ரோஜா மலரே! 41 - குமாரி சச்சு

பலர் என்னிடமே தங்கவேலு அண்ணன் பாடுவாரா என்று கேட்டார்கள். தங்கவேலு அவர்கள் அதிகமாக வெளி நாட்டிற்குச் செல்ல ஆசைப்படமாட்டார். பயணத்தையும் அதிகம் விரும்ப மாட்டார்
ரோஜா மலரே! 41 - குமாரி சச்சு

பலர் என்னிடமே தங்கவேலு அண்ணன் பாடுவாரா என்று கேட்டார்கள். தங்கவேலு அவர்கள் அதிகமாக வெளி நாட்டிற்குச் செல்ல ஆசைப்படமாட்டார். பயணத்தையும் அதிகம் விரும்ப மாட்டார். தென் மாநிலங்கள் என்றால், அவரிடமிருந்து சரி என்று பதில் வரும். 
வட மாநிலங்கள் என்றால் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொள்வார். வெளிநாடுகள் என்றால் முதலில் வேண்டாம் என்றுதான் பதில் வரும். போய் தான் ஆகவேண்டும் என்றால், ஒப்புக்கொள்வார். அப்படியே ஒப்புக்கொண்டாலும், அவர் அங்கு வந்து மேடை நாடகம் எல்லாம் நடிக்க மாட்டார். மேடையில் பேசுவார். அப்படிப் பேசினாலும் கலைவாணர் பெயர், அவரது பேச்சில் நிச்சயம் இடம் பெறும். ஒரு நிகழ்ச்சியை ஒப்புக்கொண்டு விட்டால், அதை எப்படிச் சிறப்பாக நடித்துக் கொடுப்பது என்பதே அவரது நினைப்பாக இருக்கும். 
அந்தக் காலகட்டத்தில் அப்படி ஒப்புக்கொள்ளபட்ட நிகழ்ச்சி தான் மலேஷியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. இந்த கலைநிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் பலருண்டு. அதில் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் தங்கவேலு அண்ணன், எம்.என்.ராஜம், ஏ.எல்.ராகவன், ஜமுனா ராணி, நான் மற்றும் பலருடன் அங்குச் சென்றோம். அங்குப் போன பிறகுதான் தங்கவேலு அண்ணன் மீது மலேசிய மக்களுக்கு எவ்வளவு பாசம் இருகிறது என்று எனக்கு மட்டும் அல்ல; எங்களுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பலருக்கும் தெரிந்தது. 
எப்படி ஒரு "காதலிக்க நேரமில்லை' புகழ் பெற்றதோ, அதே அளவிற்கு புகழ் பெற்றது "கல்யாண பரிசு'. இரண்டு படங்களையும் இயக்கியது ஸ்ரீதர் தான் என்றாலும் இந்தப் படம் பல முதல்களை கொண்டது. இதுதான் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய முதல் படம். முக்கோண காதல் கதை specialist என்று ஸ்ரீதருக்கு முத்திரை குத்த ஏதுவாக இருந்த முதல் வெற்றி படைப்பு இந்தப் படம்தான். "சித்ராலயா' கோபு இவருக்கு உதவிகரமாக இருந்த படமும் இது தான். இந்தப் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக உயர்ந்தார் பாடகர் ஏ.எம்.ராஜா. இப்படிபட்ட ஒரு படம் மக்களை எந்த அளவிற்கு கவர்ந்தது என்று சொல்ல வேண்டும் என்றால் அதற்கு உதாரணம் இந்த பைரவன் கதாபாத்திரம்தான். 
தங்கவேலு அண்ணன், "இந்த பைரவா' என்ற பேரை கூப்பிடும் முறையே, நமக்கு சிரிப்பை வரவழைத்து விடும். அந்த படத்தில் ஒரு வசனம் வரும். "நானூறு ரூபாய் கொடுத்தால் ஆப்பிள் ஜூசு. அதையே இரண்டு மடங்காக கொடுத்தால் ஆட்டுக்கால் சூப்பா"? இம்மாதிரி வசனம் எல்லாம் சில சமயம் அவரே திடீரென்று படப்பிடிப்பில் பேசிவிடுவார். அது மிகவும் சரியாக இருக்கும், படத்திலும் அது இடம் பிடிக்கும். காதல் காட்சியாக இருந்தாலும் ஒரு வார்த்தை கூட விரசமாகவோ அல்லது ஆபாசமாகவோ இருக்காது. உதாரணத்திற்கு ""அறிவாளி'" படத்தில், அவரது வசனத்தை இன்றும் நாம் ரசித்து பார்க்கலாம். அவருக்கு ஜோடியாக முத்துலக்ஷ்மி நடித்திருப்பார். அந்த switch ஆன் ஆப், அது தான் எனக்குத் தெரியுமே. இந்த வசனங்கள் எல்லாம் இன்றும் பலர் மனப்பாடமாகச் சொல்வார்கள். இது மட்டும் அல்லாமல் இது மாதிரி ஆரோக்கியமான நகைச்சுவை, நம்மை அறியாமல் நமக்கு இன்றும் சிரிப்பை வரவழைக்கும்.
தங்கவேலு அண்ணன் யார் யார் எல்லாம் வருகிறார்கள் என்று முதலிலேயே கேட்டுக்கொண்டார். அவருடன் வீட்டில் இருந்து யாரும் அந்தப் பயணத்தின் போது வரவில்லை என்பதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் என்னையும் என் அக்காவையும் கூப்பிட்டு, அண்ணனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். 
காரணம், அவருக்கு அந்த சமயத்தில் சர்க்கரை கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஆனால் மாத்திரை போட்டுக்கொண்டதால் திடீரென்று சர்க்கரை ரொம்பவும் குறைந்துவிடும். அதனால் அண்ணனுக்கும் எங்களுக்கும் அடுத்த, அடுத்த அறைவேண்டும் என்று சொல்லி வாங்கிக் கொண்டோம். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் அவர் தான் எங்களை எல்லாம் நன்றாகக் கவனித்துக் கொண்டார் .
எங்கள் குடும்பத்தில் நானும் என் அக்காவும் மட்டுமே சென்றிருந்தோம். எனக்கு சிறிய வயது என்பதால் யாரும் எங்களிடம் அநாவசியமாகப் பேசுவதை அவர் விரும்பவில்லை. ஓட்டலிலிருந்து நாங்களும் அவரும் ஒன்றாக ஒரே காரில் செல்வோம். இப்படிப் பலவிஷயங்களில் அவர் தான் பாதுகாப்பாக எங்களைப் பார்த்துக் கொண்டார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சின்ன skit போட்டோம். 
நான் இருக்கேன் என்று இந்த skit மூலம் தெரிந்து விட்டதால் ரசிகர்கள் எல்லோரும் என்னை நடனம் ஆட சொன்னார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. நடனம் ஆட நான் முன்னேற்பாடுகளுடன் வரவில்லை என்பதால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். எப்படிப் பாடலே இல்லாமல் நடனம் ஆடுவது என்று எனக்குத் தெரியவில்லை. 
மக்களின் ஆசையை நிறைவேற்ற எனக்கு விருப்பம் இருந்தாலும், எப்படி என்று புரியாமல் நான் நின்றிருந்தேன். அந்த சமயத்தில் தங்கவேலு அண்ணன் தான் அதற்கு ஒரு வழி கண்டு பிடிச்சார் என்று கூறலாம். என்னிடம் வந்து "ரசிகர்கள் தான் நமக்கு எல்லாமே. அவர்களால் தான் நாம் இருக்கோம். அதனால் அவர்கள் சொல்லுக்கு நாம் மதிப்பு கொடுக்கணும். அவர்கள் கேட்டு விட்டால் நாம் கண்டிப்பாக அதை நடத்திக் காட்டி விடவேண்டும். இது நம்மால் முடியும். நான் படறேன், நீ ஆடு'' என்று சொல்ல, மேலும் எனக்கு பயம் பற்றிக்கொண்டது. 
இவர் என்ன பாட்டு பாட போகிறாரோ? எப்படி நாம் அதற்கு தக்கவாறு ஆடமுடியும் என்று என் மனதில் நினைத்து கொண்டேன். நானே தங்கவேலு அண்ணனிடம் சென்று "என்ன பாட்டு பாட போகிறீர்கள்' என்று கேட்டுக்கொண்டேன். "நீ சிறப்பாய் நடனம் ஆடுவாய் என்று எனக்குத் தெரியும். அதனால் உனக்கு ஏற்றவாறு ஒரு பாடலை நான் பாடுகிறேன். கவலைபடாதே'' என்று சொல்லி விட்டு, "மணமகள்' படத்தில் வரும் "நல்ல பெண்மணி, மிக நல்ல பெண்மணி என்ற பாடலை, நான் பாடப்போகிறேன். உனக்கு ஏற்ற மாதிரி இருக்கும்'' என்றார். 
தங்கவேலு அண்ணன் அந்த கால பாய்ஸ் குழுவில் இருந்ததால் நன்றாகப் பாடுவார் என்று எங்களைப் போன்ற பலருக்கும் தெரியும். இசைக்குழுவும் எங்களுடன் வந்திருந்தது. எல்லாம் தயாராக இருப்பதால் தங்கவேலு அண்ணன் பாட த் தயாரானர். "மணமகள்' படத்தில் இந்தப் பாடலை கலைவாணர் அன்றே படத்தில் இடம் பெற செய்தார். மிக நல்ல பாடல் அது.
மணமகள் படம் 1951-இல் வெளிவந்தது. இதைத் தயாரித்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான். தனது என்னெஸ்கே பிலிம்ஸ் மூலம் தயாரித்து, இந்தப் படத்தை இயக்கவும் செய்தார். இதில் பத்மினி, லலிதா, எஸ்.வி.சகஸ்ரநாமம், டி.எஸ்.பாலையா, ஆகியோருடன் கலைவாணரும், மதுரம் அம்மையாரும் நடித்தார்கள். இதன் திரைக்கதை, வசனம் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் சி.ஆர்.சுப்பராமன். 
இந்தப் பாடல் மட்டும் அல்ல கலைவாணர் பாடிய பல பாடல்கள் மூலம், வசனங்கள் மூலம் சொல்லி விட்டு போன பல கருத்துகள், விஷயங்கள் இன்று நடக்கின்றன. "பட்டனை தட்டி விட்டா, தட்டில இட்டிலியும் காபியும் வரவேண்டும் என்று அன்றே சொன்னார் கலைவாணர். இன்று நடக்கிறது. காபி எப்படி என்று நீங்கள் யோசிக்க வேண்டாம், அதுதான் இன்று நமக்கு கிடைக்கும் expresso காபி. கட்டிலுக்கு மேலே ச்ஹய் னு காத்த சுத்தணும், காலம் காட்டும் கருவியும் வேணும். இன்று எல்லாம் வந்துவிட்டதா? 50-களில் இப்படி கலைவாணரால் எப்படி நடக்கபோவதை சொல்ல முடியும் என்று தெரியவில்லை. அந்த தீர்க்கதரிசி வழி வந்தவர் தான் அண்ணன் தங்கவேலு. பாடல் வேறு "நல்ல பெண்மணி' எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லும் பாடல். "மணமகள்" படத்தில் மதுரம் அம்மையார் பாடியது. மலேசிய மேடையில், "இசைக் குழுவைப் பார்த்து ""நான் முதல் வரி பாடுறேன். நீங்கள் அதற்கு ஏற்ற மாதிரி வாசித்து அசத்துங்கள்''" என்று கூறினார் தங்கவேலு அண்ணன். 
இங்கே நான் முழுபாடலையும் கொடுக்கவில்லை. ஆனால் அவர் முழுபாடலையும் விடாமல் பாடினார். எனக்கும் இந்தப் பாடல் தெரியுமாதலால் நானும் சளைக்காமல் ஒவ்வொரு வரிக்கும் அபிநயம் பிடித்து ஆடினேன். பாடல் முடிவுக்கு வரும் வேளையில், என் நடனத்தைப் பார்த்து விட்டு மக்கள் என்ன சொல்வார்களோ என்று பயத்துடன் நான் இருந்தேன்'' எனக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் அதைத் தெரிந்து கொள்ள ஆசை இருக்கு இல்லையா? உங்களுக்கு நான் அதைச் சொல்ல எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். 
(தொடரும்)
சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com