கருணாநிதியின் வெற்றிக்கு உழைத்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் 1955-ஆம் ஆண்டு முதல் இறுதிவரை சண்டை காட்சிகளிலும் அவரது இரட்டை வேட காட்சிகளிலும் டூப் (மாற்று) நடிகராக நடித்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். 
தஞ்சை கூட்டத்தில் எம்.ஜி.ஆர்
தஞ்சை கூட்டத்தில் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் 1955-ஆம் ஆண்டு முதல் இறுதிவரை சண்டை காட்சிகளிலும் அவரது இரட்டை வேட காட்சிகளிலும் டூப் (மாற்று) நடிகராக நடித்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். எம்.ஜி.ஆரின் அரசியல் பொது வாழ்விலும் நீண்ட காலம் மெய்க்காப்பாளராகப் பணியாற்றிய இவர் எம்.ஜி-ஆரின் வாழ்க்கைப் பயணத்தில் நடந்த முக்கியச் சம்பவத்தினை இங்குப் பதிவு செய்கிறார்:

1962 -ஆம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் சமயம். அப்போது திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த எம்.ஜி.ஆர், தி.மு.க வேட்பாளர்களுக்காகத் தமிழகம் முழுவதிலும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரின் பாதுகாப்புப் பணி நிமித்தமாக வழக்கம் போல் நாங்களும் அவருடன் சென்றிருந்தோம்.

கிருஷ்ணகிரியில் தி.மு.க வேட்பாளர் ஸ்ரீராமுலு என்பவருக்குப் பிரசாரத்தை முடித்த பின், தருமபுரியில் சுப்ரமணிய கவுண்டருக்கு ஆதரவாகப் பிரசாரத்தை எம்.ஜி.ஆர் தொடர்ந்த சமயம். அப்போது இரவு சுமார் 9 மணியிருக்கும்.எம்.ஜி.ஆருக்கு தருமபுரியிலிருந்து ஒரு செய்தியை திமுகவினர் அனுப்பியிருந்தனர். தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் சாலையில் எம்.ஜி.ஆரைக் கொல்ல மம்பட்டியான் திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரவியுள்ளதால் எம்.ஜி.ஆர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதுடன் நள்ளிரவில் சேலத்திற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எம்.ஜி.ஆரோ அச்செய்தியை சாதாரணமாகக் கேட்டுக் கொண்டு சிரித்தபடி "பொதுவாழ்விற்கு வந்துவிட்ட பின்னர் இதையெல்லாம் கவனத்தில் கொண்டால் மக்கள் பணி ஆற்ற முடியாது. அதனால் அந்தசெய்தியைப் பற்றி கவலைப்படாமல் கட்சி பணியினைக் கவனியுங்கள்'' என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டார்.

வழக்கம் போல் எம்.ஜி.ஆர் இதுபோன்ற செய்திகளைக் கவனத்தில் கொள்ளமாட்டார் என்றாலும், அவரது பாதுகாப்புப் பணியிலிருந்த நான், தர்மலிங்கம், முத்து, விபி.சாமி, சத்தியா ஸ்டுடியோ பத்மநாபன், மற்றும் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஆதம்பாக்கம் மாணிக்கம், சபாபதி, டிரைவர் கதிரேசன்,ராமசாமி போன்றோர் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இருந்தோம்.
ஓசூரில் கூட்டத்தை முடித்த பின்பு தருமபுரி செல்ல நள்ளிரவு 12 .30 மணியானது. வழக்கம் போலவே அந்த நள்ளிர விலும் எம்.ஜி.ஆரைக் காணும் ஆவலில் ஏராளமானவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வழிநெடுகக் காத்திருந்தனர்.

தருமபுரி கூட்டத்தை முடித்த பின்னர் ஓய்வெடுக்க விரும்பாமல் சேலம் புறப்படத் தயாரானார் எம்.ஜி.ஆர். நள்ளிரவில் எம்.ஜி.ஆர் சேலம் செல்வது உசிதம் அல்ல என்று கட்சிக்காரர்களும் நண்பர்களும் எம்.ஜி.ஆரிடம் தங்களின் வேண்டுகோளை வைத்தனர். மறுத்த எம்.ஜி.ஆர், அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு சேலம் புறப்பட்டார். தனது வேனுக்குப் பின்னால் தொண்டர்களின் எந்தவொரு வாகனமும் அணிவகுத்து வரவேண்டாம் எனவும் அன்புக் கட்டளையிட்டார்.

அந்த நள்ளிரவிலும் ஏராளமானவர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டு கொடுத்தார். எம்.ஜி.ஆரை அருகிலிருந்து காணவும் அவரை தொட்டுவிட வேண்டும், அவரது கரங்களைப் பற்றிவிட வேண்டும் எனும் ஆசைக் கொண்டு அவரை நெருங்குவார்கள். அந்தச் சமயங்களில் எம்.ஜி.ஆருக்கு எவ்வித இன்னலும் ஏற்படாதவாறு அவரைப் பாதுகாப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. அப்படியான சமயங்களில் எங்களது ஆடைகள் உருக்குலைந்து கைக்கடிகாரங்களை இழந்த நிகழ்வுகள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெற்றதுண்டு.

வழக்கமாக வேனில் உள்ளே அமரும் எம்.ஜி.ஆர் அன்று டிரைவர் கதிரேசன் அருகில் அமர்ந்துகொண்டார். நாங்களும் எங்கள் இமைகளைச் சற்றும் மூடாமல் மிகுந்த கவனத்துடன் சாலையின் இரு பக்கங்களிலும் எங்களின் கவனத்தைச் செலுத்தினோம்.

வழியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வண்டியை நிறுத்துமாறு கதிரேசனிடம் கூறிய எம்.ஜி.ஆர் எங்களிடம் ""கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்பா'' என்று கூற, அனைவரும் வண்டியிலிருந்து இறங்கினோம். கும்மிருட்டான அந்த நள்ளிரவிலும் சர்வசாதாரணமாக இறங்கிய எம்.ஜி.ஆர் எங்களிடமிருந்து டார்ச்லைட்டை வாங்கிஅந்தக் காட்டுப்பகுதியில் சுற்றும் முற்றும் அடித்துப் பார்த்துவிட்டு சிரித்தபடி""எங்கேப்பா மம்பட்டியான். என்னை கொல்ல வருவதாகச் சொன்னார்களே எங்கும் காணவில்லையே?'' என்றுகூறி பின் வண்டியிலிருந்த தண்ணீர் குடித்தபின் மீண்டும்புறப்பட்டோம். சேலம் சென்று கூட்டத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்றோம்.

மறுநாள் காலை அங்கு எங்களுக்குக் கிடைத்த மற்றும் ஒரு டெலிபோன் செய்தி ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது. தருமபுரி நள்ளிரவு பொதுகூட்டத்தில் மக்களோடு மக்களாக மாறுவேடத்தில் தானும் ஒரு ஆளாக ஆர்வமுடன் அமர்ந்து எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டதோடு அல்லாமல் கூட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் கையெழுத்தினைப் பெற்ற மம்பட்டியான் பின் அங்கிருந்த மக்களிடம்தான் யார் என்று கூறி எம்.ஜி.ஆரிடம் கையெழுத்துப் பெற்றதினை காண்பித்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுவிட்டான் என்பதுதான் அந்த ஆச்சரியமூட்டும்செய்தி.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக மம்பட்டியான் இருந்துள்ளான் என்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரியவந்தது. தனக்குக் கிடைத்த இந்தச் செய்தியினை எங்களிடம் தெரிவித்தவர் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம். இவர் சிறந்தசிலம்பக்கலை தேர்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று நேரத்தில் சோகமான செய்தியொன்று எம்.ஜி.ஆருக்கு வந்தது. சென்னையில் அவரது மனைவி சதானந்தவதி அம்மையார் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும், எம்.ஜி.ஆர் உடனே புறப்பட்டு வர வேண்டுமென்பதும்தான் அந்தச் செய்தி. எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணி தனது மைத்துனர் கே.என்.குஞ்சப்பன் மூலமாக அனுப்பிய செய்தியைக் கேட்டவுடன் எம்.ஜி.ஆர் சோகத்தில் ஆழ்ந்தார்.

உடனே நாங்கள் எல்லோரும் எம்.ஜி.ஆரிடம் ""உடனே சென்னைக்குப் புறப்பட்டுவிடலாம் அண்ணே'' என்று கூறவும் எம்.ஜி.ஆரும் புறப்பட ஆயத்தமானார். அப்போது அங்கு வந்த முரசொலிமாறன் "மாமா உங்களுக்காக தஞ்சையில் காத்துக் கொண்டிருக்கிறார். உங்களை உடனே புறப்பட்டு வரச்சொன்னார் என்று பிடிவாதமாகக் கூறவும் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாத தர்மசங்கடமான சூழலில் இருந்த எம்.ஜி.ஆர், தனது துயரத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தஞ்சை புறப்பட்டார்.

எம்.ஜி.ஆருடன் அன்பில் தர்மலிங்கம், கே.பி.ராமகிருஷ்ணன்

ஒரு புறம் தனது மனைவியின் நிலையறிந்து கவலைகொண்டாலும், மறுபுறம் தான் சார்ந்த இயக்கத்திற்கு வெற்றி தேடித்தர வேண்டும் அதிலும் தனது நண்பரும் திமுக பொருளாளருமான கருணாநிதி வெற்றி பெற்றிட வேண்டும் என்று ஆத்மார்த்தமான எண்ணம் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தஞ்சாவூரில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பரிசுத்த நாடாரை எதிர்த்துப் போட்டியிட்டார் கருணாநிதி. அவர் வெற்றிபெறுவது கடினம் என்றுதான் பரவலாகப் பேசப்பட்டது. எம்.ஜி.ஆர். பிரசாரத்துக்கு வந்தாலொழிய வெற்றிபெற முடியாது என்பது தெரிந்தவர். அவரை அழைத்துவர முரசொலி மாறனை அனுப்பி இருந்தார் கருணாநிதி.தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதியை ஆதரித்து கிராமப் பகுதிகளிலெல்லாம் பம்பரமாகச் சுழன்று பிரசாரம் செய்து வாக்குகளைச் சேகரித்தார் எம்.ஜி.ஆர். ஒரேநாளில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களில் பேசினார். இரவு பகல் பாராது தொகுதியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று கருணாநிதிக்கு வாக்குகள் சேகரித்தார்.

சென்ற வழிகளிலெல்லாம் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள், பெண்கள் எல்லாம் எம்.ஜி.ஆரைக் காணமிகுந்த ஆவலுடன் ஓடி வந்தனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர் ""யாருக்கு ஓட்டுப்போடுவீங்க?'' என்று கேட்டதற்கு அவர்கள் ஒரேபோல ""ஐயாவுக்குத்தான் ஓட்டுப்போடுவோம்'' என்று கூறவும் மகிழ்ச்சியடைந்தார் எம்.ஜி.ஆர். செல்லும் இடமெங்கும் ஐயாவுக்குத்தான் ஓட்டு என்று ஒரே மாதிரியாக மக்கள் கூறியதுதான் எம்.ஜி.ஆருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்களிடம் ""ஐயான்னு யாரை சொல்றீங்க'' என்று கேட்கவும் உடனே ""பரிசுத்த நாடார் ஐயாவைத் தாங்க சொல்றோம்'' என்றார்கள். அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான பரிசுத்த நாடார் மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார். அவரை எல்லோரும் ஐயா என்றுதான் அழைப்பார்கள்.

எம்.ஜி.ஆர் பரிசுத்த நாடாருக்கு ஆதரவாக வந்துள்ளார் என்றே அங்குள்ள மக்கள் நினைத்து ஐயாவுக்குத்தான் ஓட்டு என்று கூறினர். அதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் பின் அவர்களிடம் ""நான் கருணாநிதிக்கு ஆதரவாக வந்துள்ளேன். நீங்கள் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்'' என்று சொல்லி பிரசாரம் செய்யத் தொடங்கினார்.

காலை 10 மணிக்குத் துவங்கிய தேர்தல் பிரசாரம் மாலை 4. 30 மணி வரை தொடர்ந்து நடைபெற்று இறுதியாக 4 .30 மணிக்கு ரெட்டிபாளையத்தில் நிறைவுற்றது.

அன்று மாலை தஞ்சை சீனிவாசபுரத்திலிருந்து காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த
நாடாரை ஆதரித்து காங்கிரஸ் சார்பில் ஊர்வலமும், திமுக சார்பில் கருணா
நிதியை ஆதரித்து ஒரு ஊர்வலமும் நடைபெற இருந்தது. காங்கிரஸ் ஊர்வலத்திற்கு மாலை 3 மணியும் திமுக ஊர்வலத்திற்கு மாலை 5 மணியும் என காவல்துறையால் நேரம் தரப்பட்டிருந்தது.

காங்கிரஸ் ஊர்வலத்தில் பெரியார், முதல்வர் காமராஜர், எம்.ஆர்.ராதா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. திமுக ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்வதாக இருந்ததால் மக்கள் அவரைக் காணும் ஆவலில் அதிக அளவில் வரத்தொடங்கினார்கள். முன்பே எம்.ஜி.ஆரின் பிரசார பொதுக்கூட்டங்களில் மக்கள் அதிகம் கூடியதால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர் எம்.ஜி.ஆரின் ஊர்வலத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி ஊர்வலத்தைத் துவங்காமல் இருந்தனர்.

திமுகவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த 5 மணி முடிந்து 6 மணியாகியும் காங்கிரஸ் தனது ஊர்வலத்தைத் துவக்காமல் இருந்ததால் திமுகவினர் காவல்துறையிடம் முறையிட்டும் பலனில்லாமல் போனது. சம்பந்தமில்லாத காரணங்களைச் சொல்லி காவல்துறை காலதாமதம் செய்தது கண்டு வெகுண்டெழுந்த எம்.ஜி.ஆர். ""இப்போது என் தலைமையில் ஊர்வலம் நடக்கப் போகிறது. யார் என்ன செய்யப் போகிறார்கள் பார்ப்போம். காவல்துறை வழக்குதான் போடுவார்கள் பரவாயில்லை. அதை சட்டப்படி எதிர்கொள்ளத் தயார்'' என்று கூறி ஊர்வலத்தைத் துவங்கினார்.

எம்.ஜி. ஆரின் கோபத்தைக் கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் காவல்துறை வெலவெலத்துப் போனது. மக்களின் ஏகோபித்த எழுச்சியுடன் எம்.ஜி.ஆர் தலைமையில் மிகப் பிரம்மாண்டமாக புறப்பட்ட ஊர்வலம் மேலவீதி, கிழக்குவீதி எனதஞ்சை நகர வீதிகளில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

தான் சார்ந்த கழகமும் அதன் வேட்பாளரும் வெற்றிப் பெறவேண்டும் எனும் தணியாத கட்சி விசுவாசம் காரணமாகப் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார் எம்.ஜி.ஆர்.

என்.வி.நடராசன், மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், அண்ணா மற்றும் க.அன்பழகன்

முழுப் பிரசாரத்தையும் முடித்த பின்னரே எம்.ஜி.ஆரும், நாங்களும் சென்னை திரும்பினோம். 1962 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் எம்.ஜி.ஆரும் அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் மிகக் கடுமையாக உழைத்ததின் காரணமாக 53 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை திமுக பெற்றது. 1962-இல் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியை எம்.ஜி.ஆருக்கு அளித்துக் கவுரவப்படுத்தினார் அண்ணா.

எம்.ஜி.ஆருடன் அவரது உதவியாளராகவும், பாதுகாவலராகவும் பணியாற்றிய காலத்தில் இதுபோல எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள். எப்படிப்பட்ட சோதனையிலும் சற்றும் மனம் கலங்காத நெஞ்சுரம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. அந்த நாள் நினைவுகளின் மகிழ்வில் இந்த நாள் கழிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com