தத்தளிப்பவர்களைக் காக்க... தண்ணீர் சைக்கிள்

சைக்கிளில் இப்போதும் கூட பலர்  புதுமைகளைச் செய்து சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வருவதை வழக்கமாக்கியுள்ளனர்.
தத்தளிப்பவர்களைக் காக்க... தண்ணீர் சைக்கிள்

சைக்கிளில் இப்போதும் கூட பலர்  புதுமைகளைச் செய்து சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வருவதை வழக்கமாக்கியுள்ளனர். மரத்தாலான சைக்கிள், ஒரே சக்கரத்தால் செயல்படும் சைக்கிள் என பல வடிவங்களில் சைக்கிள்கள் வந்துவிட்ட காலத்தில் தண்ணீரில் தத்தளிப்பவர்களை மீட்கும் சைக்கிளை வடிவமைத்திருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களான நஸ்ருதீன் (25), அசாருதீன் (25). அவசர ஊர்தி ஓட்டுநர்களான இருவரும் ஒன்பதாம் வகுப்பைத் தாண்டவில்லை. இளம் வயதில் அப்பா முகமது ஜலீல் இறந்துவிட அம்மா, தங்கை என இருவரையும் உழைத்து காப்பாற்றும் பொறுப்பு தங்களை வந்தடைந்ததை உணர்ந்து ஓட்டுநர்களாகியதாகக் கூறுகின்றனர். 

""பள்ளிப் படிப்பைத் தாண்டாத ஏக்கம் ஒருபுறம் என்றாலும், எதையாவது உருப்படியாக சாதித்துக் காட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்ததாகக் கூறும் அவர்கள் தற்போது கடல், குளம் என நீரில் தத்தளிப்பவர்களை மீட்கும் வகையில் தண்ணீரில் பயணிக்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளனர். ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியைத் தாண்டியுள்ள கீழக்கரையில் சொக்கநாதர் கோவில்  தெருவில் வசிக்கும் இருவரும் தண்ணீரில் இயங்கும் சைக்கிளை நம் முன்னே கடலில் இயக்கிக் காட்டி பெருமிதப்பட்டனர். சைக்கிள் வடிவமைப்பு, அதற்கான அவசியம் குறித்து நம்மிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்: 

அவசர ஊர்தி ஓட்டுநர்களான நாங்கள் இதுவரை நூற்றுக்கணக்கானோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். ஆனால், இப்பகுதியில் பெரும்பாலும் தண்ணீரில் விழுந்து மரணம் அடைந்தவர்களையே அவசர ஊர்தியில் ஏற்றிச்சென்றுள்ளோம். ராமநாதபுரம் பகுதியை வறட்சியாக இருந்தாலும் குளங்கள், ஊருணிகள், கண்மாய்கள் மற்றும் கடல் எல்லை என தண்ணீர் அதிகமுள்ள பகுதியாகும். ஆகவே தண்ணீரில் விழுந்து தத்தளித்து உயிர்துறப்பவர்கள் அதிகம். தண்ணீரில் தத்தளிப்போரை மீட்க தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்கும் நிலையே பல சம்பவங்களில் பார்க்க முடிந்தது. ஆகவே நீச்சல் தெரிந்த கிராமத்து இளைஞர்கள் மூலம் தண்ணீரில் விழுந்தவர்களை உடனடியாகக் காப்பாற்றி மீட்கும் வகையில்தான் தண்ணீர் சைக்கிளை வடிவமைத்துள்ளோம்.

சாதாரண சைக்கிளையே தண்ணீரில் இயங்குவதற்கு ஏற்ப வடிவமைத்துள்ளோம் . தண்ணீரை பின்னால் தள்ளிவிடும் சக்கரம், அதை தண்ணீரில் நிறுத்தும் வகையில் மிதக்கச் செய்வதற்கு காலி தண்ணீர் கேன்கள் 8, பத்தடி நீள கம்பிகள் 4 என சைக்கிளில் பொருத்தியுள்ளோம். சைக்கிளை தண்ணீரில் காலால் சுழற்றி செலுத்த வழக்கமான  பெடல் அமைப்பை வைத்துள்ளோம். இந்த சைக்கிளை வடிவமைக்க ரூ.10 ஆயிரம் 
செலவிடப்பட்டுள்ளது.

கடல், குளத்தில் எந்தத் திசையானாலும் சைக்கிளை திருப்புவதற்கு படகின் சுக்கான் போன்ற அமைப்பை மூன்று சக்கர சைக்கிளுக்கு வைப்பது போல சைக்கிளின் பின்பகுதியில் அமைத்துள்ளோம். சைக்கிளை கீழக்கரை மீன்பிடி பாலத்தின் கடல் பகுதியில் மிதக்கவிட்டு மணிக்கு 10 முதல் 15 கி. மீ. வரை இயக்கிப் பார்த்தோம். இதில் இருவர் பயணிக்கலாம். மீட்பவரை பத்திரமாக பின்பகுதியில் அமர வைக்கலாம்.

 கடலை விட கண்மாய், குளங்களில் இந்த தண்ணீர் சைக்கிள் வேகமாகவும், தத்தளிப்பவர்களை காப்பாற்றும் வகையில் விரைவில் செலுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆகவே இதை இன்னும் எளிமையாக்கி முழுமையான வகையில் தண்ணீர் சைக்கிளாக உருவாக்க உள்ளோம். 

சைக்கிளை வேகமாக இயக்க முடியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் இதில் மோட்டாரை பொருத்தவும் திட்டமிட்டுள்ளோம்.முழு பயன்பாட்டுக்குரியதாக சைக்கிளை வடிவமைத்தப் பிறகு முறைப்படி அரசு அனுமதி பெற்று இதை செயல்பாட்டுக்கு கொண்டுவருவோம்.

தண்ணீர் சைக்கிள் கண்டுபிடிப்பு நம்மூரில் ஆச்சரியமாக பேசப்படலாம். ஆனால், இதுபோல வெளிநாட்டில் பலரும் பல விதமான அமைப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். சமூக வலைதளங்கள் உதவியுடன் தண்ணீர் சைக்கிளை உருவாக்கியுள்ளோம்.

எங்களது தண்ணீர் சைக்கிள் நிச்சயமாக அனைத்துத் தரப்பினராலும் செயல்பாட்டுக்கு ஏற்கப்படும் என நம்புகிறோம். ஊருக்கு ஒரு தண்ணீர் சைக்கிள் இருந்தால் தண்ணீரில் மூழ்குவோரை காக்க உதவும் என்பதே எங்களது நம்பிக்கை. கரோனா பரவிய காலத்தில் உயிரிழந்தவர்களை உறவினர்களே தொடப் பயந்த காலத்தில் நாங்கள் முகக்கவசம் உள்ளிட்ட உடைகளுடன் தகனம் செய்யும் பணியிலும் ஈடுபட்டோம்'' என தங்களது சேவை மனப்பான்மையையும் தெரிவித்தனர்.

ஆம்....தேவைக்கு ஏற்ற சாதனங்களை உருவாக்குவதே சிறந்த கண்டுபிடிப்பாளர்களை சமூகத்தில் அடையாளப்படுத்தும் என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com