பேசப்படுகிற ஒரு நூல்: "மறக்கப்பட்ட ஆளுமை வி.கே. கிருஷ்ண மேனன்'

இந்திய அரசியலையும், ஜவாஹர்லால் நேருவையும் அறிந்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர், வி.கே. கிருஷ்ண மேனன். நேரு எடுத்த பல முடிவுகளில் கிருஷ்ண மேனனின் தாக்கம் அதிகம் உண்டு என்று சொல்லப்படுவதுண்டு.
பேசப்படுகிற ஒரு நூல்: "மறக்கப்பட்ட ஆளுமை வி.கே. கிருஷ்ண மேனன்'


இந்திய அரசியலையும், ஜவாஹர்லால் நேருவையும் அறிந்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர், வி.கே. கிருஷ்ண மேனன். நேரு எடுத்த பல முடிவுகளில் கிருஷ்ண மேனனின் தாக்கம் அதிகம் உண்டு என்று சொல்லப்படுவதுண்டு. அத்தகைய கிருஷ்ணமேனனைப் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாற்றை  நாடாளுமன்றவாதியும் முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார். 

"எ செக்கர்டு பிரில்லியன்ஸ்: தி மெனி லைவ்ஸ் ஆப் கிருஷ்ண மேனன்' என்ற சமீபத்திய நூல், மிக முக்கியமான இந்திய வரலாற்று ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. "இன்று கிருஷ்ண மேனன் என்றாலே 1962- இல் சீனாவோடு ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட தோல்வி தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், கிருஷ்ண மேனன் அதற்கும் அப்பாற்பட்டவர். சுதந்திரத்துக்கு முன்பு 1930-களிலும் 1940-களிலும் விடுதலை வேள்வித் தீயை அணையாமல் பார்த்துக்கொண்டவர் மேனன். அதுவும் இங்கே இல்லை. லண்டனில். அதுவும் சுதந்திரம் வழங்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பிருந்து, ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவரது பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது.' என்று தெரிவிக்கும் ஜெய்ராம் ரமேஷ், இப்போது, இவ்வளவு விரிவாக மேனனின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.

“நேரு தன் மனத்தில் உள்ள கருத்துகள் அனைத்தையும் காந்திஜி, இந்திரா காந்தியைவிட, கிருஷ்ண மேனனிடம் தான் அதிகம் பகிர்ந்துகொண்டார். தன்னுடைய பயங்கள், கவலைகள், வருத்தங்கள் ஆகிய அனைத்தையும் எந்தவிதமான ஒளிவுமறைவுமின்றி எழுதியிருக்கிறார். 

1936 முதல் 1946 வரையான காலகட்டத்தில், நேரு நூற்றுக்கணக்கான கடிதங்களை மேனனுக்கு எழுதினார். ஒவ்வொரு கடிதத்துக்கும் மேனன் இரண்டு பதில் கடிதங்கள் எழுதினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்தக் கடிதங்கள் இன்றும் நமக்கு முழுமையாகக் கிடைக்கின்றன. இதேபோன்று, கிருஷ்ண மேனன் தொடர்பான ஏராளமான ஆவணங்களும் பிரதிகளும் முழுமையாக கிடைக்கின்றன. அது எனக்கு முதல் தூண்டுதல். இரண்டு, சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் இந்திய அரசியலில் மிக முக்கியமான நபர் பற்றிய முழுமையாக தகவல்கள் தொகுக்கப்படவில்லையே என்ற ஏக்கம். 
நான் வாய்மொழி வரலாறு, ஞாபகங்கள், பேட்டிகள் ஆகியவற்றை நம்புவதில்லை. மாறாக, கடிதங்கள், நாளிதழ் செய்திகள், அலுவல்பூர்வமான ஆவணங்கள் ஆகிய முதன்மை ஆதாரங்களின் அடிப்படையிலேயே எழுதுவேன். இப்போது கிருஷ்ண மேனன் விஷயத்திலும் அதைத் தான் செய்திருக்கிறேன்.'' என்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.
கிருஷ்ண மேனனுடைய ஆளுமைப்பண்பு அபாரமானது. அவரது வாசிப்பும் முடிவெடுக்கும் திறனும் அணுகுமுறைகளும் இந்திய அரசியலில் பல நண்பர்களையும் எதிரிகளையும் ஒருங்கே சம்பாதித்துக் கொடுத்துள்ளது.
தமது நூலில், ஜெய்ராம் ரமேஷ், மறைந்துபோன அல்லது மறந்துபோன மிகப் பெரும் ஆளுமையை, அவரது குணங்களோடும் குறைகளோடும் ஒருங்கே உருவாக்கித் தந்திருக்கிறார். இன்று திரும்பிப் பார்க்கும்போது, அவரது பங்களிப்புகள் உயர்வாக இருக்கின்றன. அவர் மீதுள்ள விமர்சனங்களை விடவும். 
இந்நூல்  744 பக்கங்கள். பெங்குவின் வைக்கிங் வெளியிட்டிருக்கிறது. விலை ரூ.849/-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com