பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு

அழிந்து வரும் பொம்மலாட்ட கலையைக் காக்கும் வகையில் தனது ஓய்வூதியப் பணத்தை செலவழித்து கொண்டு பழைய துணிகளைக் கொண்டு பொம்மைகளை உருவாக்கி பொம்மலாட்டம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்
பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு

அழிந்து வரும் பொம்மலாட்ட கலையைக் காக்கும் வகையில் தனது ஓய்வூதியப் பணத்தை செலவழித்து கொண்டு பழைய துணிகளைக் கொண்டு பொம்மைகளை உருவாக்கி பொம்மலாட்டம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மு.சீனிவாசன். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்து 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது கோவை, கவுண்டம்பாளையம்  பகுதியில் வசித்து வருகிறார். 

தனது வீட்டின் அருகே உள்ள குழந்தைகளை அழைத்து வீட்டிலேயே நடத்திக் காட்டி பொம்மலாட்டம் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும், அருகே உள்ள அரசுப் பள்ளிகளிலும் தனது சொந்த செலவிலேயே  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். குறிப்பாக அனைவருக்கும் கல்வி, தேர்தல் வாக்குரிமை, சுகாதாரம், மழை நீர் சேகரிப்பு, டெங்கு, நூலகப்  பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகிறார். மேலும் சிறு சிறு காதணி விழா, திருமண நிகழ்ச்சிகளில் பொம்மலாட்டம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலேயே இருந்தவாறு பொம்மலாட்டம் மூலம் கரோனா விழிப்புணர்வுப் பாடல்களை உருவாக்கி கட்செவி அஞ்சல் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

இது குறித்து  சீனிவாசனிடம் கேட்ட போது சொன்னார்: 

""பொம்மலாட்டம் மரபுவழிக் கலைகளில் ஒன்று. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும்தான் இப்போதைய தலைமுறையினருக்குத் தெரிகிறது. ஆனால், பொம்மலாட்டக்கலை என்பது நமது தமிழர்களின் முக்கிய பொழுதுபோக்கில் ஒன்றாக இருந்து வந்தது. 

புராணக் கதைகள், விழிப்புணர்வு நாடகங்கள் என அனைத்தும் பொம்மலாட்டம் மூலம் அரங்கேற்றப்பட்டன. ஆனால் காலப்போக்கில் பொம்மலாட்டம் அழிந்து வருகிறது. இப்போது, விரல்விட்டு எண்ணும் அளவுக்கே பொம்மலாட்டக்கலை தெரிந்தவர்கள் உள்ளனர்.

அவர்களும் தங்களது சொந்த செலவில் கலையைப் பாதுக்காக்க பொம்மலாட்டம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மரபுக் கலையின் அழிவைத் தடுக்க பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நாடக கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதுபோல், ஒரு சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொம்மலாட்டம் மூலம் நடத்த வேண்டும். 

தமிழகம் முழுவதும் பொம்மலாட்டக் கலைஞர்களைக் கண்டறிந்து அவர்கள் மூலம் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com