அறுபத்து நான்கு யோகினிகள்

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், கோயில் நகரமாகவும் விளங்கும் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் அருகில் சாக்த (சக்தி) வழிபாட்டின் உயர்ந்த தத்துவ நிலையை எடுத்துக் கூறும் "அறுபத்து நான்கு யோகினிகள்
அறுபத்து நான்கு யோகினிகள்

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், கோயில் நகரமாகவும் விளங்கும் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் அருகில் சாக்த (சக்தி) வழிபாட்டின் உயர்ந்த தத்துவ நிலையை எடுத்துக் கூறும் "அறுபத்து நான்கு யோகினிகள்' கோயில் வழிபாட்டில் உள்ளது. புவனேஸ்வர் நகரத்தின் அருகில், சுமார் 10 கி.மீ. தொலைவில் ஹீராப்பூர் என்ற ஊரில், இக்கோயில் அமைந்துள்ளது. "செளசதியோகினி கோயில்' என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

திருக்கோயில் அமைப்பு:  இக்கோயில் வட்டவடிவமான அமைப்புடன் அமைந்துள்ளது. அதன் உட்புற சுவரில் 63 யோகினி பெண் தெய்வங்கள் பதிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒரு சிற்பம் மட்டும் காணப்படவில்லை. அறுபத்து நான்கு கலைகளுக்கு உரிய தெய்வங்களாக இவை போற்றி வழிபடப் பெறுகின்றன. இங்கு வழிபடப்படும் தெய்வங்கள் : சண்டிகா, தாரா, நர்மதா, யமுனை, லட்சுமி, வித்யாவாசினி, சரசுவதி, கெளமாரி, விநாயகி, மாகேசுவரி, காளி, சர்வமங்களா என்று 64 பெண் தெய்வங்களைப் பெயரிட்டு அழைப்பதை அக்னி புராணம், ஸ்கந்தபுராணம், சண்டிபுராணம் போன்ற நூல்கள் கூறுகின்றன.

மகிஷன் என்ற அசுரனுடன் போரிடுவதற்கு இந்த யோகினிகளை (பெண் தெய்வங்களை) உண்டாக்கியதாகத் தேவிபாகவதம் கூறுகிறது. கிராம தேவதை வழிபாடாக இருந்தது, பின்னர் யோகினி வழிபாடாக மாறியது என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். சில இடங்களில் 42 மற்றும் 81 யோகினி வடிவங்களுடன் வழிபாடு நடைபெற்று வருகிறது. 

ஹீராப்பூர்  கோயில் கலிங்க வம்சத்தைச் சேர்ந்த அரசி ஹீராவதி என்பவரால் கட்டப்பட்டது என்றும் கோயில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இக்கோயில் 1953-ஆம் ஆண்டு கேதார்நாத் மகாபாத்ரா என்பவரால் தனது தொல்லியல் கள ஆய்வின்போது கண்டறியப்பட்டதாகும். இக்கோயிலுக்கு மேலே கூரை கிடையாது. 

சூரிய ஒளி நன்றாக படுமாறு அமைக்கப்பட்டிருக்கும். தமிழகத்திலும் மேற்கூரை இல்லாமல் இருக்கும் உறையூர் வெக்காளி அம்மன் கோயில் போன்ற பல கோயில்கள் உள்ளன. ஹீராப்பூர் கோயிலில் நுழைவு வாயிலில் துவாரபாலகர் வடிவங்களும், வெளிச்சுவரில் ஒன்பது காத்யாயினி வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் மையப்பகுதியில் உள்ள மண்டபம் சண்டி மண்டபம் என அழைக்கப்படுகிறது. இங்குப் பைரவரின் வடிவங்கள் வழிபட பெறுவதைக் காணலாம்.

இதரக்கோயில்கள்:  இந்தியாவின் வட பகுதியில் உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் யோகினி கோயில்கள் காணப்படுகின்றன. ஒடிசா மாநிலத்தில் ராணிப்பூர் மற்றும் கஜுராஹோ, கொனார்க், ஜபல்பூர் அருகில் இருக்கும் மிடெளலி, லலித்பூர் அருகில் (ம.பி.) துதாஹி, வாராணாசி (காசி) போன்ற ஊர்களிலும் மோகினி வழிபாடு சிறந்திருந்தது. ஜபல்பூர் அருகில் உள்ள பேடேகாட் என்ற ஊரில் உள்ள யோகினி கோயில் மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. யோகினி பெண் தெய்வங்களின் பெயர்கள் அவற்றின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளதும் சிறப்பாகும்.

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள திருமீயச்சூர் திருக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது. பக்தர்களின் துன்பங்களைப் போக்கும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான தலமும் இதுதான். இத்தலத்தில் அம்பாள் ஸ்ரீசக்ர பீடத்தில் இரு கரங்களுடன் அமர்ந்து அருளாட்சி செய்கிறார். இத்தோத்திரத்தில் தேவியை 64 வகையான உபசாரங்களால் பூஜிக்கப்படுபவள், 64 கலைகளின் உருவமாகத் திகழ்பவள், 64 கோடி யோகினி கணங்களால் வழிபடப் பெறுபவள் என்று போற்றுகிறது. "சதுஷ் ஷஷ்டி கலாமயி'  
-மகாசதுஷ்கோடி யோகினி கணசேவிதா:
எனப்போற்றுகிறது. எனவே ஹீராப்பூர் கோயிலில் வழிபடும் 64 பெண் தெய்வங்கள் 64 வகையான கலைகளின் அம்சமாகத் திகழ்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

பொதுவாக சப்த (ஏழு) மாதர் வழிபாடு சிறந்திருந்ததற்கான சான்றுகள் பல உள்ளன. இவ்வழிபாடு அஷ்ட மாதர் (எட்டுப் பெண் தெய்வங்கள்) வழிபாடாக வளர்ந்து, பின்னர் 64 யோகினி வழிபாடாக மலர்ந்தது என அறிஞர்கள் கருதுகின்றனர்.

இதற்கு சான்றாக, தஞ்சை அருகே உள்ள திருவையாறு கோயிலில் ஒன்பது பிடாரிகள் என்ற இறைவடிவம் காணப்படுகிறது. 

நடுவில் சிவன் அமர்ந்திருக்க இருபுறமும் நான்கு – நான்கு தேவியர்களாக எட்டு தேவியர் காணப்படுகின்றனர். எட்டு தேவியர் யார் - யார் என்பதை அக்னி புராணம், பிராமி, மகேசுவரி, கெளமாரி, வைஷ்ணவி, ஐந்திரி (இந்திராணி) சாமுண்டா, மகாலட்சுமி, வராகி என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

காஞ்சிபுரம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் யோகினி வழிபாட்டிற்கு என தனிக்கோயில் இருந்தது என்பதை அறியமுடிகிறது. காலப்போக்கில் இக்கோயில் சிதைந்து, இதிலிருந்த பல தெய்வ வடிவங்கள் அருங்காட்சியகங்கள் பலவற்றில் பாதுகாக்கப்படுகின்றன்.

புலவர் ஒட்டக்கூத்தர் பெருமான் இயற்றிய தக்கையாகப்பரணி இலக்கியத்திலும் யோகினி வழிபாடு குறிக்கப்படுகிறது. 

எனவே தமிழகத்தில் யோகினி வழிபாடு முக்கிய இடம் பெற்று விளங்கியதையும் அறிய முடிகிறது.

ஒடிசா மாநிலத்தில், ஹீராப்பூரில் உள்ள யோகினி கோயிலில் உள்ள அனைத்து இறை வடிவங்களும் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகின்றன. ஆனால் என்ன காரணத்தாலோ சிற்பங்களின் முகம், கை, கால் ஆகியவை சிதைக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் காணப்படுகின்றன. எனினும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

கி.பி. 9-ம் நூற்றாண்டிலிருந்து 64 யோகினிகள் வழிபாடு சிறப்புற்று இருந்ததற்கு, ஒடிசா - ஹீராப்பூர் யோகினி கோயில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com