கரோனா: எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  உதவும் "பிராணாயாமம்'

கரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளில் "பிராணாயாமம்' (மூச்சுப் பயிற்சி) முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
கரோனா: எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  உதவும் "பிராணாயாமம்'

கரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளில் "பிராணாயாமம்' (மூச்சுப் பயிற்சி) முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதை செய்வதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எந்தவித அசாதாரண சூழலிலும் ஆரோக்கியமாக வாழலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது அச்சுறுத்தி வரும் கரோனா உள்ளிட்ட நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள செயல்படுத்தப்பட்டு வரும் ஆரோக்கியம் சிறப்புத் திட்டத்தில், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டுள்ள வழி
முறைகளில் யோகாவுக்கும், பிராணாயாமத்துக்கும் பிரதான இடம் உள்ளது. 

இதுகுறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியரும் யோகா துறையின் தலைவருமான மருத்துவர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:

யோகா என்றால் உடலை மடக்கி, முன்னுக்கு வளைந்து செய்வது என்று அர்த்தமில்லை. அவரவருக்கு ஏற்ற ஒரு சில மூச்சுப் பயிற்சிகளை செய்தாலே, உடலை மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாகாவும் உற்சாகமாகவும் வைத்துக் கொள்ளலாம். இவை இரண்டையும் வலுவற்ற நிலையில் வைத்திருப்பவர்களையே நோய்க் கிருமிகள் சுலபமாக தாக்கிவிடுகிறது. நோய்களால் தாக்கப்படுவோரின் மனதை மகிழ்ச்சியாகவும், அழுத்தமின்றி வைத்திருந்தாலே, மருந்து கூட வேகமாக செயல்படுகிறது. இதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. 

வழிமுறைகள்: நோய்க்கிருமிக்கு மிகப் பெரிய மருந்து, நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகள் மட்டுமே. இயற்கையாகவே நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்காக வெள்ளையணுக்கள், சி1 முதல் சி17 வரையிலான அணுக்கள் ஆகியவை உள்ளன. இதைப் பெருக்கவும், நோய்கள் தாக்காமல் தடுக்கவும் முன்னோர்களால்  வழங்கப்பட்ட மூச்சுப் பயிற்சிகளில் பிராணாயாமம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இவற்றில் பஸ்த்ரிகா, பிராமரி பிராணாயாமம், ஆசனத்தில் வஜ்ராசனம், கிரியா, உடலைத் தளர்த்தும் பயிற்சி ஆகியவற்றைச் செய்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை சுலபமாக அதிகரிக்கலாம். 

வஜ்ராசனம்: வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள். உடலையும் மனதயும் திடமாக வைக்கும் என்பதால் வஜ்ராசனம் என்று கூறுகிறோம். முழங்கால்களை மடக்கி அதன் மீது அமர்வதே வஜ்ராசனம். இதைத் தொடக்கத்தில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை செய்யலாம். குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது வஜ்ராசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். இது பிராணாயாமத்துக்கு மிகவும் ஏற்ற ஆசனம். பெரும்பாலும் கீழே அமரும்போது, வஜ்ராசனத்தில் அமர்வதையே நாங்களும் பரிந்துரைக்கிறோம். 

பஸ்த்ரிகா: இந்த வகை பிராணாயாமத்தைப் பொருத்தவரை முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர வேண்டும். குறிப்பாக முதுகுத் தண்டை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமர்ந்து ஆண்கள் தங்களது வலது கை மேலேயும் இடது கை கீழேயும் (பைரவ முத்ரா) இருக்குமாறு தொப்புள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இதற்கு நேரெதிராக பைரவி முத்ராவில் வைத்து, ஆழமாக மூச்சை இழுத்து முழுவதுமாக வெளியே விட வேண்டும். இதை வேகமாக செய்ய வேண்டும். 5 நிமிடம் செய்தால் கூட போதுமானது. இந்தப் பயிற்சியால் நுரையீரல் விரிவடைகிறது. 

பிராமரி: இந்தப் பயிற்சியானது, இரண்டு காதுகளிலும் ஆள் காட்டி விரல்களை வைத்து "ம்ம்' என்று தேனீக்களைப் போன்று சத்தத்தை எழுப்புவது. இதையும் மூன்று முதல் 5 நிமிடம் வரை செய்யலாம். இதன் மூலம் உள்ளுக்குள் அதிர்வுகள் உருவாகி, சுரப்பிகள் சிறப்பான முறையில் இயக்கப்பட்டு "டி' செல்களை மேம்படுத்துகிறது. 

நேரக் கட்டுப்பாடு இல்லை:  இவை தவிர்த்து உடலைத் தளர்த்தும் பயிற்சிகளும், கிரியையகளும் மருத்துவர்களின் முன்னிலையில் கற்ற பிறகே, வீட்டில் செய்யத் தொடங்க வேண்டும். பிராணாயாமம், ஆசனங்களை செய்வதற்கு எந்த வித நேரக் கட்டுப்பாடும் கிடையாது. சிறிய ஓய்வு தேவைப்படும் நேரங்களிலெல்லாம் செய்யலாம். உணவு உட்கொண்ட உடனே எந்த ஆசனமும், மூச்சுப் பயிற்சியும் மேற்கொள்ளக் கூடாது. உணவுக்குப் பின் ஜீரணசக்தியை மேம்படுத்த வஜ்ராசனம் செய்யலாம். 

குழந்தைகளுக்கு கட்டாயமில்லை: நாம் அடிப்படையாக கூறிய மூச்சுப் பயிற்சிகளை எட்டு வயது குழந்தைகள் முதல் அனைவரும் செய்யலாம். 

பெரும்பாலும் குழந்தைகளுக்கு மூச்சுப் பயிற்சி கட்டாயமில்லை. அவர்கள் இயற்கையாகவே முறையாக சுவாசிக்கிறார்கள். வயதாகும்போதே மன அழுத்தம், குழப்பம், ஆகியன ஏற்பட்டு சுவாசிக்கும் முறை மாறி விடுகிறது. 
எனவே அவர்களுக்கு அந்த பருவத்திலேயே யோகாவைப் பழக்க வேண்டும். ஆசனத்தைப் பொருத்தவரை முறையாக யோகா கற்றவரிடம் குழந்தைகள் கற்க வேண்டும். 

அவர்களால்  மட்டுமே குழந்தைகளின் வயதுக்கேற்ற ஆசனத்தை சொல்லித் தர முடியும்.  இதனால் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.  

இலவசம்: கிருமி தாக்குதலைத் தவிர்க்க மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வதை அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். இதேபோன்று யோகா, மூச்சுப் பயிற்சிகள் அனைத்தும் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. 

அங்குள்ள மருத்துவரை அணுகி அனைவரும் எளிதாக கற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். மனிதனுக்கு அடிப்படையான தேவை ஆழமான மூச்சு மட்டுமே என்றார் மருத்துவர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன். 

கோபத்தை கட்டுப்படுத்த....

கோபத்தைக் கட்டுப்படுத்த நாடிசுத்தி  செய்யலாம். இதற்கு வலது கையின் ஆள்காட்டி மற்றும் நடுவிரல்களை மடக்கிக் கொண்டு, பெருவிரலால் வலது பக்க மூக்கை மூடிக் கொண்டு அடுத்த பக்கம் வழியாக மூச்சை இழுக்க வேண்டும். பின்னர் மோதிர விரல் மற்றும் சுண்டு விரலால் இடது பக்க மூக்கை மூடி மற்றொருபுறமாக மூச்சை வெளியிட வேண்டும். தொடர்ந்து மூச்சை வெளிவிடும் பகுதியில் மறுபடியும் மூச்சை இழுத்து மற்றொரு முறையில் வெளியே விட வேண்டும். இது எவ்வளவு பெரிய கோபம், மன அழுத்தத்தில் இருப்பவர்களையும் சுலபமாக அதிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com