ரோஜா மலரே! - 20

நான் குழந்தை நட்சத்திரமாக நடித்து வாங்கிய முதல் ஷீல்ட் என்று சொல்லலாம்.
ரோஜா மலரே! - 20

நான் குழந்தை நட்சத்திரமாக நடித்து வாங்கிய முதல் ஷீல்ட் என்று சொல்லலாம். அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால் எனது பெயருக்கு முன்னால் இந்தக் கதாபாத்திரத்தை நீங்கள் சிறப்பாகச் செய்துள்ளீர்கள் என்று எழுத்தினால் எழுதி, அந்த ஷீல்டை எனக்குக் கொடுத்துள்ளார்கள். என்னைப் பொருத்தவரை இந்த ஷீல்ட் ஒரு பொக்கிஷம் . அந்த ஷீல்ட்டை இன்றும் என் வீட்டில் பத்திரமாக வைத்துள்ளேன். அந்தப் படத்தில் சாவித்திரி அம்மாவை போல் நடித்ததை எல்லோரும் பாராட்டி உள்ளார்கள். எனக்கு சாவித்திரி அம்மாவைநன்றாகத் தெரியும் என்பதினால் மட்டும் அல்ல, அவர் கூட நான் நிறையப் பழகி இருப்பதனால், சாவித்திரி அம்மா இப்படித்தான் நடப்பார்கள், இப்படித்தான் சிரிப்பார்கள் என்று ஓரளவுக்குத் தெரியும். அதனால் அவரது நடை உடை பாவனைகளை அப்படியே என்னால் தத்ரூபமாக வெளிக்கொணர முடியும். அதைத் தான் நான் செய்தேன்.

"ஒளவையார்' படத்தை அடுத்து எனக்குக் கிடைத்த ஒரு பெரிய, பிரமாண்டமான படம் “"மாயாபஜார்'”. சாவித்திரி அம்மா மட்டும் அல்ல, இந்த “"மாயாபஜார்'” படத்தில் அன்று இருந்த பெரிய நடிகர், நடிகைகள் எல்லோரும் நடித்திருந்தனர். அப்படிபட்ட legends கூட நானும் நடித்திருக்கேன் என்று சொல்வது எனக்கு இன்று மட்டுமல்ல என்றும் சந்தோஷம்தான். உதாரணமாக, என்.டி.ராமராவ், சந்தியா, டி.பாலசுப்ரமணியம், ருக்மணி, லக்ஷ்மி பிரபா, சாயாதேவி, ரங்காராவ், ரேலங்கி, கே.ஏ. தங்கவேலு போன்ற பலருடன் நடித்திருப்பதால் எல்லோரும் பார்த்து ரசித்தார்கள் என்று சொன்னால் அது 100 சதவீதம் உண்மை.

இன்று விஞ்ஞானம் மிகவும் வளர்ந்து விட்டது. ஆனால், அந்தக் காலத்தில் மார்கஸ் பார்ட்லே அவர்கள் பல காட்சிகளில் நம்மைப் பிரமிக்க வைத்து விடுவார். அவர் காமிராவில் ஜாலங்கள் செய்துள்ளார் என்று சொன்னால் அது மிகை இல்லை. அதுவும் "கல்யாண சமையல் சாதம்' என்ற ஒரு பாட்டு போதும். நம்மை வியக்க வைப்பதற்கு! சாவித்திரி அம்மாவும் சரி, ரங்காராவும் சரி இருவரும் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் மட்டும் அல்ல, இருவரும் இணைந்து நடித்த பல காட்சிகளும் நம்மை சிரிக்கவும், அதே சமயம் எப்படி இதைச் செய்திருப்பார்கள் என்று சிந்திக்கவும், வைக்கும்படி அந்தக் காட்சி அமைப்பு இருந்தது.

அவர்கள் இருவரின் சாதாரண உருவத்தைப் பெரிய உருவமாகக் காட்டுவதிலாகட்டும், பல்வேறு வகையான தந்திர காட்சிகளாகட்டும், மார்கஸ் பார்ட்லேவின் பங்கு மிகவும் அதிகம். அவர்கள் இருவரும் தாங்கள் வரும் அத்துணைக் காட்சிகளிலும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். தமிழில் இது கருப்பு வெள்ளைப் படம்தான். ஆனால், தெலுங்கில் இந்தப் படத்தைச் சமீபத்தில் கலரில் பார்த்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். இந்த மாதிரி ஒரு படத்தை நாகிரெட்டியாரும், சக்ரபாணியும் இன்று எடுக்க நினைத்தாலும் முடியாது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் என் பாத்திரத்தை நான்தான் செய்தேன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இதில் இயக்குநர் கே.வி.ரெட்டியின் பங்கும் இருக்கிறது . அவரது பாசம், அன்பில் யாருமே சொக்கிப் போவார்கள். நான் நடித்த இன்னொரு புகழ் பெற்றப் படமான “"தேவதாஸ்'” இயக்குநர் வேதாந்தம் ராகவையாவும் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர்களில் ஒருவர். ஆனால், அவர் மிகவும் கண்டிப்பானவர். அவருக்குக் காட்சி சரியாக வரவேண்டும் என்பதில் குறியாக இருப்பார். அதனால் குழந்தை என்றும் பாராமல் என்னை அதட்டி வேலை வாங்குவார். என்னைப் பொருத்தவரை வேலை நிறைவாக இருந்தால் எனக்கும் சந்தோஷம்தான், அதே சமயம் அந்தப் படம் வெற்றி பெற்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே?

விஜயா வாகினி நிறுவனம் போல இன்னொரு சிறப்பான தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம். தான். இதன் சிறப்புகள் பல என்றாலும் ஏ.வி.எம். நிறுவனத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்ததன் மூலம், நானும் புகழ் பெற்ற அந்நிறுவனத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவள் என்று கூறி கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஏ.வி.எம். என்ற மூன்று எழுத்துக்குப் பின்னால் மூன்று ஆங்கிலவார்த்தைகளைச் சொல்ல முடியும். அவை perfection, punctual, success என்ற மூன்றையும் சொல்லலாம். எப்பொழுதுமே ஒரு படம் எடுப்பதாக இருந்தால் அது சரியாக, நிறைவாக இருக்க வேண்டும் என்று செட்டியார் முதலில் முடிவு செய்வார். Perfection இருந்தால் தான் அந்தப் படமே சரியாக வரும் என்று அவர்களுக்குத் தெரியும். அதற்கு அடுத்தபடியாக நேரத்திற்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள்.

சரியான நேரத்தில் எல்லாமே ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் எல்லோரும் படப்பிடிப்பிற்கு வந்து, நாம் என்ன நினைத்தோமோ அதைச் சரியாக முடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் முதல் shot எப்படி நடந்தது என்று ஒரு ரிப்போர்ட் செட்டியார் மேஜைக்கு அன்று மாலையே சென்று விடும். அன்று படப்பிடிப்புச் சரியாக நடக்க வில்லை என்றால், ஏன் என்று செட்டியார் கேட்பார் என்று அதன் இயக்குநருக்கு தெரியும். அதை அடுத்த நாள் சரி செய்து எல்லாம் குறித்த நேரத்தில் நடக்க வேண்டும். இதை எல்லாம் செட்டியாரிடம் கூறி, அவரது ஒப்புதல் வாங்க வேண்டும். குறித்த நேரத்தில் எல்லாம் நடக்க வேண்டும் என்று நான் நினைத்தால் கூடவே ஏ.வி.எம் நினைவும் வரும்.

இதை எல்லாம் நாம் சரியாகச் செய்து முடித்தால் கடைசியாகச் சொன்னோமே சக்ஸஸ் (success) நம்மைத் தேடி தானாகவே வந்துவிடும். அதற்கு அவர்களின் பல படங்கள் சாட்சி. ஏ.வி.எம். ஸ்டூடியோவில்தான் நடிகர் திலகமே அந்த success வார்த்தையைச் சொல்லித் தான் தனது திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர் அப்படி எந்த இடத்தில் நின்று அந்த வசனத்தைப் பேசினாரோ, அதே இடத்தில் ஒரு பெயர் பலகையை இன்றும் பார்க்கலாம். 175 படங்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள். அந்தப் புகழ் பெற்ற நிறுவனம்தான் எனக்கும் கதாநாயகியாக நடிக்க முதலில் ஒரு வாய்ப்பு தந்து, அதன் மூலம் எனக்கு ஓர் அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது ஏ.வி.எம் நிறுவனம்.

ஆனால், நான் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்பே, அவர்களது படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். அந்தப் படத்தின் பெயர் “"செல்ல பிள்ளை'. இதே பெயரில் மூன்று படங்கள் வந்ததாகச் சொல்வார்கள். மூன்றாவது “"செல்ல பிள்ளை' படத்தில்தான் சாவித்திரி அம்மா நடித்தார்கள். நான் இங்குச் சொல்லப் போவது முதல் “"செல்ல பிள்ளை'. இந்த முதல் “"செல்ல பிள்ளை' படத்தில் லலிதா நடித்தார். அவர்களுக்கு ஜூனியராக நடிக்கத்தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். எனக்கு டெஸ்ட் எடுத்தது இயக்குநர் ப. நீலகண்டன். நானும் அதில் நடித்தேன். என் பாகம் குறைவு தான் என்றாலும் லலிதா அவர்களும் நானும் சில நாட்கள் படப்பிடிப்பிற்குச் சென்றோம். சரி படம் வரும் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பு நீண்டதே ஒழிய படம் வெளியாகவில்லை. காரணம் என்ன என்று கேட்டதற்கு சரியா எதுவுமே சரியாக அமையவில்லை என்று தெரிவித்தார்கள். அதற்குப் பிறகுதான் சாவித்ரி அம்மா நடித்த “"செல்ல பிள்ளை' எடுத்தார்கள்.

இதில் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்திற்குப் பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் நான் நடிக்க வில்லை. ஏன் என்றால் நான் அந்தக் காலகட்டத்தில் அதிகமாகக் கதாநாயகிக்கு ஜூனியராகத்தான் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் இந்திப் பாடமான “"பாய் பாய்'” படத்தில் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

டெய்ஸி ராணி அவர்கள் அன்று மிகவும் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம். அந்தப் படத்தில் அசோக்குமார், ஷியாமா நடித்தார்கள். டெய்ஸி ராணி ஒரு குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தக் குழந்தை நடனமாட அந்த பாட்டில் ஒரு ராஜா வேஷம் இருந்தது. அந்தப் பாடலுக்கு கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை அவர்கள் தான் நடனம் அமைத்தார். அந்தப் பாட்டில் வரும் குட்டி ராஜா வேடத்திற்கு நம்ம சச்சு சரியாக இருக்கும். நடனமும் நன்றாகத் தெரியும் என்று சொல்ல, என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அதுதான் நான் ஏ.வி.எம். நிறுவனத்தில் நடித்து வெளிவந்த முதல் படம்.

அதற்குப் பிறகுதான் நான் கதாநாயகியாக நடித்த முதல் படத்தில் நடித்தேன். இந்த இந்திப் படத்தை இயக்குநர் எம்.வி.ராமன் இயக்கினார். இதே போன்று வேறு ஒரு படமான “"முதல் தேதி'” என்ற படத்திலும் நான் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடி இருக்கிறேன். அதில் இன்னொரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி உமா என்ற குழந்தையுடன் ஒரு பாட்டிற்கு நடனமாட சந்தர்ப்பம் கிடைத்தது.

நான் எந்தச் சந்தர்ப்பத்தையும் என்றுமே விடுவதில்லை. நான் ஒரு புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம். அதனால் என்னை இன்று ஒரு பாட்டிற்கு ஆடும் கதாநாயகி போல், அன்றும் கூப்பிடுவார்கள். நானும் சரி என்று சொல்லி போய் நடித்து விட்டு வருவேன்.

குழந்தை நட்சத்திரமாக நான் நடித்ததால் எனக்குப் பல்வேறு பிரபலங்களின் நட்பு கிடைத்தது. அவர்களின் படத்தில் என்னால் நடிக்கவும் முடிந்தது. திரைப்பட ஜாம்பவான்கள் என்று கூறப்படும் பலருடைய இயக்கத்திலும் நடித்திருக்கிறேன். அதே போல் ப்ங்ஞ்ங்ய்க்ள் என்று சொல்லும் பல நடிகர், நடிகைககளுடனும் நடிக்கும் பேறு பெற்றேன். இப்படி நடிக்கும் போது யாருடன் நான் அதிகமாக இணைத்து நடித்திருப்பேன் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா என்று பாருங்கள்? அடுத்த வாரம் இதற்கு நான் விடை சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com