ஒப்பாரும் மிக்காரும் இல்லா சங்கீத சாகரம்!

காசியில் இவர் வாழ்ந்த காலத்தில் அங்கிருந்த  ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான்களோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து ஹிந்துஸ்தானி இசையும் கற்றுக் கொண்டார்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லா சங்கீத சாகரம்!

பாடியதும் பெய்தது மழை

சென்ற இதழ் தொடர்ச்சி

காசியில் இவர் வாழ்ந்த காலத்தில் அங்கிருந்த  ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான்களோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து ஹிந்துஸ்தானி இசையும் கற்றுக் கொண்டார். ஏற்கெனவே இவர் ஒரு பெரிய இசை மேதை என்பதால் ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் ஆழத்தை அழகாகப் புரிந்து கொண்டு விட்டார். மூன்றாண்டு காசி வாசத்திற்குப் பிறகு மீண்டும் தென்னகம் திரும்பினார் பாகவதர். 

ஒருமுறை, மைசூர் சாமுண்டேஸ்வரி கோயிலில் அம்மன் சந்நிதியில் முத்தையா பாகவதர் பாடிக் கொண்டிருக்கும்போது, அம்பிகையின் தரிசனத்திற்காக  மைசூர் மன்னர் அங்கு வரவே, முத்தையா பாகவதர் பாடும் அப்பாடலைக் கேட்டு மெய்மறந்து, தனது உதவியாளரை அழைத்து ""இந்த பாகவதரை அரச சபைக்கு உடனே அழைத்து வா'' என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டார். அரசவையில் தன் முன்பாக பாடும்படி மன்னர் வேண்டுகோள் விடுத்தார்.  

அன்று ஷண்முகப்ரியா ராகத்தை விரிவாக ஆலாபனம் செய்து "வல்லி நாயக நீ' எனும் தனது சொந்த சாகித்யத்தைப் பாடினார். அதைக் கேட்டு அசந்து போன மன்னர் ""நீங்கள் இங்கேயே  தங்கி விடுங்கள். உங்களுக்கு மைசூரில் என்ன வசதி வேண்டுமோ செய்து கொடுக்கிறேன். இன்று முதல் உங்களை மைசூர் ஆஸ்தான வித்வானாகவும் நியமிக்கிறேன்'' என்று உடனடியாக உத்தரவிட்டார் மகாராஜா கிருஷ்ண ராஜேந்திர உடையார். 

தனது மைசூர் வாசத்தின்போதுதான் சாமுண்டேஸ்வரி அம்மன் மீது அஷ்டோத்ர கீர்த்தனைகளைப் பாடினார். அதாவது அஷ்டோத்ரத்தில் வரும் ஒவ்வொரு நாமாவளிக்கும் ஒவ்வொரு பாடல் தனித்தனியே வெவ்வேறு ராகங்களில். முதலில் கணபதி மீது  ஒரு பாடல். அதன் பிறகு  தியான சுலோகப் பாடல்கள், 108 நாமாவளிகளுக்கும் தனித்தனியே 108 பாடல்கள்  நிறைவாக மங்கள கீர்த்தனை என  113 பாடல்களைக் கொண்டது "சாமுண்டேஸ்வரி அஷ்டோத்ர கீர்த்தனை'' எனும் பாமாலை.   

இதை இயற்றி முடித்தவுடன் சிவ அஷ்டோத்திற்கும் அதேபோல் இயற்ற வேண்டும் என்று அவர் மனதில் தோன்றியது. அதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அப்போதுதான் "காயக சிகாமணி' எனும் பட்டத்தை மைசூர் மகாராஜா இவருக்கு வழங்கினார். பின்னர் மன்னரின் நெருங்கிய நண்பராகவும் இவர் ஆகிவிட்டார். 

தினசரி மைசூர் மகாராஜா மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வார். பாகவதரையும் பேச்சுத் துணைக்காக உடன் அழைத்துச் செல்வாராம். ஒருநாள் அவ்வாறு சென்று கொண்டிருக்கும் பொழுது ""அமிர்தவர்ஷிணி ராகம் பாடினால் மழை வரும் என்கிறார்களே, நீங்கள் பாடுங்கள் பார்க்கலாம்'' என்று ராஜா கேட்டாராம்.  

அதற்கு சிரித்துக் கொண்டே முத்தையா பாகவதர் ""நாம் குடையும் எடுத்து வரவில்லை, அரண்மனையில் இருந்து வெகுதூரம் வந்து விட்டோம். மழை பெய்தால் "ஹைனஸ்' (மகாராஜா) நனைந்து விடக்கூடாதே'' என்று பதிலளித்தாராம்.  

""பரவாயில்லை பாடுங்கள் பாகவதரே'' என்று மன்னர் கட்டளையிட முத்தையா பாகவதரும் அமிர்தவர்ஷிணி ராகத்தை அழகாக ஆலாபனம் செய்து அதில் தான் இயற்றிய "சுதாமயி' எனும் பாடலைப் பாடியதும்  மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்து விட்டது. அரண்மனையில் இருந்த காவலாளிகள் குடையை எடுத்து கொண்டு ஓடி வந்தனர். 

1920}களில் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. தீரர் சத்தியமூர்த்தி முத்தையா பாகவதரின் நெருங்கிய நண்பர். ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சென்னையில்  காங்கிரஸ் கட்சியின் பொருட்காட்சி ஒன்று நடைபெறும். முன்பு இருந்த மூர் மார்க்கெட் வளாகத்திற்கு பின்புறம் இருந்த மைதானத்தில் பொருட்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  

முத்தையா பாகவதரின் சீடர் ஒருவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. தனது வீட்டை அடமானம் வைத்திருந்தாராம். அதை மீட்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.  அவருக்கு நிதி உதவி செய்வதற்காக 10 நாட்களுக்கு இசை விழா ஒன்றை காங்கிரஸ் பொருட்காட்சியில் நடத்த சத்யமூர்த்தியிடம்  முத்தையா பாகவதர் கேட்டுக் கொண்டார்.  

அவரும் அதற்கு உடனடியாகச் சம்மதித்தார். காலணா, அரையணா, ஓரணா என்று டிக்கெட்கள் வைத்து 10 நாட்களுக்கு இசை விழா நடைபெற்றது. அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மிஞ்சுகின்ற விதத்திலே ரசிகர் கூட்டமும், நல்ல வசூலும் முத்தையா பாகவதர் நடத்திய இசை விழாவிற்குக்  கிடைத்தது. பண நெருக்கடியில் இருந்த அந்த சீடரின் பணக்கஷ்டத்தையும் போக்கி விட்டார்.  

மீதம் உள்ள பணத்தை என்ன செய்வது என்று டி.எல். வெங்கட்ராம ஐயர்,  டி. வி. சுப்பாராவ் போன்ற முக்கிய பிரமுகர்களோடு விவாதித்தார் பாகவதர். "சங்கீத வித்வத் சபை' எனும் ஓர் அமைப்பைத் துவங்கி ஆண்டுதோறும் இதேபோல் இசை விழா நடத்தலாமே என்று அனைவரும் ஆலோசனை தெரிவித்தனர். அதிலிருந்து துவங்கியதுதான் இப்போது பிரபலமாக அறியப்படும் "மியூசிக் அகாதெமி'. 

மியூசிக் அகாதெமி தொடங்கப்பட்ட பிறகு அதன் காலை நேர இசை ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை வடிவமைத்து கொடுத்தவர் முத்தையா பாகவதர். 1930 }இல் நடைபெற்ற மியூசிக் அகாதெமி இசை மாநாட்டிற்கு தலைமை வகித்து "சங்கீத கலாநிதி' விருதும் பெற்றார் அவர். 

பல இசை ஆராய்ச்சிகளை செய்வதற்கு முத்தையா பாகவதருக்கு ஒரு தூண்டுதலாக  விளங்கியவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்.   இசை, தமிழலக்கியம், சித்த வைத்தியம், ஜோதிடம் போன்ற பல்வேறு துறைகளிலே மிகப்பெரிய புலமை பெற்றவர் ஆபிரகாம் பண்டிதர். அவர் தனது "கருணாம்ருத சாகரம்' படைப்பிற்கு முத்தையா பாகவதரின் உதவியை நாடினார். பாகவதரும் தஞ்சாவூரில் சில ஆண்டுகள் தங்கி  ஆபிரகாம் பண்டிதரின் இசை ஆராய்ச்சிக்கு  துணை புரிந்தார். இசைக்கும், ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து இவ்விரு மேதைகளும் ஆழமான பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.  

துலா ராசி கட்டத்தை ஆதார சட்ஜமமாக வைத்து அதிலிருந்து 12 ஸ்வரங்களையும், 12 ராசிகளுக்கு வைத்து எந்தெந்த ஸ்வரங்களுக்கு எந்தெந்த கிரகங்கள் அதிபதி,  எந்த ராசிக் காரர்கள் எந்த ராகங்களைப் பாடினால் அவர்களின் வாழ்க்கை செழிக்கும். யார் எந்த ராகத்தைத்  தவிர்க்க வேண்டும் என்பது போன்ற பல ஆராய்ச்சிகளை  இந்த இருவரும்  இணைந்து செய்துள்ளனர். ராகங்களைக் கொண்டே பரிகாரங்களைச் செய்ய முடியும் என்பதுவே இவர்களின் முடிவான  கருத்து.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com