வீடு தேடி வரும் திருமண மண்டபம்

கரோனா நோய்த்தொற்றும், பொது முடக்கமும் பிறப்பு முதல் இறப்பு வரை பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது.
வீடு தேடி வரும் திருமண மண்டபம்


கரோனா நோய்த்தொற்றும், பொது முடக்கமும் பிறப்பு முதல் இறப்பு வரை பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. கல்யாணம் என்றால் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது அரசு விதி. அதற்கு ஏற்ப இப்போது நடமாடும் திருமண மண்டபங்கள் வந்துவிட்டன. எங்கே தெரியுமா? தமிழ்நாட்டின் திருப்பூரில் தான். 

கடந்த மார்ச் மாதம் முதலே புதிய திருமணங்களைப் புக்கிங் செய்ய மண்டபங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் சமூக இடைவெளியுடன் மிக குறைந்த அளவிலான சொந்தங்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு மட்டுமே நடத்த வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதனால் தங்களின் வாரிசுகளுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட பெற்றோரும் வருத்தத்தில் உள்ளனர். அவர்களின் கவலையைப் போக்கும் வகையில் நடனமாடும் திருமண மண்டபத்தை உருவாக்கியுள்ளார் உடுமலைபேட்டையைச் சேர்ந்த ஹக்கீம். இவர் சுபகாரியங்களுக்கு அலங்கார மேடைகள் அமைத்து தரும் தொழில் செய்து வருபவர். 

இவர் தன்னுடைய கனரக வாகனத்திலேயே மண மேடை அமைத்துள்ளார். மிகப்பிரம்மாண்டமாக நடமாடும் மணவறையை அமைத்து மணமக்களின் வீட்டருகே மண்டபம் போல செட் அமைத்துத் திருமணங்களைச் செய்து கொடுத்து வருகிறார்.

நடமாடும் திருமண மண்டபத்தை உருவாக்க வேண்டும் என்ற ஐடியா எப்படி வந்தது என கேட்டதற்கு ஹக்கீம் சொன்னார்:

""கரோனா காலகட்டத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த நடமாடும் திருமண மண்டபம். திருமணத்தை நடத்த இடமில்லாமல் கஷ்டப்படும்  பொதுமக்களின் தேவைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

திருமணத்துக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. சானிடைசர்கள், முகக்கவசம் கொடுப்பது எனப் பாதுகாப்பான முறையில் திருமணங்களை ஏற்பாடு செய்வதால் இப்போது பல கல்யாண ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்து வருகிறது''என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com