திருக்குறளைப் பரப்பும் மாணவர்கள் 

திருக்குறள் குறித்த விழிப்புணர்வும், அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மழலையர், தொடக்கப் பள்ளிக் குழந்தைகளிடம் 1,330 குறள்களையும் படித்து ஒப்பிக்கும் ஆர்வ
திருக்குறளைப் பரப்பும் மாணவர்கள் 

திருக்குறள் குறித்த விழிப்புணர்வும், அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மழலையர், தொடக்கப் பள்ளிக் குழந்தைகளிடம் 1,330 குறள்களையும் படித்து ஒப்பிக்கும் ஆர்வம் பரவலாகியுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை, திருக்குறள் கல்வி மையம் மேற்கொண்ட முயற்சியின் மூலம் 9 மாணவ, மாணவிகள் 1,330 குறள்களையும் ஒப்பித்து சாதனை படைத்தது மட்டுமல்லாமல், திருக்குறளைப் பரப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தங்களது வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை போன்று வைத்து, அதில் நாள்தோறும் ஒரு குறளை எழுதி, விளக்கவுரையையும் எழுதி வருகின்றனர். இதை அவ்வழியே செல்லும் பலர் நின்று படித்துவிட்டுச் செல்கின்றனர். இப்பணி கிட்டத்தட்ட ஓராண்டாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர் வடக்கு வீதி அம்மாலயம் சந்தைச் சேர்ந்த டி.என். செந்தில்குமாரின் மகளான எட்டாம் வகுப்பு மாணவி செ.இ. ஹரிணி தெரிவித்தது:

""நான் நான்காம் வகுப்புப் படிக்கும்போது திருக்குறள் படிக்கத் தொடங்கினேன். ஐந்தாம் வகுப்பில் 1,330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தேன். இதையடுத்து, உலகத் திருக்குறள் பேரவையைச் சேர்ந்த கோபிசிங், கந்தசாமி, அறிவானந்தம், சோமசுந்தரம், பழ. மாறவர்மன் ஆகியோர் வீட்டு வாசலில் பலகை அமைத்து நாள்தோறும் எழுதி வருமாறு அறிவுரை வழங்கினர். இதன்படி, வீட்டுச் சுவரில் கரும்பலகை ஏற்பாடு செய்தோம். இதில், ஓராண்டாக நாள்தோறும் ஒரு திருக்குறளையையும், அதற்கான விளக்கவுரையையும் எழுதி வருகிறேன். இதை இந்த வழியாகச் செல்லும் பலரும் படித்துச் செல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரவு படுப்பதற்கு முன்பு எழுதி வைத்துவிடுவேன். காலை முதல் இப்பகுதி மக்கள் படிக்கின்றனர்.

மேலும், இதை திறன் பேசியில் புகைப்படம் எடுத்து, திருக்குறள் பேரவையைச் சார்ந்த கட்செவி அஞ்சலிலும் பதிவிடுவேன். இதன் மூலம், இன்னும் ஏராளமான கட்செவி குழுக்களுக்குச் செல்கிறது. 

இது, நம்மூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் போகிறது. இதன் மூலம் ஏராளமானோர் படிப்பதால் மகிழ்ச்சியாகவும், மனதுக்கு நிறைவாகவும் இருக்கிறது. இப்போது தொல்காப்பியம் படித்து வருகிறேன்'' என்றார் ஹரிணி.

இதேபோல, நாலுகால் மண்டபம் அருகேயுள்ள கிட்டப்பா வட்டாரத்தைச் சேர்ந்த குணசேகரனின் மகளான ஒன்பதாம் வகுப்பு மாணவி தேவஸ்ரீயும் வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்டுள்ள பலகையில் நாள்தோறும் திருக்குறளும், அதற்கான பொருளும் எழுதி வருகிறார். இவரும் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது 1,330 குறளும் ஒப்பித்தவர். இதை கிட்டத்தட்ட ஓராண்டாக எழுதி வருவதாக தேவஸ்ரீ தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,  ""இதை நிறைய பேர் படிக்கின்றனர். குறிப்பாக, நான்கைந்து பேர் ஆர்வத்துடன் வந்து படித்துச் செல்கின்றனர். ஏதாவது ஒரு நாளில் உடல் நிலை சரியில்லாமல் எழுதுவதற்கு விட்டுவிட்டால் கூட, ஏன் எழுதவில்லை எனக் கேட்கின்றனர். எல்லோரும் ஆர்வத்துடன் வந்து படிப்பதால், நான் நினைத்தாலும் இதை நிறுத்த முடியாது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.திருவிழா, பிறந்த நாள் விழா உள்பட காலச்சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அதிகாரத்தில் இருந்து ஏதாவது ஒரு குறளையும், விளக்கவுரையும் எழுதி வருகிறேன். கரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் மருத்துவம் தொடர்பான குறள்களை எழுதி வருகிறேன். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது'' என்கிறார் தேவஸ்ரீ.

இவர் திருக்குறள் எழுதி போடுவது மட்டுமல்லாமல், மற்ற மாணவர்களுக்குத் திருக்குறளும் கற்பித்து வருகிறார். இவரிடம் கிட்டத்தட்ட 10 பேர் திருக்குறள் படித்து வருகின்றனர். இவரைப் போலவே மேல வீதி காக்கா வட்டாரம் பகுதியில் சிவகுமாரின் மகளான பத்தாம் வகுப்பு மாணவி சம்யுக்தா, எட்டம் வகுப்புப் படிக்கும் மகன் ரோஹித் இருவரும் வீட்டு வாசலில் திருக்குறள் எழுதி வருகின்றனர். இதுகுறித்து இருவரும் கூறுகையில்,"" ஆளுக்கு ஒரு வாரம் பலகையில் திருக்குறளையும், விளக்கவுரையையும் எழுதி வருகிறோம். இதை கிட்டத்தட்ட 80 பேர் படிக்கின்றனர்'' என்றனர்.

இவர்களைப் போல தேவி சந்தனா, சகோதரிகள் இந்துஜா - சிந்துஜா, அறிவரசன், குகன், மிருதுளா மீனாட்சி ஆகியோரும் வீட்டு வாசலில் திருக்குறளை எழுதி பரப்பும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன் தெரிவித்தது:

""மாணவர்கள் தங்களது வீட்டு வாசலில் எழுதி வைத்து திருக்குறளைப் பரப்பும் பணிக்கு வித்திட்டவர் ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் கோபி சிங். அவர் தனது மகள் பிரதீபாவை ஒப்பிக்கச் செய்தது மட்டுமல்லாமல், தனது வீட்டு வாசலில் எழுத வைத்ததன் மூலம் இப்பணியை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தில், முதலில் குழந்தைகளுக்கு திருக்குறள் பயிற்சி அளித்து ஒப்பிக்கச் செய்யப்படுகிறது. பின்னர் அக்குழந்தைகள் தங்களது வீட்டில் பலகை வைத்து எழுதி போடச் சொல்வது என செய்து வருகிறோம். இதன் மூலம், அக்கம்பக்கத்தினரிடமும் திருக்குறள் மீதான ஈடுபாடு அதிகரித்து வருகிறது. அடுத்து தஞ்சாவூரிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் பொது இடத்தில் திருக்குறள் பலகை அமைத்து, அதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மூலம் நாள்தோறும் திருக்குறள் எழுத வைக்கத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார் மாறவர்மன். 

படங்கள்: எஸ். தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com