தினமணியும் நானும்: ஆலய மணி ஓசையும் தினமணி ஓசையும்

ஒரு நாளிதழ் ஒருவரை தன் வசப்படுத்துகிறது என்றால் அதற்குச் சரியான காரணங்கள், தொடர்புகள் இருக்க வேண்டும். தினமணி என்னை ஆட்கொண்டதற்குச் சுவையான வரலாறு உண்டு.
தினமணியும் நானும்: ஆலய மணி ஓசையும் தினமணி ஓசையும்

ஒரு நாளிதழ் ஒருவரை தன் வசப்படுத்துகிறது என்றால் அதற்குச் சரியான காரணங்கள், தொடர்புகள் இருக்க வேண்டும். தினமணி என்னை ஆட்கொண்டதற்குச் சுவையான வரலாறு உண்டு.

அண்ணாமலை நகரில் உள்ள ராமசாமி செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் 1953-ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்தேன். அப்போது பத்திரிகைகள் வாசிப்பதற்கு உரிய பருவம் இல்லை என்றாலும், தமக்கை வீட்டில் தங்கியிருந்ததால் அவர்கள் வீட்டுக்கு வரும் வார, மாத இதழ்களைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்ததால் தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இயல்பாகவே மேலும் சில இதழ்களைப் படிக்க விரும்பினேன்.

அப்போது தினசரி பத்திரிகைகளின் முகவர் சிதம்பரத்தில் இருந்தார். அவரைப் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது.

அண்ணாமலை நகரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள அவர் வீட்டிற்கு சைக்கிளில் சென்று, என்னிடம் உள்ள சிறு தொகையில் அவரிடம் சில பத்திரிகைகளை வாங்குவேன்.

இதனால் மெல்ல அவரிடம் நட்பு வளர்ந்தது. அவர் வேறு யாருமல்ல; பிற்காலத்தில் "பேராசிரியர் க. அன்பழகன்' என்று அழைக்கப்பட்டவரின் தந்தையார் கல்யாண சுந்தரம் என்று அறிந்தேன்.

தினமும் கல்யாண சுந்தரம் ரயில் நிலையம் சென்று தினத்தாள், வார இதழ்கள் என 3 கட்டுகளை எடுத்து வருவார். அவர் வரும் வரை காத்திருந்து, அவர் கட்டுகளைப் பிரித்ததும் விரும்பிப் படிக்கும் இதழ்களை வாங்கிச் செல்வேன்.

அப்படி வரும் இதழ்களில் "தினமணி', "சுதேசமித்திரன்', "இந்து', "கலைமகள்', "கல்கி'," ஆனந்த விகடன்" போன்ற இதழ்களுடன், "நம்நாடு' , "திராவிட நாடு', "விடுதலை' என்ற இயக்க ஏடுகளும் உண்டு. இவைகளில் "திராவிட நாடு', "நம் நாடு' இதழ்களையும், தினமணியையும் வாங்க காசு இல்லாததால் அவர் எடுத்து வரும் கட்டுக்களைப் பிரிக்க நானும் உதவி புரிவேன். இந்த சிறு பணிக்காக தினமணியை எனக்கு படிக்கக் கொடுப்பார். பிறகு மீண்டும் அண்ணாமலை நகர் செல்வேன்.

இவ்வாறு காலையில் நான் வந்து உதவுவதை கல்யாண சுந்தரமும் விரும்பினார். எஸ்.எஸ்.எல்.சி. வரை இந்த இலவச படிப்பு நீடித்தது. அப்படி செய்யும் போது முந்தைய நாள் தினமணியை மட்டும் இலவசமாக எனக்கு
அளிப்பார்.

இவ்வாறு தினமணி வாசகரான எனக்கு தற்போது 84 வயது நடக்கிறது. நான் படித்த அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்தேன். அன்றுமுதல் இன்றுவரை தினமணி படிக்காத நாளில்லை.

சென்னைக்கு வரும் பொழுதெல்லாம் தினமணி ஆசிரியர்களை ஏ.என்.சிவராமன் தொடங்கி தற்போதைய ஆசிரியர் கி. வைத்தியநாதன் வரை அவர்களைச் சந்திப்பதையும் ஓர் வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

ஏ.என். சிவராமனின் அன்புக்கு பாத்திரமான நான் , அவர் "கணக்கன்' என்ற புனை பெயரில் எழுதும் கட்டுரைகளை விமர்சிப்பது உண்டு.

நான் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் பிற மொழி நிறுவனத்தில் இயக்குநராக இருந்த போது, வெளியே நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வது இல்லை என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்த ஏ.என்.சிவராமனை முதன் முதலில் எழுத்துச் சீர்திருத்த மாநாட்டுக்கு அழைத்து வந்தேன்.

அக்கூட்டத்தில் அவர், "எழுத்துச் சீர்த்திருத்தம் தொடர்பாக தினமணியின் நிலைப்பாட்டை' விளக்கியதுடன், "தினமணி'யில் மட்டும்தான் எனது பெயர் வர வேண்டும் என்று கொள்கை உடைய எனது பெயரை முதன் முதலில் "அழைப்பிதழில்' போட்டவர் இவர்தான்' என்றும் குறிப்பிட்டார்.

தினமணியின் கொள்கையான "நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' என்பதற்கேற்ப அன்றும் இன்றும் ஆசிரியர் கி.வைத்தியநாதன் கட்டுரைகள் உள்ளன.

ஒருமுறை "பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வுப் பட்டங்களில் நடைபெறும் முறைகேடு' என்ற கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.

அதைப் படித்த, திருத்துறைப்பூண்டியில் சுற்றுப் பயணம் செய்த அப்போதைய கல்வி அமைச்சர் க.அன்பழகன், தம் காரை தஞ்சை வழியாகத் திருப்பி, துணை வேந்தராக இருந்த டாக்டர் சி. பாலசுப்பிரமணியனை திடீரென்று சந்தித்து, "இந்தக் கட்டுரையைப் படித்தீர்களா?' என்று கூறி தினமணியைக் கொடுத்து "பல்கலைக்கழக வாரியாக ஒரு பட்டியல் தயாரியுங்கள்' என்று கூறிச் சென்றுள்ளார்.

தவிர்க்க முடியாத பிறமொழிக் கலப்பு மிகக் குறைவாக உள்ள இதழ் என்ற பெயரும் பெற்ற தினமணியின் இணைப்பிதழ்களான மகளிர் மணி, தமிழ்மணி, இளைஞர் மணி போன்றவை நான் அதிகம் விரும்பிப் படிப்பது.

கரோனா பரவியுள்ள இந்த நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்யாத நிலையில் மங்கிய பார்வை இருக்கும் நேரத்தில் படிக்க முடியாததை ஒருவர் படிக்கக் கேட்பேன்.

நான் சிதம்பரத்தில் நடராஜர் கோயில் ஆலயமணி ஓசை கேட்டிருக்கிறேன். அந்த ஓசை மணியைப் போல தனித்த ஓசை தினமணியிலும் படிக்கும் போது கேட்கிறேன்.

(தினமணியும் நானும் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com