எல்லோரும் காமெடியன்கள் அல்ல! 

"மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்து கொண்டே இருக்கிறது. 
எல்லோரும் காமெடியன்கள் அல்ல! 

"மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்து கொண்டே இருக்கிறது.

நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்துச் சொல்லி விடுகிறோம். கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்குக் கொண்டு போகிற முயற்சிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றிய கதை இது.' விடியோ கால் மூலம் பேசத் தொடங்குகிறார் வினோத் ராஜேந்திரன். "பற்ற வைத்த நெருப்பொன்று' படத்தின் இயக்குநர். குறும்பட உலகத்திலிருந்து கோடம்பாக்கம் நுழையும் புதுப் படைப்பாளி.

குறும்பட உலகத்தில் இருந்து வருகிறீர்கள்.... வாழ்த்துகள் நன்றி. நெய்வேலிதான் சொந்த ஊர். அங்கிருந்து புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்தது பெரும் பயணம். டிப்ளமோ எலக்டரானிக்ஸ் படித்து விட்டு ஏதேதோ வேலைகள். சும்மா இருக்கிற நேரத்தில் கதைகள், புத்தகம், சினிமா என தனி உலகம் இருந்தது. அப்போதுதான் குறும்படங்களுக்கான உலகம் தமிழ் சினிமாவில் திறந்தது. படப்பிடிப்பு பார்க்க போகிற கதைகள் தனி. அதன் பின் ஸ்டுடியோ அலுவலகத்தில் ஆபிஸ் பாய் வேலை. அதிலிருந்து தொடங்கி அங்கேயே மேலாளர் வரை வேலை. நாமும் படம் எடுத்து பார்ப்போமே என்று விழியும் மொழியும் என்ற மியூசிக் ஆல்பம் எடுத்தேன். நல்ல வரவேற்பு.

ஒரு நல்ல முழு நீள சினிமா எடுக்க வேண்டும் என்கிற நினைப்பு மனசுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் சினிமா பற்றி நிறையக் கற்றுக் கொண்டே இருந்தேன். அப்போது அந்தக் கற்றல்தான் இந்தப் படம். சினிமாவுக்கான ஸ்கிரிப்ட்டுக்கு, எதையும் கொஞ்சம் மேலே இருந்து பார்க்க வேண்டும் என சொல்லுவார்கள். அந்தக் கதைக்காக வாழ்க்கையையும் மேலே இருந்து பார்த்தேன். இப்போது ஆல் இஸ் வெல். படம் எப்படி வந்திருக்கிறது...

முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாம பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாகப் பதிய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது விறுவிறுப்பான செய்தி ஒன்று ஊடகங்களில் தந்தியடித்தன. அரசியல், அதிகாரம் என பெரும் பொறுப்புகளில் இருந்தவர்கள் எல்லோருக்கும் அதில் சம பங்கு. கல்வி தெய்வமாக வணங்க வேண்டியவர்களை, காவல் துறை விசாரணையில் பார்த்த போது வெவ்வேறு உணர்வுகள்.

அதை மையமாக கொண்டு ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தேன். அற்பத்துக்கும் சொற்பத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது இந்தத் தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அப்படித்தான் இந்தக் கதையின் ஓட்டம் இருக்கும். எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம். இந்தக் கதையும் அப்படித்தான். வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். என் முதல் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக்கலாம். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யவோ, குறைகளைச் சுட்டிக் காட்டவோ, நான் படம் எடுக்கவில்லை. எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அடித்தளம். அவ்வளவுதான். நானும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் கொஞ்சம் சுமை. அவ்வளவுதான்.

சமூக விமர்சன படமா

எல்லாவற்றையும் கடந்ததுதான் இந்த வாழ்க்கை. கொலம்பியா காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சே-வின் விழிகளில், பன்னிரெண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன.. இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் சுக, துக்கங்களை மறந்து விட்டு ஓடுவதுதான் இங்கே காமெடி. ஆனால், பயங்கரக் காமெடியன்களாகச் சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள். சமூகம்தான் அவர்களைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது. சாண் வயிற்றுக்காகத் திருடுகிறவர்களை விட, மக்களின் சேவகராக, கல்வி தந்தையாக தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவர்கள் இங்கே அதிகம். அப்படிப்பட்ட திருடுகிறவர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம்.

ஒரு சம்பவம்தான் கதை.... அது என்ன....

மனதில் ஊறிப்போய் இருந்ததுதானே. எல்லாவற்றுக்கும் முன் மாதிரி உண்டு. எதுவும் தானாக உருவாக முடியாது என்பதுதான் இந்த உலகத்தின் சட்டம். படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. சென்டிமென்ட் சினிமாவிற்கான வார்த்தையாகப் போய் விட்டது. இதுகூட சென்டிமென்ட்தான். இந்தக் கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதிது. கழுத்தில இருக்கிற வரைக்கும்தான் தங்கம். திருடன் கழுத்தில் கத்தி வைத்து விட்டால் இரும்பு குண்டு மாதிரி அதுவே கனக்கும். எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது. இப்போது பேசினால், பிரச்னைகள் வெடிக்கும். படம் வெளிவரட்டும். பார்க்கலாம்.

60 நாள்கள் படப்பிடிப்பு. கூத்துப்பட்டறை தயாரிப்புகள்தான் நம் நடிகர்கள். தினேஷ் சதாசிவம், ஸ்மிருதி வெங்கட், அபிலாஷ், மாரிஷ், ரஞ்சித், ஹரி, குரு என எல்லாமே கலைதாகம் கொண்டவர்கள். அவர்கள்தான் எனக்கு முழுத் துணை.

இசைக்கு சூரிய பிரசாத். தீபக் படத்தொகுப்பு. இப்படித் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு சம அளவில் கை கொடுத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com