பாதை மாறிய பட்டதாரிகள்

வேலையில்லா திண்டாட்டம் காரணமாகப் பட்டதாரிகள் பலர் தாங்கள் படித்த படிப்பை விட்டுப் பாதை மாறிப் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். சுயதொழில் தான் அவர்களின் விருப்பத்தேர்வாக உள்ளது.
பாதை மாறிய பட்டதாரிகள்

வேலையில்லா திண்டாட்டம் காரணமாகப் பட்டதாரிகள் பலர் தாங்கள் படித்த படிப்பை விட்டுப் பாதை மாறிப் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். சுயதொழில் தான் அவர்களின் விருப்பத்தேர்வாக உள்ளது. அதுவும் விவசாயத்துறையில் இளைஞர்களின் பங்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு உதாரணம் தான் ஜெய் ஸ்ரீராம் பிரசாத், ஸ்ரீராம் சுப்ரமணியம், மணிராஜ், திருப்பதி எனப் பட்டதாரிகள் பலர் ஒன்றிணைந்து கீரை வியாபாரத்தைத் தேர்வு செய்து இன்று வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். 

கீரை மீது கவனம் வந்தது எப்படி? ஜெய் ஸ்ரீராம் பிரசாத் சொன்னார்:

""நான் பொறியியல் பட்டதாரி. 12 ஆண்டுகள் ஐ.டித்துறையில் பணியாற்றினேன். திருமணத்திற்குப் பிறகு ஐ.டி வேலை விட்டுவிட்டேன். 2015-ஆம் ஆண்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது தான் கீரை மீது யாரும் கவனம் செலுத்தவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். சத்தானது மட்டுமல்ல ஆரோக்கியமானது கூட. ஆனால் விலையும் மிகக்குறைவு. இது போன்ற காரணங்கள் தான் நான் கீரையைத் தேர்வு செய்யக் காரணம். கோவையில் 2 ஏக்கரை நிலத்தை குத்தகைக்கு எடுத்து கீரையைப் பயிர் செய்தேன். ஆரம்பத்தில் 15 வகை கீரைகளைப் பயிரிட்டோம்.  

எனது ஆர்வத்தைப் பார்த்த உறவினர் ஸ்ரீராம் சுப்ரமணியம் என்பவர் என்னுடன் இணைந்து கொண்டார். அவர் ஏற்கெனவே மாட்டுப்பண்ணை வைத்திருந்தார். அவரும் நானும் இணைந்து இப்போது 150 கீரைகளை விற்பனைச் செய்து வருகிறோம். கோவையில் இரண்டு முறை கீரைக் கண்காட்சி நடத்தியுள்ளோம். அதில் 150 கீரை வகைகளைக் காட்சிபடுத்தி அதனுடைய மருத்துவக் குணத்தை மக்களிடம் சொல்லியிருக்கிறோம். மேலும் நமது முன்னோர்களின் நீண்ட ஆயுளுக்குக் கீரையின் பங்கு என்ன என்பதை வலியுறுத்தினோம். குறிப்பாக இளைஞர்களிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சொல்லும் நோக்கத்தில்  முகநூல், வாட்ஸ்அப், டிவிட்டர், இகாமர்ஸ் போன்ற தளங்களில் விளக்கி சொல்லி  மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். 

இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் எங்களை உறுப்பினராக இணைத்துக்கொண்டோம். இதன் மூலம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் தொடர்பு கிடைத்தது.அவர்களின் மூலமாக நாங்கள் விரும்பும் கீரைகளை அவர்களிடம் பயிரிட்டு வாங்கினோம். 2018-ஆம் ஆண்டு கோவையிலுள்ள சாய்பாபா காலனியில் கீரைக்கடையை ஆரம்பித்துத் தொடர்ந்து விற்பனைச் செய்து வருகிறோம்.

மதுரையிலுள்ள பட்டதாரிகளான மணிராஜ், திருப்பதியுடன் இணைந்து கீரை விற்பனை செய்வதுடன், உணவுப்பிரியர்கள் அங்கு அதிகம் என்பதால் கீரை சேர்ந்த உணவு வகைகளை ஆன்லைனில் விற்பனை செய்கிறோம். சென்னை நொளம்பூரில் எங்களுடைய கீரைக்கடை உள்ளது. இப்போது பொதுமுடக்கக் காலம் என்பதால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகைக் குறைந்துள்ளது. ஆனால் ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவ உணவான கீரைக்கு மக்கள் அதிகம் முக்கியத்துவம் தர ஆரம்பித்து இருக்கிறார்கள். 

பேப்பர், பால் போன்று இந்தக் கீரையையும் வாடிக்கையாளர்களிடம் சந்தா முறையில் கொண்டு சென்று விற்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். வாரத்தில் இத்தனை நாள்கள் எங்களுக்கு இந்த வகை கீரை வேண்டும் என்று எங்கள் இணையதளத்தில் புக் செய்துவிட்டால் அவர் ஆர்டர் செய்த கீரையை அவர்கள் வீட்டிற்கே சென்று கொடுத்து விடுவோம்.  

கிரீன்டீ போன்று எங்களிடம் கிரீனிடிப் என்ற பெயரில் கீரையுடன், உப்பு, மிளகு, சீரகம், மஞ்சள் போன்ற பொருள்களைச் சேர்ந்துப் பிளாஸ்டிக் கலக்காத சிறிய வடிவிலான பொட்டலத்தை உருவாக்கியுள்ளோம். இதனை 100 மில்லி சூடான தண்ணீரில் கலந்தால் நீங்கள் விரும்பிய சூப் ரெடி. முடக்கத்தான், தூதுவளை,  முருங்கைக்கீரை என ஆறுவகைகளில் பேக் தயார் செய்தோம். இந்த கரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை இது போன்ற கீரை வகைகள் வழங்குவதால் அதற்கு அதிக வரவேற்பு உள்ளது.'' என்கிறார் ஸ்ரீராம் பிரசாத்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com