கே.பாலசந்தர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்!

நெப்போலியனின் அடுத்த அடையாளம் ஹாலிவுட். நடிகர் சங்கம், அரசியல், எம்.பி.பதவி எனப் பரபரப்பாக இயங்கியவர், எதுவுமே வேண்டாம் என ஒதுங்கி அமெரிக்கா சென்று செட்டில் ஆனார்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்!

நெப்போலியனின் அடுத்த அடையாளம் ஹாலிவுட். நடிகர் சங்கம், அரசியல், எம்.பி.பதவி எனப் பரபரப்பாக இயங்கியவர், எதுவுமே வேண்டாம் என ஒதுங்கி அமெரிக்கா சென்று செட்டில் ஆனார். இப்போது அவர் ஹாலிவுட்டில் நடித்துள்ள "டெவில்ஸ் நைட்' படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இது தொடர்பாக "ஜும்' செயலியில் பேசினார்...

ஹாலிவுட் அனுபவம் எப்படி...

1990-இல் குருநாதர் பாரதிராஜா மூலமாக அறிமுகமானேன். எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று தான் வந்தேன். மாமா கே.என்.நேரு அமைச்சராக இருந்ததால், அவரிடம் பி.ஏ.வாக இருந்தேன். அந்தச் சமயத்தில் சினிமாவில் தலையைக் காட்டுவோமே என்று தான் உள்ளே சென்றேன். "புது நெல்லு புது நாத்து' படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்ததால் வரவேற்பு கிடைத்து, பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் வந்தன.

அதன் பின் "சீவலப்பேரி பாண்டி' படத்தில் நாயகனாக நடித்தது பெரியளவில் வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிக்கத் தொடங்கி, சினிமாவே தொழிலாக மாறியது.

சினிமா, அரசியல், தொழில் என அனைத்திலுமே கவனம் செலுத்தினேன். மகனுடைய உடல்நலத்தைக் கவனத்தில் கொண்டு, அவனுக்காக வாழ்வோம் என்று சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு வந்தேன். இங்கே தயாரிப்பாளராக இருக்கும் "டெல்' கணேசன் எனக்கு நெருங்கிய நண்பர். " நான் எடுக்கும் படங்களில் நீங்கள் இருக்க வேண்டும்' என்றார். எங்க ஊர்க்காரர் என்பதால் தொடர்ந்து அவருடைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

ஹாலிவுட் படங்கள்.. பணிபுரிவதில் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்...?

தொழில்நுட்ப ரீதியாக ஹாலிவுட் மேலோங்கி இருக்கிறது. தமிழில் 100 பேர் கொண்ட குழுவினர் இருப்பார்கள். இங்கு 15-20 பேரை வைத்துக் கொண்டே மிகவும் அழகாகப் படம் எடுக்கிறார்கள். தமிழில் நடிக்கும் போது உதவியாளர்கள் இருப்பார்கள். ஹாலிவுட்டில் அனைத்தையும் நாமே செய்ய வேண்டும். ஆகையால் பொருட்செலவு ரீதியாகப் பார்த்தால் குறைவு தான். ஆனால், டாலர் என்பதால் அதிகமாகத் தெரியும். அனைத்துமே திட்டமிட்டுத் தான் தொடங்குவார்கள்.

தமிழ் சினிமாவில் இன்னும் யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை...?

கே.பாலசந்தர் சார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என்ற வருத்தமுண்டு. அவருடைய தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் தயாரித்த "ஐயா' படத்தில் சரத்குமாருடன் நடித்துவிட்டேன். சிவாஜி சாருடன் நடிக்கவில்லையே என்ற வருத்தமுண்டு. அவரோடு 3 படங்கள் வரை பேசி தவறிவிட்டது. மற்றபடி அனைவருடனும் நடித்துவிட்டேன்.

"டெவில்ஸ் நைட்' ஹாலிவுட் படத்தில் நடித்த அனுபவம்..?

தமிழைத் தவிர மற்ற அனைத்து மொழியுமே எனக்கு தகராறு தான். ஹாலிவுட் படமாக வேண்டாம் என்று தான் டெல் கணேசனிடம் சொன்னேன். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால், "டெல்' கணேசன் தான் எப்படியெல்லாம் பேசணும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதை வைத்து பேசி நடித்துள்ளேன்.

அடுத்து படம் இயக்குவீர்களா...?

பாரதிராஜா படங்களில் நடித்ததால் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். படம் இயக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், உள்ளுக்குள் பயம் இருக்கிறது.

ஹாலிவுட் படங்கள் வரை போய்விட்டீர்கள்.... இனி உங்களின் அடையாளம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்...?

நெப்போலியனுக்கு அடையாளமே மீசை தான். அது எப்போதுமே மாறாது.

நம்ம ஊரில் எப்போதுமே கிராமத்து கதைகளாக வரும். வேஷ்டி, டிராயர், கையில் அருவாளுடன் எத்தனை படங்களில் நடிப்பது, எப்போது தான் கோட் சூட் கொடுப்பீர்கள் என்று கேட்டிருக்கிறேன்.

ஆனால், ஹாலிவுட் படத்தில் இப்போது அந்த மாதிரி வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த விதத்தில் சந்தோஷம். இன்னும் பெரிய அளவில் சண்டைக்காட்சிகளில் நடிக்காததால், அதைப் பற்றிப் பேச முடியாது.

தொடர்ச்சியாக ஹாலிவுட் படங்களில் நடிப்பீர்களா?

அமெரிக்காவில் இருப்பதால் தொடர்ச்சியாக நடிப்பேன். இந்தியாவுக்கு வரவேண்டுமென்றால் பெரிய திட்டமிடல் தேவைப்படுகிறது.

அமெரிக்காவில் பெரிய பட்ஜெட் படத்தைத் தான் திரையரங்கில் போய்ப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

ஏனென்றால் அதை சின்னத்திரையில் பார்க்க விரும்பவில்லை. சாதாரணமான படங்களை எல்லாம் ஓ.டி.டியில் தான் பார்க்க விரும்புகிறார்கள்.

நமது ஊரில் ஓ.டி.டி கலாசாரம் இப்போது தான் தொடங்கியிருக்கிறது. விஞ்ஞானத்திற்குத் தகுந்தாற் போல் நாமும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com