இப்படியோர் அரசுப்பள்ளி

ஓர் அரசுப் பள்ளி எப்படியிருக்கும் என்பதை விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை. ஆனால், ஆங்காங்கே சில முன்னெடுப்புகள் மாநிலத்தின் பல பகுதிகளில் காணப்படும்.
இப்படியோர் அரசுப்பள்ளி

ஓர் அரசுப் பள்ளி எப்படியிருக்கும் என்பதை விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை. ஆனால், ஆங்காங்கே சில முன்னெடுப்புகள் மாநிலத்தின் பல பகுதிகளில் காணப்படும். அந்த முன்னெடுப்புகளுக்கும் முன்னோடியாக புதுக்கோட்டை மாவட்டம், லெக்கணாபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி திகழ்கிறது.

வழக்கமான பள்ளிகளில் தனியாக ஒரு நூலகம் இருக்கும். இந்தப் பள்ளிக்கூடத்தில் எல்லா வகுப்பறைகளிலும் ஒரு நூலகம் இருக்கிறது. மாணவர்களின் பிறந்த நாளில் பரிசாக வழங்கப்படும் நூல்கள் அந்தந்த வகுப்புகளிலேயே வைக்கப்படும். அந்த வகுப்பின் மாணவர்கள் அனைவரும் ஒரு சுற்று இந்த நூல்களை எடுத்துப் படிக்க வேண்டும்.

கல்லூரிகளில்மட்டுமே மேற்கொள்ளப்படும் ஆய்வறிக்கைகள் (புராஜெக்ட்) தயாரிக்கும் பணி இப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கொசுக்களால் உருவாகும் நோய்கள், என் தந்தையின் ஆசாரித் தொழில், கல்லணை, கீழடி, பயிர் உற்பத்தி போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் எழுதியிருக்கிறார்கள். அனைத்தும் பள்ளி நூலகத்தில் பத்திரமாக சேகரிக்கப்படுகிறது. 

"பள்ளி ஜவான்கள்' ஆண்டுதோறும்  அறிவிக்கப்படுகிறார்கள். "ஆர்எஸ்எப்'எனப்படுவோர் சாலைப் பாதுகாப்புப் படையினர், "எஸ்எஸ்எப்' எனப்படுவோர்  பள்ளிப் பாதுகாப்புப் படையினர், "எஸ்சிஎப்' எனப்படுவோர் பள்ளித் தூய்மைப் படையினர். ஆண்டுதோறும் தேர்வு  செய்யப்படும் இவர்கள், அவர்களுக்குரிய பணிகளைக் கவனிக்க வேண்டும். 

முறையான சீருடை அணிந்து, சரியான நேரத்தில் வந்து பள்ளி நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்போருக்கு வாரம் தோறும் "ஸ்டார் ஆப் த வீக்' விருது வழங்கப்படுகிறது. இதேபோல "ஜென்ட்டில் மேன் விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளைப் பெறுவோரின் புகைப்படங்கள் பள்ளி வளாகத்தில் ஒட்டப்படும்போது எல்லோருக்கும் இவற்றைப் பெறுவதற்கான உத்வேகம் பிறக்கும் என்பது இதன் அடிப்படை.

"ஹானஸ்டி ஸ்டோர்' என்ற சிறிய கடையும் பள்ளி வளாகத்தில் உண்டு. பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், காகிதங்கள் போன்றவை இங்கு வைக்கப்பட்டிருக்கும். விலையும் அதிலேயே ஒட்டப்பட்டிருக்கும். மாணவர்கள் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் உண்டியலில் உரிய தொகையைப் போட்டுவிட்டுச் செல்வார்கள். 

"ஹானஸ்டி மிரர்' என்றொரு பெட்டி உண்டு. பள்ளி வளாகத்துக்குள் எங்கேனும் தரையில் காணக்கிடைக்கும் ரூபாய்கள், நாணயங்களை எடுக்கும் மாணவர்கள் இந்தப் பெட்டியில் போட்டுவிடுகிறார்கள். யாரேனும் பணத்தைத் தொலைத்தவர்கள் தலைமை ஆசிரியரிடம் சரியாகத் தெரிவித்தால் அப்பெட்டி திறக்கப்பட்டு எடுத்துத் தரப்படுமாம்.

"ஜூனியர் டேலன்ட் எக்ஸாம்' என்ற பெயரில் கடந்த மூன்றாண்டாக இப்பள்ளியில் ஒரு பொது அறிவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இங்கிருந்து சுமார் 8 கிமீ சுற்றளவில் உள்ள 16 தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களும் பங்கேற்கிறார்கள்.

அதேபோல, இதே 16 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பள்ளிகளுக்கு இடையிலான கலைப் போட்டிகளும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. மறைந்துவரும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் திட்டமிட்டு பயிற்றுவிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்கும் விழாவாகத்தான் நடத்தப்படுகிறது.

இன்றைய காலத்தில் போட்டித் தேர்வுகள் அத்தனையும் "ஓஎம்ஆர்' என்றழைக்கப்படும், விடைக்குரிய வட்டத்தை கருப்பு மையால் நிரப்பும் நவீன வகை விடைத்தாளில்தான் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அரசுப் பள்ளியில் 6 -ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கான பொது அறிவுத் தேர்வு முழுவதும் ஓஎம்ஆர் தாளில்தான். 

எங்கள் பள்ளியின் மாணவர்கள் டிஎன்பிஎஸ்ஸி தேர்வுகளில் எளிதாக வெற்றிபெறுவார்கள்.  குறிப்பிடும்படியான ஒன்று... "ஜூனியர் ரெட் கிராஸ்' (ஜெஆர்சி) சார்பில் அப்பகுதியில் வீடில்லாத தாய் மற்றும் மகளுக்காக ரூ. 75 ஆயிரம் மதிப்பில் ஒரு வீட்டையே கட்டித் தந்திருக்கிறார்கள். கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மே 27-ஆம் தேதி இந்த வீட்டுக்கான திறப்பு விழா எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது. 

"என்னுடைய 27 ஆண்டுகால கல்வித் துறை அனுபவத்தில், குழந்தைகளைப் படி.. படி.. என எப்போதும் நெருக்கிக் கொண்டே இருக்காமல், இயல்பாக இருக்க விட்டு படிப்பதற்கான வழிகளை, பாதையைக் தந்துவிட்டால் அவர்கள் நன்றாகப் படிப்பார்கள்' என விளக்குகிறார் தலைமையாசிரியர் அன்றணி.

"கேட்பதை விடவும், பார்ப்பதை விடவும், செய்துப் பார்ப்பதே மேல்...' இதுதான் இப்பள்ளியின் கூட்ட அரங்கின் எழுதப்பட்டுள்ள தாரக மந்திரம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com