சர்க்கஸ் கலை அழிந்து வருவதற்குக் காரணம் இதன் முக்கிய வாடிக்கையாளர்களான குழந்தைகளின் கைகளில் செல்லிடப்பேசி வந்துவிட்டதுதான். 1990-களுக்கு முந்தைய காலத்தில் 70 சதவீத சர்க்கஸ் இருக்கையைக் குழந்தைகளே நிரப்பி விடுவர். முதலில் தொலைக்காட்சி வந்தது, தற்போது செல்லிடப்பேசி இவை இரண்டுமே குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடித்துவிட்டன. அதேவேளையில் சர்க்கஸில் விதவிதமான கலைகளைப் புகுத்தினால் மக்களிடம் வரவேற்பு உள்ளதை அறிந்து கொண்டு காலத்துக்கேற்ப சாகச விளையாட்டுகளைப் புகுத்தி வருகிறோம். நாளுக்கு நாள் அழிந்து வரும் இந்தத் தொழிலை மேம்படுத்த கேரள அரசு சார்பில் தலச்சேரியில் சர்க்கஸ் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், சர்க்கஸூக்கு எதிர்காலம் இல்லை என்ற கருத்து நிலவுவதால், அக்கல்லூரியில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் விரும்புவதில்லை. இதனால், சாகச கலைஞர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.

தற்போது, எத்தியோப்பியாவைச் சேர்ந்த கலைஞர்களின் பார் சாகசம், பஞ்சவர்ணக்கிளிகளை வைத்து ரஷ்ய கலைஞர்கள் நிகழ்ச்சி, ஆப்பிரிக்கர்களின் சாகச சைக்கிள் நிகழ்ச்சி போன்ற புதிய வடிவிலான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், பார்வையாளர்களின் எண்ணிக்கை இதனால் சற்று உயர்ந்துள்ளது. ஆனால், தற்போது சர்க்கஸ் போடுவதற்கு இடம் கிடைப்பதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது. சென்னை உள்பட பெருநகரங்களில் இருந்த காலி இடங்கள் பெரும்பாலும் கட்டடங்களாக மாறிவிட்டன. குறிப்பாக சென்னையில் சென்ட்ரல் ரயில்நிலையத்துக்குப் பின்புறம் உள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் இதுவரை சர்க்கஸ் போட்டுவந்தோம். ஆனால், அங்கு அலுவலகம் கட்ட ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளதால், இனி வரும் காலங்களில் அங்கு சர்க்கஸ் போட முடியாது. சர்க்கஸ் கூடாரம் அமைக்கக் குறைந்தது 12,000 சதுர அடியாவது தேவைப்படும். பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்தும் இடம் தேவை. அந்த அளவுக்குக் காலி இடம் சென்னைக்குள் இல்லை. தீவுத்திடல், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சர்க்கஸூக்கு இடம் தருவதில்லை. அநேகமாக சென்னையில் நடைபெறும் கடைசி சர்க்கஸ் இதுவாகக் கூட இருக்கலாம். சர்க்கஸூக்கு இடம் அளிப்பது குறித்துத் தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

நமது சமூகத்தில் பல கலைகள் அழிந்துபோயுள்ளன. அதில், நிகழ்காலச் சாட்சியாக அழிவின் விளிம்பில் நிற்கிறது சர்க்கஸ். ஒரு காலத்தில் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய சர்க்கஸ் கலைஞர்கள் இன்று மகிழ்ச்சியில் இல்லை. அதற்கு அரசு மட்டுமல்ல சமூகமும் பொறுப்புதான்.

சர்க்கúஸ எனது உலகம்!

பாம்பே சர்க்கஸில் செல்லப்பிள்ளையாக வலம் வருபவர் மாமா துளசிதாஸ். 75 வயதைக் கடந்த இவர், பிகார் மாநிலம் சாப்ராவில் பிறந்தவர். கோமாளி என்று யாராவது சொன்னாலே கோபம் வரும் இயல்பைக் கொண்டவர்கள் மத்தியில், தனது ஊருக்கு பாம்பே சர்க்கஸ் வந்தபோது, அதில், இருந்த கோமாளி வேடமணிந்தவர்களைப் பார்த்து தானும் கோமாளியாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக வீட்டை விட்டு ஓடிவந்தவர் துளதிதாஸ். "" "1959-இல் பாம்பே சர்க்கஸில் சேர்ந்தேன். கடந்த 61-ஆண்டுகளாக கோமாளி வேடம் போட்டு குழந்தைகளை மகிழ்வித்து வருகிறேன். பல்வேறு ஹிந்தி படங்களிலும், சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளேன். கோமாளி வேடத்தில் என்னைக் கண்டவுடன் குழந்தைகள் முகத்தில் வரும் குதூகலச் சிரிப்பே எனக்கான உந்துசக்தி. கோமாளி வேடம் அணியாவிட்டால் அன்று இரவு நான் தூங்குவது மிகப்பெரிய கேள்விக்குறிதான். எனது உலகமே இந்த சர்க்கஸ்தான்'' என்கிறார் துளசிதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com