நம்பிக்கை அளித்த "நெல் திருவிழா'

திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் தேசிய நெல் திருவிழாவை,  "நெல்' ஜெயராமன் மே மாத இறுதியில் நடத்தி வந்தார்.
நம்பிக்கை அளித்த "நெல் திருவிழா'

திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் தேசிய நெல் திருவிழாவை,  "நெல்' ஜெயராமன் மே மாத இறுதியில் நடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு நடைபெறும் 2 -ஆவது நெல் திருவிழா இது. இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமே, 100 விவசாயிகளுக்கு 2 கிலோ அளவுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் இலவசமாக வழங்கப்படுவதுதான். இந்த விதை நெல்லைப் பெறும் விவசாயிகள், தங்கள் வயலில் அந்த விதையை விதைத்து, அறுவடை செய்து, அடுத்த ஆண்டு நடைபெறும் விழாவில் 4 கிலோவாக திருப்பித் தர வேண்டும். இதன்மூலம், குறைந்து வரும் பாரம்பரிய நெல்லை மீட்டெடுப்பதும், இயற்கை விவசாயத்தின் மீது பற்றுதலை ஏற்படுத்துவதுமே நோக்கமாகும்.

இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவில் விவசாயம் தொடர்பான கருத்தரங்கங்கள், உணவுத் திருவிழா, பாரம்பரிய விதைக் கண்காட்சி, வேளாண் கருவிகள் கண்காட்சி உள்ளிட்டவை இடம் பெறும். முன்னோடி விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்று, விவசாயம் குறித்த அனுபவங்களையும், அறிவுரைகளையும் வழங்குவர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆர்வமுடன் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பது வழக்கம் என்பதால், இந்த நெல் திருவிழா மிகப் பிரமாண்டமாகவே ஆண்டுதோறும் நடைபெறும்.

"கிரியேட்' அமைப்பில் 13 ஆண்டுகள் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் நெல் ஜெயராமன். அவருக்குப் பிறகு பொறுப்பில் இருக்கும் மருத்துவர் வி. ரகுநாதன் கூறியதாவது: 

""இந்தத் தேசிய நெல் திருவிழாவில், குறுவை சாகுபடிக்கு ஏற்ற குறைந்த வயதுடைய அறுபதாம் குறுவை, கருங்குறுவை, பூங்கார், சித்திரக் கார், வெள்ளைக் குறுவை, மட்டைகார், கோணக்குறுவை, குருவிக்கார், முட்டை குறுவை, குறுவை களஞ்சியம், சொர்ணமசூரி போன்ற ரகங்களும், சம்பா பருவத்துக்கு ஏற்ற காட்டுயாணம், மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வெள்ளை பொன்னி, தூய மல்லி, இலுப்பைப்பூ சம்பா, ஆத்தூர் கிச்சலி சம்பா, சீரகச் சம்பா, பால் குடவாழை, தங்க சம்பா, ஒட்டடையான், கருடன் சம்பா போன்ற ரகங்கள் கிரியேட்- நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் விதை ஆராய்ச்சி மையத்தில் தயார் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. எளிதில் சந்தைப்படுத்த கூடிய சுமார் 25 ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். விவசாயிகள் குறுவை சாகு படிக்குத் தங்களைத் தயார் செய்யும் நேரத்தில், பாரம்பரிய நெல் ரகங்களை உயிர்ப்பிக்கும் வகையில், நெல் ரகங்களை வழங்குகிறோம். சந்தைப்படுத்தக்கூடிய நெல் ரகங்களை வழங்குவதால், இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, நெல் ரகங்களை விற்பனை செய்வதிலும், லாபம் பெறுவதிலும் எவ்வித இடர்பாடும் ஏற்படாது. கடந்த 14 ஆண்டுகளாக நமது நெல்லை காப்போம் இயக்கம், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் ஆர்வம் காட்டியதன் விளைவாக 174 பாரம்பரிய ரகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது, மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களில் இனத்தூய்மை தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன'' என்றார்.

கடந்த ஆண்டு 2 கிலோ பாரம்பரிய ரக நெல் விதைகளைப் பெற்று, நிகழாண்டு 4 கிலோவாக திருப்பிக் கொடுத்த சில விவசாயிகளிடம் பேசினோம்:

அம்மையப்பன், எஸ். மனோஜ்பாபு: ""குறுகிய கால பயிரான பூங்கார் ரகம், தண்ணீரைத் தாங்கி வளரக் கூடியது. எனவே, வயலில் தண்ணீர் தேங்கி நீண்ட காலம் இருந்தாலும், இவை சிறப்பாக வளரும். சுமார் இரண்டரை ஏக்கரில் பூங்கார் விதை நெல்லை, இரண்டாண்டுகளாகப் பயிரிட்டு வருகிறேன். நெல் திருவிழாவின் மூலமாகவே இந்த ரகத்தை விதைக்க ஆர்வம் ஏற்பட்டது.

இதை அரிசியாகவோ, நெல்லாகவோ, அவலாகவோ சந்தைப்படுத்த முடிகிறது. வெளிச் சந்தையில் நல்ல விலைக்குச் செல்கிறது. "தாய்மண்' வேளாண் சார் நிறுவனம் மூலமாகவும் சந்தைப்படுத்தி வருகிறோம். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லும்போது, மற்ற நெல் ரகங்களோடு இணைத்து எடுக்கப்படுவதால், சாதாரண விலையே கிடைக்கிறது. இதனால், வெளிச்சந்தையில் விற்பதையே விரும்புகிறோம். பாரம்பரிய நெல் ரகங்களைத் தனியாகக் கொள்முதல் செய்தால், உரிய விலை கிடைக்க வாய்ப்புள்ளது'' என்றார்.

திருக்களம்பூர் ஆர். முரளி: ""நெல் திருவிழாவில் சொர்ணமசூரி ரகத்தை வழங்கினேன். 8 ஆண்டுகளாகப் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகிறேன். மாப்பிள்ளை சம்பா, சொர்ணமசூரி ரகங்களை, 12 ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். இதுதவிர, 6 ஏக்கரில் சிறு தானியங்களையும் பயிரிட்டுள்ளேன். பொதுவாகப் பாரம்பரிய ரகங்கள் மகசூல் குறைவாகவே இருக்கும். 

பாரம்பரியமல்லாத நெல் ரகங்கள் ஏக்கருக்கு 30 மூட்டை விளைந்தால், பாரம்பரிய ரகங்கள் 20 மூட்டைகள் வரை விளையும். அதேபோல், பாரம்பரிய நெல் ரகத்துக்கு அரசாங்கத்திடம் உரிய விலை கிடைப்பதில்லை. பாரம்பரிய நெல் ரகத்துக்கு வெளிச்சந்தையே ஏற்றது. இந்த நெல் திருவிழாவில் பாரம்பரிய நெல்லை உரிய விலையில் கொள்முதல் செய்வது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது நம்பிக்கையளிப்பதாக உள்ளது'' என்றார்.

மணக்கால் அய்யம்பேட்டை எஸ். தென்னரசு: ""இந்த நெல் திருவிழாவில் நாட்டு பாசுமதி ரகத்தை வழங்கினேன். சுவை, மணம் மிகுந்த அரிசி இது. வெள்ளைப்பொன்னி, நாட்டு பாசுமதி ரகங்களைப் பயிரிட்டு வருகிறேன். இந்த ஆண்டில் ஆத்தூர் கிச்சலி சம்பா ரகத்தையும் வாங்கியுள்ளேன். வெளிச்சந்தையிலோ அல்லது தாய்மண் வேளாண்சார் நிறுவனம் மூலமாகவே பாரம்பரிய ரகங்களைச் சந்தைப்படுத்த முடிகிறது. அரசு கொள்முதல் செய்யும் போது, இதர ரகங்களோடு சேர்த்து கொள்முதல் செய்வதால் உரிய விலை கிடைப்பதில்லை. எனவே, பாரம்பரிய ரகங்களைத் தனியாகக் கொள்முதல் செய்தால் உரிய விலை கிடைக்கும்'' என்றார்.

நெல் ஜெயராமன் தொடங்கி வைத்த நெல் திருவிழா, படித்த இளைஞர்கள் பலரின் கவனம் இயற்கை விவசாயத்தின் மீது திரும்பியுள்ளது. அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கோலாகலமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது நெல் திருவிழா.


திருவாரூரில் நடைபெற்ற நெல் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உடன் "கிரியேட்' அமைப்பின் நிர்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com