காவலாளியைக் காத்த காமராஜர்!

காமராஜர் காலத்தில் சத்திய மூர்த்தி பவனில்  மிக நீண்ட காலமாக காவலாளியாக இருந்தவர் பத்மசிங் என்ற நேபாளி. அவர் பணியில் எப்போதும் நேர்மை தவறாதவர்.
காவலாளியைக் காத்த காமராஜர்!


காமராஜர் காலத்தில் சத்திய மூர்த்தி பவனில்  மிக நீண்ட காலமாக காவலாளியாக இருந்தவர் பத்மசிங் என்ற நேபாளி. அவர் பணியில் எப்போதும் நேர்மை தவறாதவர்.

அந்நாளில் சத்திய மூர்த்தி பவனில் இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் கட்சிக்காரர்கள் அனைவரும் கிளம்பி விடுவார்கள். இரவு காவலாளி பத்மசிங் மட்டுமே பிரதான வாயில் கேட் உட்பட, அனைத்தையும் பூட்டி விட்டு உள்ளே இருப்பார். மேற்குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு யார் வந்தாலும் திறக்கக்கூடாது என்பது தலைவர் காமராஜரின் உத்தரவு.

ஒரு நாள் இரவு காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமானவர். தலைவர் காமராஜரிடம் மிகுந்த செல்வாக்கு கொண்டவர். அவர் காரில் வந்து சத்தியமூர்த்திபவன் பிரதான வாயில் கதவைத் திறக்க வேண்டுமென கேட்க பத்மசிங்  திறக்க முடியாது காமராஜர் உத்தரவு எனச் சொல்லி மறுத்துவிட்டார். வந்த முக்கியஸ்தருக்கு மூக்கின் மேல் கோபம்.

""நான் யார் தெரியுமா? உன்னை என்ன செய்கிறேன் பார். காலையில் சொந்த ஊருக்குக் கிளம்ப தயாராக இரு'' என கர்ஜித்துவிட்டு கிளம்பிவிட்டார். காலையில் காமராஜரின் திருமலைப்பிள்ளை வீட்டில் பஞ்சாயத்து. முக்கியஸ்தர் சொன்னதை உள்வாங்கி கொண்ட காமராஜர், ""சரி... சரி... நான் பார்த்துக்கிறேன்''  இது காமராஜரின் பதில். வேறு வழியின்றி புகார் சொன்னவர் கிளம்பி விட்டார்.

இரவு நடந்த சம்பவம் பற்றி அறிந்திருந்த கட்சிகாரர்கள் பத்மசிங் அவ்வளவு தான். அவர் ஊருக்கு கிளம்ப வேண்டியது தான் என எண்ணிக் கொண்டிருந்தனர். ஏனென்றால் அவர் மோதியது பெரும்புள்ளி அல்லவா?

வழக்கமாக காமராஜர் சத்தியமூர்த்தி பவன் வந்து,  தனது அறையில் அமர்ந்தவுடன், அவரைச் சந்திக்க வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசி விட்டு, காவலாளி பத்மசிங்கை வரச் சொல்லி தனது உதவியாளரிடம் கூறினார். வெளிவராந்தாவில் நின்று கொண்டிருந்த பத்மசிங் உள்ளே அழைக்கப்பட்டார்.

காமராஜருக்கு முன்பாக மிக பணிவுடன் பத்மசிங் நிற்கிறார். அவரைப் பார்த்த காமராஜர், "" உன் டியூட்டியை ஒழுங்காதான் பார்த்திருக்கிறாய், போய் வேலையைப் பாருண்ணே'' என சொல்லி பத்மசிங்கை அனுப்பிவிட்டார். இந்த பத்மசிங்,  டி.வி.எஸ் ஐயங்காரால் காங்கிரஸ் அறக்கட்டளை பணிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்.

கட்சிக்காரர்கள் பயந்தது போலவோ, அந்த முக்கியஸ்தர் எதிர்பார்த்தது போலவோ எதுவும் நடக்கவில்லை. கடமையை செய்த ஊழியர் ஒரே வார்த்தையில் காமராஜரால் அங்கீகரிக்கப்பட்டார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com