பொன் விழா காணும் "மண்டே சாரிட்டி கிளப்'

சமூக சேவகியான சாவித்திரி வைத்தியால் உருவாக்கப்பட்டது "மண்டே சாரிட்டி கிளப்'. 1970-ஆம் ஆண்டு 20 பெண்களுடன் தொடங்கப்பட்டது.
பொன் விழா காணும் "மண்டே சாரிட்டி கிளப்'

சமூக சேவகியான சாவித்திரி வைத்தியால் உருவாக்கப்பட்டது "மண்டே சாரிட்டி கிளப்'. 1970-ஆம் ஆண்டு 20 பெண்களுடன் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் திங்கள் கிழமையன்று இந்த அமைப்பாளர்கள் கூடி விவாதித்ததன் காரணமாக, இவ்வமைப்புக்கு இந்தப் பெயர் வந்ததாம்.
 இன்று இந்தச் சமூகத்திற்குப் பல சேவைகளை ஆற்றி வருகிறது பெண்களால் நடத்தப்படும் இந்த அமைப்பு ஐம்பது ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது. சாவித்திரி வைத்தி சாதாரண மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குச் சென்று உதவிகள் செய்தவர். ஆதரவற்றவர்கள் இறந்தால் கூட இறுதிச் சடங்குகளைச் செய்தார். அவர் மட்டுமல்லாமல் அவர் உருவாக்கிய மண்டே சாரிட்டி கிளப், ஏழை மக்களுக்குச் சேவை செய்யும் பொருட்டுப் பல சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
 1976-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட "புத்தக வங்கி திட்டம்' மூலம் இதுவரை 5340 ஏழை மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
 1978 -ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட "விஸ்ராந்தி' திட்டம் முதியோர்களுக்கான இல்லமாகத் தொடங்கப்பட்டது. நாட்டிலேயே முதலாவது ஆதரவற்ற முதியோருக்கான அமைப்பு இதுவே. இன்றுவரை பல ஆதரவற்ற ஏழை முதியோர்கள் இதனால் பலன் அடைந்துள்ளனர். தற்பொழுது 160-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மகளிர் இக்காப்பகத்தில் தங்கியுள்ளனர். அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
 1990 -ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட "வித்யாதான் திட்டம்' மூலம் நன்கொடையாளர்களிடம் இருந்து உதவி பெற்று ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்குச் சீருடை, புத்தகம், கல்விக்கட்டணம், போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
 1998-ஆம் ஆண்டு "ஊன்றுகோல் திட்டம்' மூலம் மாதந்தோறும் 40 ஏழை குடும்பத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் என தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர்.
 மண்டே சாரிட்டி கிளப் தனது ஐம்பது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டியும், ஏழை மக்களுக்குச் சேவை செய்வதையே வாழ்க்கையாக வாழ்ந்து வரும் சாவித்திரி வைத்தியை சிறப்பிக்கும் வகையிலும் அவருடைய தபால் தலை வெளியிடும் விழா ஜனவரி 11-ஆம் தேதி டி.டி.கே சாலையிலுள்ள எத்திராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
 விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ம.ஃபா. பாண்டியராஜன், நல்லி குப்புசாமி செட்டியார், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி லட்சுமி மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 அமைச்சர் ம.ஃபா. பாண்டியராஜன் தபால் தலையை வெளியிட்டு பேசும் போது:- "6 பேர் சேர்ந்து தொடங்கிய அமைப்பு இன்று 200 பெண்களை உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நடத்தும் அமைப்பு இதுவாகத்தான் இருக்க முடியும். என்.ஜி.ஓ என்கிற அமைப்பு எப்படி இயங்க வேண்டும் என்பதை சாவித்திரி வைத்தியிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 மிகச் சிறந்த கான்செப்ட் கிரியேட்டர் சாவித்திரி வைத்தி. அவர் சொன்ன ஆலோசனைப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு அம்மா அன்பகம் ஆரம்பித்தார். சேவை அமைப்புகளை நெஞ்சில் வைத்துப் போற்றிப் பூஜித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் கொண்டு வந்த அம்மா அன்பகம் திட்டத்தை சட்டசபையில் பாராட்டிப் பேசினேன். அப்போது தான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தேன்.
 மேலும் அரசாங்கம் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் "ஊன்றுகோல் திட்டம்'. இது போன்ற சிறப்பாகச் செயல்பட்டு வரும் அமைப்பு அடுத்தத் தலைமுறைக்குத் தயார் செய்ய வேண்டும். உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் பின்னால் இறைவன் இருக்கிறான். ஒரு அமைப்பு என்பது அதை நடத்தியவருக்குப் பின்னால் வேர் பிடித்து வளர வேண்டும். இது போன்ற அமைப்பினருக்கு நானும் எனது மனைவி லதாவும் உதவியாக இருக்க ஆசைப்படுகிறோம்'' என்றார்.
 தொழிலதிபர் நல்லிகுப்புசாமி செட்டியார் பேசுகையில், "1970-ஆம் ஆண்டு மண்டே சாரிட்டி கிளப் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது தான் விஸ்ராந்தி இன்று வரை முதியோர்களுக்காகச் சேவையாற்றி வருகிறது.
 1969-ஆம் ஆண்டு மகாபெரியவர் சந்திரசேகர சுவாமிகள், ராமசந்திர ஐயரை அழைத்து காளஹஸ்தியில் முதியோர் இல்லம் ஒன்றை ஆரம்பிக்கச் சொன்னார். மகா பெரியவர் சொன்னதும், அவர் எதற்கென்று கூடச் கேட்காமல் காளஹஸ்தியில் முதியோர் இல்லத்தை ஆரம்பித்தார். அதில் ஏராளமானோர் வந்து சேர்ந்தார்கள். பெற்ற பிள்ளைகளே தங்களது பெற்றோர்களை அங்கு கொண்டு வந்து விட்டுவிட்டு சென்று விடுவார்கள். அவர்கள் இறந்தால் கூட எங்களுக்குத் தகவல் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்வார்களாம். இதைக் கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது. "32 பேருக்கு இறுதிச் சடங்கு செய்தேன். "அப்போது தான் மகாபெரியவர் எதற்காக என்னை முதியோர் இல்லம் ஆரம்பிக்கச் சொன்னார் என்ற உண்மை தெரிந்தது' என்றார் ராமசந்திர ஐயர். இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் சாவித்திரி வைத்தி போன்றவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார் நல்லி குப்பு சாமி செட்டியார்.
 "மண்டே சாரிட்டி கிளப்பின் ஐம்பது ஆண்டுத் தொடர் சேவையைப் பாராட்டுகிறேன். இது சாதாரண விஷயமல்ல. மனதில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தான் இது போன்ற அமைப்புகளைச் சிறப்பாக நடத்த முடியும். என்னுடைய சகோதரர் ஒருவர் சிறுவயதில் என்னுடைய பாட்டியிடம் ஒரு கேள்வி கேட்டார். "எனக்கு அடுத்த குழந்தை வந்தால், என் மீது நீ வைத்துள்ள அன்பு குறைந்து விடும் தானே பாட்டி' எனக் கேட்டார். அதற்கு என் பாட்டி "கிணற்றில் தண்ணீர் எடுப்பது போல் தான் அன்பும். அது எடுக்க எடுக்க வற்றாது ஊறிக்கொண்டே இருக்கும்' என்றார். இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார் "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி லட்சுமி மேனன்.
 சாவித்திரி வைத்தியின் அஞ்சல் தலையை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் வெளியிட நல்லி குப்புசாமி செட்டியார், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி லட்சுமி மேனன் பெற்றுக் கொண்டனர்.
 முன்னதாக வெஸ்லி பள்ளி மாணவிகளின் "ஆண்டாள் கல்யாணம் நாட்டிய நாடகம்' நடைபெற்றது. விழாவிற்கு இடையே சாவித்திரி வைத்தியால் தொடங்கப்பட்ட திட்டங்கள் பற்றி விளக்கி சொன்னார்கள் மண்டே சாரிட்டி கிளப் நிர்வாகிகள். விழாவில் ஏழைகள் பலருக்கு உதவிகளும் வழங்கப்பட்டன.
 -வனராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com