தமிழுக்கு வரும் ரீமேக் சினிமாக்கள்!

ஒரு படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றால் அந்தப் படத்துக்கான ரீமேக் உரிமையைப் பெற மற்ற மொழித் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும்.
தமிழுக்கு வரும் ரீமேக் சினிமாக்கள்!

ஒரு படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றால் அந்தப் படத்துக்கான ரீமேக் உரிமையைப் பெற மற்ற மொழித் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும். சில படங்கள் வெளியாகும் முன்னரே அதற்கான ரீமேக் உரிமை விற்கப்பட்டிருக்கும். அப்படி ரீமேக்காகும் படங்களுக்குக் கூடுதல் எதிர்பார்ப்பும் வரவேற்பும் உண்டு. தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகி மிகப் பெரும் வெற்றிப் பெற்ற படங்கள் தமிழில் ரீமேக்காகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் படங்கள் தவிர, இனி வரும் காலங்களில் ரீமேக்காக இருக்கும் மற்ற மொழிப் படங்களின் பட்டியல் இது!

ஜெர்ஸி

கௌதம் தின்னனூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த "ஜெர்ஸி' படம் இந்த ஆண்டு வெளியான டோலிவுட் வெற்றிகளில் முக்கியமான ஒன்று. ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் அப்பா - மகன் உறவை நேர்த்தியாகச் சொல்லியிருப்பார்கள். இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ஹிந்தியில் அதே இயக்குநர் இயக்க, ஷாகித் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றனர். தமிழில் "ஒரு நாள் கூத்து', "மான்ஸ்டர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்க விஷ்ணு விஷால் - அமலா பால் நடிக்க இருக்கின்றனர்.

அந்தாதுன்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து சூப்பர் ஹிட்டான படம் "அந்தாதுன்'. பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக வரும் ஆயுஷ்மானுக்கு தேசிய விருது கிடைக்க இந்தப் படம்தான் காரணம். ஒரு கொலையும் அதன் பரபரப்பான பின்னணிகளும் என நமக்கு தோன்றினாலும் காதல், காமெடி என அனைத்து உணர்வுகளையும் கடத்தி கைத்தட்டல் அள்ளியது "அந்தாதுன்'. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் வாங்கியுள்ளார். ஆயுஷ்மான் குரானா நடித்த கேரக்டரில் பிரசாந்த் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஜோதிகாவின் "பொன்மகள் வந்தாள்' படத்தை இயக்கிய ஜே ஜே பிரெட்ரிக் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதாய் ஹோ

"அந்தாதுன்' படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மாறி அசத்தினார் ஆயுஷ்மான் குரானா. அமித் ஷர்மா இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடிப் படமாக வெளியான "பதாய் ஹோ'வைக் கொண்டாடியது பாலிவுட். நாயகன் மட்டுமல்லாமல் அதில் நடித்த எல்லோரும் கவனிக்கப்பட்டார்கள். பல காமெடி கதைகள் நமக்கு பழக்கப்பட்டதாக இருந்தாலும் இந்தப் படம் பேசப்பட்டதற்குக் காரணம், இதில் இயக்குநர் மனித உணர்வுகளை அணுகிய முறை. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை போனி கபூர் வைத்துள்ளார். இந்தப் படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

நின்னுக்கோரி

நானி, நிவேதா தாமஸ், ஆதி ஆகியோர் நடித்து வெளியான படம் "நின்னுக்கோரி'. காதலை முதன்மையாக கொண்டு உருவான இந்தப் படத்தை தமிழில் ஆர்.கண்ணன் இயக்குகிறார். நானி கேரக்டரில் அதர்வா, நிவேதா தாமஸ் கேரக்டரில் அனுபமா பரமேஷ்வரன் நடிக்கின்றனர். ஆதி நடித்த கேரக்டரில் "வேலையில்லா பட்டதாரி' படத்தின் வில்லன் அமிதாஷ் நடிக்கிறார். தவிர, வித்யூலேகா ராமன், "ஆடுகளம்' நரேன், ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ரங்கஸ்தலம்

சுகுமார் இயக்கத்தில் ராம்சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடித்து 100 கோடி வசூல் சாதனை படைத்த படம் "ரங்கஸ்தலம்'. அதிகாரத்தில் இருந்துகொண்டு அநியாயம் செய்யும் தலைவனை தட்டிக் கேட்கும் ஆக்ஷன் படம் இது. இந்தப் படத்தின் பெயரைச் சொன்னதும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் "ரங்கம்மா மங்கம்மா...' பாடல்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு அது சூப்பர் டூப்பர் ஹிட்.

கடந்த ஆண்டு சிறந்த ஒலிப்பதிவு பிரிவில் தேசிய விருது பெற்றது. செவித்திறன் குறைபாடுள்ள கிராமத்து இளைஞனாக ராம்சரண் நடித்தது அனைவருக்கும் பிடித்திருந்தது. இந்தப் படத்தின் தமிழ் பதிப்பை லிங்குசாமி இயக்க, ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார்.

எவரு

"தி இன்விஸிபிள் கெஸ்ட்' என்ற ஸ்பானிஷ் படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட படம் "பத்லா'. மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படத்தில் அமிதாப் பச்சனும் டாப்ஸியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கவைக்கும் அளவுக்கு த்ரில்லிங் நிறைந்த இப்படத்தை ஷாரூக்கான் தயாரித்திருந்தார். அதே ஸ்பானிஷ் படத்தின் தழுவலாக சின்னச் சின்ன மாற்றங்களுடன் வெளியானது டோலிவுட்டின் "எவரு'. அத்வி ஷேஷ், ரெஜினா கஸôண்ட்ரா, நவீன் சந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் வசூலிலும் விமர்சனத்திலும் பெரிய இடத்தைப் பிடித்தது. இந்தக் கதையின் தமிழ் ரீமேக்கில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

திருமணத்துக்குப் பிறகு, நாக சைதன்யா - சமந்தா ஜோடி சேர்ந்து நடித்து ஹிட்டான "மஜிலி' படத்தின் ரீமேக் உரிமையை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வைத்துள்ளது என்ற தகவலும் இருக்கிறது.

தமிழில் உருவான பல ஹிட் படங்களுக்கும் மற்ற மொழிகளில் பலத்த வரவேற்பு. "அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கவிருக்கிறார். பாலிவுட் அசுரனாக நடிக்க ஷாருக்கானிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. 90-களின் காலக் கட்டத்துக்கே நம்மை கடத்திச் சென்ற "கோமாளி' படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளார். அதில் அர்ஜுன் கபூர் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல், "கைதி' படத்தின் பாலிவுட் ரீமேக் உரிமையைப் பெற பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com